You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? - கள நிலவரம்
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து...
இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு போராட்டக்காரர்களின் பார்வை அதிபரின் பொறுப்புகளை ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க மீது திரும்பியிருக்கிறது.
"கோட்டாபய ராஜபக்ஷவைவிட ரணில் விக்கிரமசிங்க மிகவும் கவனமாக உத்திகளை வகுத்துச் செயல்படக்கூடியவர் என்பதால் அதற்கேற்றபடி போராட்டத்தை நாங்கள் நடத்த வேண்டியிருக்கிறது" என்கிறார் காலி முகத்திடல் போராட்டத்தில் முன்வரிசையில் நிற்கும் ஒருவர்.
புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குரல்களை முன்பை விட அதிகமாக காலி முகத்திடல் பகுதியில் கேட்க முடிகிறது.
'ரணில் கோ ஹோம்' என்ற ஆங்கில வாசகம் கொண்ட பட்டைகளை தலையில் கட்டிக்கொண்டு பலர் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். 'கோட்டா கோ ஹோம்' என்ற முழக்கம் குறைவாகவே ஒலிக்கிறது.
ஆனால் ரணிலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடையுமா, இல்லை படிப்படியாகத் தணிவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
'கோட்டாபய பதவியில் இருந்து வெளியேறிவிட்டார். இனி ரணில்தான் எங்களது இலக்காக இருப்பார்' என்றார் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கும் திவாகரன்.
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்தபடி தனது பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். அவருடைய பொறுப்புகளை தற்காலிகமாக ரணில் விக்கிரமசிங்க கவனித்து வருகிறார். இப்போது கோட்டாபய பதவியின் எஞ்சிய காலத்துக்கு புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வரும் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவும் அதிபருக்கான போட்டியில் இருப்பதால், ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக அதிபராவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருக்கிறது. அவர் அதிபராக வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.
கோட்டாபயவின் எஸ்.எல்.பி.பி. கட்சி ரணிலுக்கு ஆதரவளிப்பதால் அவருக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர் நிக்சன் கூறுகிறார்.
இப்படியொரு சூழலில்தான் போராட்டக்காரர்கள் ரணிலுக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறார்கள்.
"கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ரணில்தான் வசதி செய்து கொடுத்தார் என்ற வலுவான சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது" என்று கூறுகிறார் திவாகரன்.
எனினும் ரணிலுக்கு தீவிர எதிர்ப்பு இல்லையா?
கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேற வைத்திருப்பதும், பதவியில் இருந்து விலகச் செய்திருப்பதும் தங்களுக்கு 99 சதவிகித வெற்றி என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.
"ரணிலை எதிர்த்துப் போராடுவோம். அதே நேரத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை சிறைக்கு அனுப்புமாறு வலியுறுத்துவோம்" என்கிறார் காலி முகத்திடல் மேடையில் முழக்கங்களை எழுப்பும் ஒரு பெண்.
ஆயினும் போராட்டக்காரர்கள் தங்கள் வசமிருந்த அரசுக் கட்டடங்களை திருப்பி ஒப்படைத்த பிறகும், கோட்டாபய பதவியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகும் போராட்டத்தின் தன்மை சற்று மாறியிருப்பதையே களத்தில் காண முடிகிறது. போராட்டமானது இப்போது பெரும்பாலும் கொண்டாட்டமாகக் காணப்படுகிறது.
ரணிலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் 'தீவிரமான எதிர்ப்பு எண்ணம்' இல்லாததும் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று போராட்டக்காரர்களில் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
"நாட்டில் இப்போது அடிப்படையானது பொருளாதார நெருக்கடி. இதை இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்திருக்கிறார். அதனால் மக்களில் ஒரு பிரிவினரும் நாடாளுமன்றத்தினரும் அவருக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கிறது" என்கிறார் இலங்கை அரசியல் நிபுணர் நிக்சன்.
ரணிலுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தினாலும், அவரை முழுமையாக ஏற்க முடியாது என்றாலும் மக்களின் மனநிலை எப்படியிருக்கிறதோ அதன்படியே போராட்டத்தை நடத்தி வேண்டியிருக்கும் என்று பிபிசியிடம் பேசிய போராட்டக்காரர்கள் சிலர் கூறினார்கள்.
"ரணிலின் கட்சிக்கு அவரைத் தவிர நாடாளுமன்றத்தில் வேறு உறுப்பினர் இல்லை. சூழ்நிலையப் பயன்படுத்தி மிகக் கவனமாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்தி அவர் அதிபர் பதவியை நோக்கி வந்திருக்கிறார். கோட்டாபயவுக்கு ஆதரவாகவும் இருந்திருக்கிறார். ஆனாலும் அவரால் நாட்டை மீட்க முடியும் என்று சிலர் நம்புகிறார்கள்" என்கிறார் ஒரு போராட்டக்காரர்.
"வெளிநாடுகளையும், சர்வதேச செலாவணி நிதியம் போன்ற அமைப்புகளையும் அணுகி நிதியுதவி பெறக்கூடிய திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாக ஒரு பொதுவான கருத்து இருக்கிறது" என்கிறார் அரசியல் நிபுணர் நிக்சன்.
இதேபோல் "எல்லோரையும் பதவியில் இருந்து அகற்றிக் கொண்டே இருக்க முடியாது என்ற எண்ணம் எங்களில் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் ஒரு போராட்டக்காரர்.
காலி முகத்திடல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நூறாவது நாளை எட்டப்போகிறது. அதில் பெரிய அளவிலான கொண்டாட்டங்களை நடத்துவதற்குப் போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். இது போராட்டக்காரர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை உணர்த்துவதாக இருக்கக்கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்