You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன கப்பல் ஆகஸ்ட் 16இல் வர இலங்கை போட்ட நிபந்தனைகள் - இந்திய நிலைப்பாடு என்ன?
சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை சனிக்கிழமை அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்த கப்பலை நிறுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் இந்தியா தீவிர அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டிய நிலையில், நிபந்தனைகளுக்கு உள்பட்டு சீன கப்பல் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
2007ஆம் ஆண்டில் இந்த யுவான் வாங் 5 கப்பல் சேவையை தொடங்கியபோது, அது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எடை 11 ஆயிரம் டன் எடையாகும். எரிபொருள் நிறுத்தவும், பராமரிப்புக்காகவும் அந்த கப்பல் இலங்கைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
முதலில் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் தேதி வரை 'யுவான் வாங் - 5' கப்பல் ஹம்பாந்தோட்டையில் நிறுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சீன கப்பல் இலங்கை வருவதற்கு இந்தியா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை, பாதுகாப்புப்படை அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சீனாவின் செயற்கைக்கோள் கப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவலாம் என்ற தங்களுடைய கவலையை பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும்வரை தங்களுடைய கடல் பகுதிக்குள் வர வேண்டாம் என்று சீன கப்பலை இலங்கை கேட்டுக் கொண்டது. ஆனால், இந்தியாவின் அழுத்தத்தை அர்த்தமற்றது என்று கூறி சீன வெளியுறவுத்துறை எதிர்வினையாற்றியது. மேலும், யுவான் வாங் 5 கப்பலின் பயணத்தை தொடர்ந்து இலங்கை நோக்கிச் செல்லவும் சீனா நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், திட்டமிட்ட வருகை அட்டவணையை விட ஐந்து நாட்கள் தாமதமாக, ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று யுவான் வாங் சீன கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை வெளியுறவுத்துறை சீன கப்பல் வருகைக்கு நிபந்தனைகளுக்கு உள்பட்ட அனுமதி வழங்கியுள்ளதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன் விவரம்:
சீன அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலுக்கு வழக்கமாக அமலில் உள்ள நடைமுறைப்படியே ராஜீய அனுமதி வழங்கும் கோரிக்கை ஏற்கப்பட்டது. அது தொடர்பாக பாதுகாப்புத்துறை, கடற்படை, இலங்கை தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் ஆகிய துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டு அவற்றின் ஒப்புதல் கேட்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை போட்ட நிபந்தனைகள்
குறிப்பிட்ட நாட்களுக்கு எரிபொருள் நிரப்பும் பயன்பாட்டுக்காக கப்பல் வருகை தருவது தொடர்பாக பாதுகாப்புத்துறையிடம் இருந்தும் அலைவரிசை இடைமறிப்பற்ற மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் அல்லாத தேவைக்காக கப்பல் வருகை தருவது தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்புத்துறை ஆணையத்திடம் இருந்தும் பதில்கள் பெறப்பட்டன. அவை குறித்து சீன தூதரகத்துக்கு இலங்கை வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது.
மேலும், சீன கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும்போது அதற்கு சில நிபந்தனைகளை விதிக்கும்படி இலங்கை பாதுகாப்புத்துறை கூறியது. அதன்படி, இலங்கை பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கப்பல் இருக்கும்போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்; இலங்கை கடல் பகுதிக்குள் எவ்வித அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளும் செய்யக் கூடாது என்று இலங்கை பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த விவகாரத்தில் இலங்கை பாதுகாப்புத்துறை எழுப்பிய சில கவலைகள், சீன தூதரகத்திடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை வெளியுறவுத்துறை அனுப்பிய குறிப்புரை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மறுஆலோசனை செய்யப்படும்வரை சீன கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் திட்டத்தை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன் பிறகு மிக உயரிய ராஜீய அளவில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை இலங்கை அரசாங்கம் நடத்தியது. நட்புறவு, பரஸ்பர நம்பிக்கை, உறுதியான பேச்சுவார்த்தை, சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினரின் நலன்கள், நாடுகளின் சமமான இறையாண்மை கோட்பாடு என அனைத்து அம்சங்களின்படியும் பிரச்னையை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சீன தரப்பிடம் கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன.
அதற்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி சீன தூதரகம் அளித்த பதிலில், யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டைக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி வர திட்டமிட்டுள்ளதாகவும், புதிய தேதியில் அதாவது ஆகஸ்ட் 16 முதல் 22ஆம் தேதிவரை எரிபொருள் நிரப்பும் தேவைக்காக அந்த கப்பல் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எல்லா விஷயங்களையும் கவனத்தில் கொண்டு, சீன கப்பல் ஆகஸ்ட் 16 முதல் 22வரை ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு வெளியுறவுத்துறை ஆகஸ்ட் 13ஆம் தேதி அனுமதி வழங்கியிருக்கிறது.
அனைத்து நாடுகளுடன் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்த இலங்கை வெளியுறவுத்துறை விரும்புகிறது. அண்டை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமது சர்வதேச கடமைகளுக்கு ஏதுவாக அனைத்து நாடுகளின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பது இலங்கையின் நோக்கமாகும்.
குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் நாடு கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், இலங்கை மக்களின் நலனை உறுதிப்படுத்தும் பல உள்நாட்டு செயல்முறைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் அனைத்து நாடுகளின் ஆதரவு, ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை இலங்கை அரசாங்கம் ஆழமாகப் பாராட்டுகிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
இந்தியா நிலை என்ன?
முன்னதாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு யுவான் வாங் 5 கப்பலின் திட்டமிட்ட பயணத்தை நிறுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்ததாக சீனா குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இதுபோன்ற விஷயங்களில் பாதுகாப்பு கவலைகளின் அடிப்படையிலேயே இந்தியா முடிவுகளை எடுக்கும்," என்று வலியுறுத்தினார்.
"இலங்கை இறையாண்மை மிக்க நாடு. அது தமது சொந்த முடிவுகளை சுயமாக எடுக்கும். அந்நாட்டுக்கு இந்தியா அழுத்தம் தருவதாக வெளிவரும் கூற்றை நிராகரிக்கிறோம். இலங்கைக்கு அசாதாரமான வகையில் 3.8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக நிதியுதவி செய்துள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் சுயமாக முடிவெடுக்கக் கூடிய உரிமைகள் உண்டு. பரஸ்பர மரியாதை, நலன்கள், உணர்வுகள், எல்லை பாதுகாப்பு போன்றவை மீது அந்தந்த நாடுகள் அவற்றின் வளர்ச்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கும். அவற்றை உள்ளடக்கிய நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களுக்கென பிரத்யேகமாக கொண்டிருக்கும். அந்த வகையில் இந்தியாவும் இந்த விஷயத்தில் ஒரு நிலையைக் கடைப்பிடிக்கிறது," என்றும் அரிந்தம் பக்ஷி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்