You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வரலாறு: உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' நிகழ்வு
இலங்கையில் 2009ஆம் ஆண்டு, சரியாக இதே வாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆம், பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லொணா இழப்புகளைக் கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது. நவீன கால ஆசிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் இதுதான்.
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போர், 2009-ஆம் ஆண்டு மே 18 அன்று முடிவுக்கு வந்தது. 26 ஆண்டுகளுக்கு நடந்த இந்த உள்நாட்டுப் போரில், எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
போர் நடந்துகொண்டிருந்த போதும் போர் முடிந்த பிறகும் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு வழிகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றார்கள்.
இலங்கை உள்நாட்டுப் போர், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. போர் முடிந்து ஒரு தசாப்தமே முடிந்திருந்த போதிலும், அது ஏற்படுத்திய காயங்களை உலகின் பல்வேறு மூளைகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய சேதத்தையும் வடுக்களையும் உண்டாக்கிய இலங்கை உள்நாட்டுப் போர் நடக்கக் காரணம் என்ன?
சிங்கள மொழி மட்டுமே
இலங்கையில் பெரும்பான்மையாக இருப்பது சிங்களவர்கள். அங்குப் பூர்விகமாக வாழும் தமிழர்களும் இந்தியாவிலிருந்து சென்ற மலையகத் தமிழர்களும் சிறுபான்மையினர். 19-ஆம் நூற்றாண்டில் தேயிலைத் தோட்ட வேலைக்காக, லட்சக்கணக்கான தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்டனர்.
பிரிட்டன் ஆட்சியின்போது ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக இருந்தபோது, தமிழர்கள் பெரும்பாலும் அரசு வேலைகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, குடியுரிமை தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றியது இலங்கை. இதனால் லட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். வாக்குரிமையை இழந்தார்கள்.
சிங்கள தேசியவாத அலையில் வென்ற பண்டார நாயக, சிங்களம் மட்டுமே ஒரே தேசிய மொழி என்னும் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழர்கள், அரசுப் பணிகளில் இருந்து விலக நேர்ந்தது. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவர் எனக் கூறி கல்வி தரப்படுத்தல் என்னும் சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது. இனரீதியாக, இது தங்கள் கல்வியுரிமையைப் பறிக்கும் செயலாக தமிழ் மக்கள் பார்த்தார்கள்.
நிலமற்ற சிங்கள மக்களுக்கு நிலம் அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பல பகுதிகளில் சிங்கள மக்களை இலங்கை அரசு குடியமர்த்தியது. தங்கள் மரபுவழி தாயக நிலப்பரப்பில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதாக பல தமிழர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இலங்கை அரசியலில் சிங்கள தேசியவாதம் முக்கியம் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. அதேநேரம், இலங்கை அரசியலில் மிதவாத தமிழ் தலைவர்களும் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தினார்கள்.
இலங்கை விடுதலை அடைவதற்கு முன்னரே, செல்வநாயகம் உட்பட பலர் தமிழர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்க அனைத்து சிலோன் தமிழ் காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கி நடத்தினர். சுதந்திரம் பெற்ற பின், செல்வநாயகம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கினார். அவரது கட்சியின் தமிழ்தேசிய கொள்கைகள் தமிழர்களைக் கவர்ந்தது. செல்வநாயகம் கட்சி, இலங்கை அரசின் சிங்கள மொழி மட்டும் சட்டத்தை எதிர்த்து சத்தியாகிரக போராட்டத்தை மேற்கொண்டது.
அமிர்தலிங்கம் உள்ளிட்ட மிதவாத தலைவர்கள் ஒருங்கிணைத்த ஒத்துழையாமை போராட்டங்கள் மற்றும் அரசியல் அதிகாரம் வேண்டி நடத்திய ஆயுதமற்ற போராட்டங்கள் 1960-களில் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்றிருந்தன. ஒரு கட்டத்தில் சில தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழர் ஐக்கிய முன்னணி உருவானது. ஏற்கெனவே தமிழர்களுக்கு தனிநாடு கோரும் பிரசாரம் தமிழர்களிடையே வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மிதவாத தலைவர்கள் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் எனக் கோரத் தொடங்கினார்கள்.
"கூட்டாட்சி முறையில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை இழந்துவிட்டனர். இதனால், கூட்டாட்சி முறையிலான அரசியல் தீர்வு கோரிக்கையைக் கைவிடுகிறோம்," என்று தந்தை செல்வா என அறியப்படும் செல்வநாயகம் அறிவித்தார். இதை அறிவித்த அடுத்த ஆண்டே அவர் மறைந்தார்.
அதற்குப் பிறகு மிதவாதப் போராட்டத்தைவிட, ஆயுதம் ஏந்திப் போராடுவதையே இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினார்கள்.
உள்நாட்டுப் போர் தொடங்கியது ஏன்?
1970களின் மத்தியில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் இலங்கையில் வலுப்பெறத் தொடங்கின. தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் பதற்றம் நிலவியபோது, தமிமீழ விடுதலை புலிகள் உருவானது. தேர்தல் அரசியல் மூலம் தீர்வு ஏற்படாது என்று விடுதலை புலிகள் அமைப்பு உறுதியாக நம்பியது.
விடுதலை புலிகள் இயக்கம், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயலும் மிதவாத தலைவர்களைத் தாக்கத் தொடங்கியது. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என ஆயுதம் ஏந்திப் போராடும் பல குழுக்கள் 1975-க்குப் பின் உருவாகின.
இக்காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் வெவ்வேறு ஈழப் போராட்டக் குழுக்களுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு கிடைத்தது.
இலங்கை உள்நாட்டுப் போர் தொடங்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணமாக இருந்தது கருப்பு ஜூலை சம்பவம். விடுதலை புலிகள் அமைப்பு, 1983-ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று, முதல்முறையாக ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அதில் 13 சிங்கள ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்.
அடுத்த சில சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள், நிர்வாணமாக்கப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சிறையில் 53 தமிழ் கைதிகளை சிங்கள கைதிகள் கொன்றார்கள். லட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். பலர் நாட்டை விட்டே வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்தார்கள்.
அந்த வகையில், 'கருப்பு ஜூலை நிகழ்வு' நவீன கால ஆசிய வரலாற்றின் உக்கிரமான போருக்கு உரம் போட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்