இலங்கையில் மருத்துவ நெருக்கடி: “மருந்து வாங்க வருவோர், மரணச் சான்றிதழ் வாங்கும் நிலை" - களத்தில் பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டின் பொது சுகாதாரத் துறையையும் கடுமையாக பாதித்திருக்கிறது. அரசின் கவனம் இந்தத் திசையில் திரும்பாவிட்டால், இன்னும் இரு வாரங்களில் நாடு மிக மோசமான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளுமென அரச மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏப்ரல் மாத இறுதியில், மத்திய மாகாணத்தில் உள்ள பேராதனை வைத்தியசாலையில் போதுமான மருந்துகள் இல்லாததால், அறுவை சிகிச்சைகளைத் தள்ளிப்போட வேண்டியிருக்குமென அந்த மருத்துவமனையின் நிர்வாகிகள் அறிவித்தனர். அந்த மாகாணத்தில் சுமார் 24 லட்சம் பேர் அந்த மருத்துவமனையையே சிகிச்சைக்காக சார்ந்திருக்கும் நிலையில், அந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், பேராதனை மருத்துவமனையில் மட்டுமல்லாமல், விரைவிலேயே இந்த நிலை எல்லா மருத்துவமனைகளுக்கும் ஏற்படலாம் என அரச மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதோடு, ஆங்காங்கே போராட்டங்களையும் இவர்கள் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவர்கள் மட்டுமல்லாது, மருத்துவத்துறையின் பிற பணியாளர்களும் பிரச்னையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். காயங்களைக் கழுவும் ஸ்பிரிட்டிற்குக்கூட தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மருத்துவப் பணியாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தனர்.
"பற்றாக்குறையினால் பல நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். சில நோயாளிகளுக்கு அவர்களது நோயின் அடிப்படையில் உணவு கொடுக்க முடியவில்லை. சீனி, பால்மா, தேயிலை போன்றவையும் கிடைப்பதில்லை. டீஸல் தட்டுப்பாட்டினால் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் சென்று வர முடியவில்லை. சோதனைகள் சரியான முறையில் செய்யப்படுவதில்லை. எங்களுக்குத் தேவையான கருவிகள், உபகரணங்கள் தட்டுப்பாடாக இருக்கின்றன. நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான மருந்து கிடைப்பதில்லை. ஏன், புண்களைக் கழுவுவதற்கான சர்ஜிகல் ஸ்பிரிட்கூட கிடைக்கவில்லை." என்கிறார் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரான யமுனா கிருஷாந்தி.
ஸ்கேன் போன்ற பரிசோதனைகளைச் செய்வதற்கான சூழல்கூட தற்போது இல்லையென்கிறார் ஒரு மருத்துவமனைப் பணியாளர்.
"தற்போது நாட்டில் நிலவும் சூழலால் சுகாதார நிலை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, எக்ஸ் ரே, சி.டி. ஸ்கேன் செய்வதற்கான வசதிகளில் குறைவு ஏற்பட்டிருப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இப்படி பற்றாக்குறை இருக்கிறது என்பதை நாங்கள் முன்பே சுகாதாரத் துறைக்குத் தெரிவித்தோம். மருத்துவர்களும் தெரிவித்தார்கள். சில பொருட்களை பட்டியலிட்டு, இந்தப் பொருட்களுக்கெல்லாம் பற்றாக்குறை வரும் என சொன்னோம். தேவையான பொருட்கள் இருப்பதாக அமைச்சர்கள் அலட்சியமாகப் பதில் சொன்னார்கள். இப்போது பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

எக்ஸ் ரே, சி.டி. ஸ்கேன் போன்றவற்றை எடுக்க வேறொரு நாளில் வரச் சொல்கிறார்கள். அதேபோல, நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டிய உணவைப் பொறுத்தவரை சரியான உணவு வகைகளைத் தர முடியாமல் இருக்கிறது. வழக்கமாக ஒரு நோயாளிக்கு அவர் நோய் என்ன என்பதை புரிந்துகொண்டு சாப்பாடு கொடுப்போம். இப்போது எல்லோருக்கும் ஒரே சாப்பாட்டைக் கொடுக்கிறோம். இதனால், நோய் அதிகரிக்கக்கூடும். ஏழை மக்கள் நோயைக் குணப்படுத்திக்கொள்ள அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். சாவதற்காக வருவதில்லை. தற்போதுள்ள நிலைமையில், மருந்து வாங்க வருபவர்கள், மரணச் சான்றிதழ் வாங்கும் நிலை இருக்கிறது. இதையெல்லாம் சரிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம்" என்கிறார் மருத்துவமனையில் ஸ்டோர் கீப்பராக உள்ள ஆர்.ஏ.டி. சுமித் ஹேவந்த.
இலங்கை சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவரான ரவி குமுதேஷ் வேறு ஒரு முக்கியமான பிரச்சனை எழுந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.
"இப்போது இலங்கை மருத்துவ ரீதியாக பெரிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மின்சாரம் அடிக்கடி போய்விடுவதால் சிறிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்வதில் சிரமமேற்பட்டிருக்கிறது. ஆகவே ஒரு நோயாளிக்கு என்ன செய்ய வேண்டுமொ அதை செய்ய முடியாமல், இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் தரக்கூடிய மருந்தை வாங்கிச் செல்லும் நிலைமையில் நோயாளிகள் இருக்கிறார்கள்.

கொடுக்க வேண்டிய சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்காததால், காப்பாற்றப்பட வேண்டிய நோயாளி இறக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மாரடைப்பிற்குக் கொடுக்க வேண்டிய டெனக்டப்ளேஸ் போன்ற மருந்துகள் இல்லாததால், அந்த மருந்தே இல்லாமல் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதனால், உயிர் பிழைக்கக்கூடிய நோயாளிகள்கூட இறந்துபோகிறார்கள். எக்ஸ் ரே, சி.டி. ஸ்கேன் போன்ற கருவிகளின் பராமரிப்பில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் உதிரி பாகங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் ரவி குமுதேஷ்.
அரச மருத்துவமனைகளில் வழங்கப்படும் 5 உயிர் காக்கும் மருந்துகளுக்கும் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதும் மருத்துவத் துறையில் நிலவும் தட்டுப்பாடுகள் குறித்து பொது மக்களுக்குத் தெரிவித்து, மருத்துவ நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டுமென்றும் அந்த சங்கம் கோரியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
"எங்களுடைய சங்கத்திற்கு நூற்று முப்பதுக்கும் அதிகமான கிளைச் சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்களின் மூலம் கிடைத்த தகவல்களின்படி பார்த்தால், அத்தியாவசிய மருந்துகளுக்கே கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, நாட்டில் சுகாதார அவசர நிலையை அறிவிக்க வேண்டுமென சுகாதாரச் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரியிருந்தோம். ஆனால், அரசு தரப்பில் இருந்து எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
ஆகவே மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளோம். நிபுணத்துவம் கொண்ட ஒரு தொழில்நுட்ப அறிஞர்கள் குழுவை அமைத்து தற்போதைய பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அத்தோடு நாட்டு மக்களின் உதவி, சர்வதேச மக்களின் உதவியை கோரிப்பெற வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறோம். ஆனால், அதற்கும் பதில் வரவில்லை. ஆகவே, புலம்பெயர் இலங்கையர்களிடமும் இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்களிடமும் பகிரங்கமாக உதவிகளைக் கோருகிறோம். மருந்து மற்றும் உபகரணங்களை வாங்க உதவிசெய்யுங்கள் என்று கேட்டிருக்கிறோம். இந்த உதவிகள் கிடைக்கும்பட்சத்தில் மருத்துவக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
ஆனால், சுகாதார நெருக்கடி நிலை இருப்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மற்ற நாடுகள், அமைப்புகள் போன்றவை உதவிசெய்ய முன்வரும்." என்கிறார் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் வாசன் ரட்னசிங்கம்.

தனியார் மருத்துவமனைகள், கூடுதலாக மருந்துகளை வாங்கி வைத்திருப்பதால் தற்போது பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை. ஆனால், சாதாரண மக்கள் அனைவராலும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவது இயலாத காரியம்.
"இந்த நிலையை யூகித்து கடந்த மாதமே மூன்று மாதங்களுக்கான மருந்தை வாங்கி வைத்துவிட்டோம். ஆகவே இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு எங்களால் தாக்குப்பிடிக்கக முடியும். ஆனால், நாங்கள் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. தவிர, மருத்துவக் காப்பீடு போன்றவை பரவலாக இல்லாததால் எல்லா மக்களாலும் தனியார் மருத்துவமனைக்கு வர முடியாது என்பதால் இது பெரிய சிக்கலாகத்தான் இருக்கும்" என்கிறார் இலங்கையின் பெரிய மருத்துவக் குழுமங்களில் ஒன்றான மெல்ஸ்டா மருத்துவக் குழுமத்தின் பிரதம செயல் அதிகாரி டாக்டர் தியாகராஜா இறைவன்.
இந்தப் பிரச்னைகள் ஒருபுறமிருக்க மின்சார துண்டிப்பு, டீசல் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் மருந்துக்கடைகளும் சிக்கலை எதிர்கொள்கின்றன. மின்தடையின் காரணமாக, குளிர்சாதன பெட்டிகளில் வைக்கும் மருந்துகள் தங்கள் திறனை இழக்கக்கூடும்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்த நிலையில், நாடு முழுவதும் மருந்துகளின் விலையை 29 சதவீதம் அதிகரித்துக்கொள்ள தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) விலைக் கட்டுப்பாட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்தச் சிக்கலை எதிர்கொள்ள அரசு என்ன செய்யவிருக்கிறது என்பது தொடர்பாக இலங்கை அரசின் கருத்தைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தெற்காசிய நாடுகளிலேயே மிக வலுவான பொது சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடு இலங்கை. ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இந்த கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக எழுந்திருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












