இலங்கையுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிய சீனா - என்ன உதவிகள் கிடைக்கும்?

இலங்கையுடன் மீண்டும் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது சீனா.

இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், பல நாடுகள் உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. இதன்படி, இந்தியா மற்றும் சீனா இலங்கைக்கு பல உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், சில காலமாகவே இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு அதிகளவில் கிடைத்து வருகின்ற நிலையில், கடந்த சில தினங்களாக சீனா இலங்கையின் முக்கிய தரப்பினரை சந்தித்து, தமது உதவிகள் குறித்து கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதை காண முடிகின்றது.

சீன பிரதமர், இலங்கை பிரதமருடன் அவசர கலந்துரையாடல்

சீன பிரதமர் லி கெகியாங்கிற்கும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) இடம்பெற்றதாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை உறுதி செய்வதற்கு சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என சீன பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உணர்ந்துள்ளதாகவும், இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இயலும் அளவு உதவி வழங்குவதாகவும் சீன பிரதமர், இலங்கை பிரதமரிடம் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை எதிர்நோக்கியுள்ள அவசர நிதி பிரச்சினைகள் சிலவற்றை தீர்ப்பதற்கு சீனா, இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் என சீன பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் உடனடி கலந்துரையாடல்களை நடத்துதல், இலங்கையின் வர்த்தக தட்டுப்பாட்டை குறைத்தல், இலங்கைக்கு அதிக அளவிலான சீன சுற்றுலா பயணிகளை அனுப்புதல் தொடர்பில் இரு நாட்டு பிரதமர்களும் தங்கள் கலந்துரையாடலின்போது பேசியுள்ளனர்.

''இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை எங்களால் உணர முடிகிறது. அந்த கஷ்டங்களை தவிர்ப்பதற்கு நாம் இணைந்து செயற்படுவோம்" என சீன பிரதமர் கூறியுள்ளார்.

சீன தூதுவர், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை, கொழும்பிலுள்ள சீன தூதுவர் அவசரமாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக சீன தூதரகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, 7 சுயாதீன நடாளுமன்ற உறுப்பினர்கள், சீன தூதுவரை சந்தித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த தமது நிலைப்பாடுகளை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துக்கொண்டதாக சீன தூதுவர் அலுவலகம் தெரிவிக்கிறது.

சீனாவின் உதவிகள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குமாறு, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரெலிய ரத்தன தேரர், வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, வீரசுமன வீரசிங்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பொருளியல் நிபுணர் கருத்து

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், சீனா ஒரு இடைவெளிக்கு பின்னர், மீண்டும் இலங்கையுடனான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளமையானது, இலங்கை மக்களை சமாளித்து, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆளும் தரப்பின் முயற்சி என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

''அரசியலில் இருந்து அவர்களுக்கு வெளியில் செல்ல விரும்பம் இல்லை. கடன்களை பெற்று, தட்டுப்பாடுகளை நீக்கி விட்டால், ஆட்கள் வீடுகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கின்றார்கள். நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடி மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றை கடனை பெற்று தீர்த்து விட்டால், சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக்கொள்ளும் கடனை வைத்து சமாளிக்க முடியும் என நினைக்கின்றார்கள். நாட்டு மக்கள் இவர்கள் வீட்டுக்கு போக வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் இவர்கள் வீட்டிற்கு செல்ல தயார் இல்லை. அதனால், தான் சீனாவை கூப்பிட்டு பேசியிருக்கின்றார்கள். நீங்கள் எங்களுக்கு உதவி வழங்குங்கள், நாங்கள் உங்களுக்கு ஏதாவது தருகின்றோம் என்று. வெளிப்படையே அது தான்" என பேராசிரியர் கூறுகின்றார்.

இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள கடன் இலங்கைக்கு போதுமானதாக இல்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவின் கடனை வைத்துக்கொண்டு ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடியாது என கூறிய அவர், அதனாலேயே, சீனாவிடமும் பணத்தை கோரி நிற்கின்றார்கள் என தெரிவித்தார்.

சீனாவிடம் செல்லும் போது, ஆட்சியாளர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நன்மைகள் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

பதவி விலகுவாரா இலங்கை பிரதமர்?

''பதவி விலகும் நோக்கம் இவர்களுக்கு கிடையாது. அதனால், சீனாவிடம் செல்வது இவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை தருகின்றோம் என கூறினால், சீனா கூடுதலாக பணம் வழங்கும்" என எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் சீனாவிடம் செல்வது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமா என பிபிசி தமிழ், அவரிடம் வினவியது.

''சீனா வழங்கும் உதவியானது, கட்டிடம் கட்டுவதற்கு போன்ற திட்டங்களுக்கு அல்ல. எனினும், சீனா இலவசமாக இந்த நிதியை வழங்காது. இலங்கையினால் குறிப்பிட்ட தேதியில் கடனை செலுத்த முடியவில்லை என்றால், இந்தியா கடனை செலுத்த சிறிது காலம் வழங்கும். ஆனால், சீனா அப்படி இல்லை. காசு கொடுக்க முடியவில்லையா, சொத்தை எழுதி தருமாறு சீனா கேட்கும். இவங்கட திட்டம் இது தான். சீனா இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு நன்கொடையாக எதையும் கொடுக்கவில்லை. அரிசி ஒரு தொகையை மாத்திரமே வழங்கியுள்ளனர். அவ்வளவு தான். மற்றும் படி உதவிகள் எதுவும் கிடையாது" என எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

சீனாவிடம் உதவிகளை கேட்கின்ற இந்த தருணத்தில், இந்தியாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதா? என அவரிடம் நாம் வினவினோம்.

இது ஒரு நெருக்கடியான காலக் கட்டம் என்பதனால், அவ்வாறு பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என அவர் பதிலளித்தார்.

நாடு வழமையாக இருக்கும் சந்தர்ப்பத்தில், இந்தியாவிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொண்டு, திடீரென அந்த சந்தர்ப்பத்தில் சீனாவிடம் சென்றிருந்தால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என அவர் கூறுகின்றார்.

எனினும், இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.கணேஷமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :