You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜபக்ஷ குடும்பம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கும் அநுர திஸாநாயக்க: இலங்கை பிரதமர் அலுவலகம் மறுப்பு
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் பெரிய அளவிலான நிதி மோசடிகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய மக்கள் விடுதலை முன்னணியின் ஊழல் எதிர்ப்பு குரல், இந்த குற்றங்களில் ஈடுபட்டதாக சில பெயர்களையும் வெளியிட்டது.
கொழும்பில் நேற்று (2022 மே 3ம் தேதி) விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, இந்த தகவல்களை மக்கள் விடுதலை முன்ணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வெளியிட்டார்.
ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த சிலரது பெயர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில் இடம் பெற்றுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், இதற்காக அநுர குமார திஸாநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் ஊடாக இடம்பெற்றதாக கூறப்பட்ட நிதி மற்றும் ஏனைய மோசடிகள் குறித்த தகவல்களை அநுர குமார திஸாநாயக்க வெளிப்படுத்தியிருந்தார்.
அமெரிக்காவில் கொள்ளை
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசிங்க தொடர்பிலான வழக்கொன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு மே மாதத்தில் வழங்கப்படவுள்ளதாக கூறிய அவர், அது தொடர்பிலான விரிவான அறிக்கையை அநுர குமார திஸாநாயக்க வெளியிட்டார்.
அமெரிக்காவில் கொள்வனவு ஒன்றிற்காக இலங்கை அரசாங்கம் 6.2 மில்லியன் ஒதுக்கீடு செய்ததுடன், அதில் 3.3 மில்லியன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
55 வீதம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
இவ்வாறான தொகையொன்றை தான் பெற்றுக் கொண்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஜாலிய விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஜாலிய விக்ரமசிங்க என்பவர், ராஜபக்ஷ குடும்பத்தின் உறுப்பினர் என அநுர குமார திஸாநாயக்க கூறுகின்றார்.
பண்டோரா பேப்பர்ஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக, சுமார் 160 மில்லியன் டாலர் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருந்தன.
திருநடேசன் மற்றும் நிரூபமா குடும்பத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளதாக பண்டோரா பேப்பர்ஸ் கூறியது.
திருநடேசனின் பெயரிலேயே பஷில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் இருப்பதாக அநுர குமார திஸாநாயக்க குறிப்பிடுகிறார்.
நீர் வழங்கல் அமைச்சக ஊழல்
''2014ம் ஆண்டு கிங் நில்வலா என்ற திட்டத்துக்காக நீர் வழங்கல் அமைச்சு சீன நிறுவனம் ஒன்றுக்கு அவசரமாக பணம் வழங்கியது. இந்த சீன நிறுவனம் பல முறையில், மொத்தம் 5 மில்லியன் டாலர் பணத்தை, ரூத் இன்டர்நெஷனல் என்ற நிறுவனத்தின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளது. இந்த நிறுவனம் திருநடேசனுக்கு சொந்தமான நிறுவனம். நீர் வழங்கல் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவி வகித்தார். இந்த நிறுவனம் கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள இலங்கைக்கு சொந்தமான வங்கி ஒன்றில் பணம் வைப்பில் இட்டுள்ளது. இலங்கையிலுள்ள வங்கியிலிருந்து பெற்றுக்கொண்ட பணத்தின் ஊடாக மல்வானை பகுதியிலுள்ள காணியொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது" என அவர் கூறுகிறார்.
ஏர் பஸ் கொள்வனவு ஊழல்
''பிரான்ஸ் ஏர் பஸ் நிறுவனம் பல நாடுகளுக்கு ஏர் பஸ் கொள்வனவு செய்வதற்காக அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டது. நாங்களும் ஏர் பஸ் கொள்வனவுக்காக உடன்படிக்கையொன்று கைச்சாத்திட்டிருந்தோம். இந்த ஏர் பஸ் கொள்வனவுக்கான உடன்படிக்கை தொடர்பிலான ஏர் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டம் பத்தரமுல்லை பகுதியிலுள்ள சமல் ராஜபக்ஷவின் வீட்டிலேயே நடத்தப்பட்டது.
அவரது மகன் அந்த பணிப்பாளர் சபையின் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். முழு கொள்வனவு தொகையானது, 2.2 பில்லியன் டாலர் என கணிக்கப்பட்டுள்ளது. ஏ320 விமானம் விநியோகிக்கப்பட்டதன் பின்னர், ஒரு மில்லியன் டாலர் வீதமும், ஏ350 விமானம் விநியோகிக்கப்பட்டதன் பின்னர் 1.16 மில்லியன் டாலர் வீதமும், குத்தகை அடிப்படையில் எடுக்கப்படும் 4 விமானங்களுக்காக 4 லட்சம் டாலர் வீதமும் கப்பம் பெறப்பட்டுள்ளது. மொத்த கப்பத் தொகையானது 16.18 மில்லியன் டாலராகும்" என அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், பிரதமர் அலுவலகத்தின் பிரதானியுமான யோஷித்த ராஜபக்ஷ முறைகேடான விதத்தில் பல காணிகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யோஷித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கூறப்படும் காணிகளின் ஆவணங்களையும் அநுர குமார திஸாநாயக்க வெளியிட்டார்.
"சர்வதேச அளவில் ஏதாவது ஊழல்கள் வெளியாகும் சந்தர்ப்பங்களில், எமது நாட்டின் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
பண்டோரா பேப்பர்ஸ், பனமா பேப்பர்ஸ், லண்டன் உச்ச நீதிமன்றம், ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள், அமெரிக்காவின் தூதரக கொள்வனவு, அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரி ஒருவரின் கைது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் இலங்கையின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன," என்று குறிப்பிட்ட அநுர குமார திஸாநாயக்க. இந்த தகவல்கள் ஊழலின் ஒரு பகுதி மாத்திரமே என்றும் எதிர்காலத்தில் அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகத்தின் பதில்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், பிரதமர் அலுவலகத்தின் பிரதானியுமான யோஷித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமான உடைமைகள் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றம்சாட்டிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.
இது உண்மைக்கு புறம்பானது என்பதுடன், மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படும் காணிகள் குறித்த தகவல்கள் மற்றும் காணி ஆவண இலக்கங்களை அநுர குமார திஸாநாயக்க நேற்று வெளியிட்டார்.
யோஷித்த ராஜபக்ஷவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் போலி தகவல்கள் முன்வைக்கப்பட்டமையினால், அநுர குமார திஸாநாயக்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்