இலங்கை பொருளாதார நெருக்கடி: "முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்" - இலங்கை எம்.பி

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசிய பின், பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக மக்கள் செல்வது, இந்தியாவிற்கு பெரும் இக்கட்டான சூழ்நிலை என்பதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், தம்மிடம் எடுத்துரைத்ததாக வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

இலங்கையின் பொருளாதார சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு தாம் உதவிகளை வழங்குவதாகவும், அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகள் செல்வதானது, இந்தியாவிற்கு பாரமான விடயம் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கின்றது. இது தொடர்பில் உங்களின் கருத்து?

இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சி என்பது இன்று உலகமெங்கும் பேசுகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. அதேநேரத்தில் இலங்கையினுடைய இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம், இப்போது நடைமுறையிலுள்ள அரசாங்கத்தினுடைய பிற்போக்கான கொள்கை அல்லது முகாமைத்துவம் சரியில்லாத நிலை.

ஆகவே இந்த பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கின்ற இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்த போதிலும், இந்தியா தனது முழுமையான ஆதரவை இலங்கைக்கு வழங்கி வருகின்றது. இந்தியா இப்போது இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்துவருகின்றது. கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் நிதியை இந்தியா கொடுத்துள்ளது.

ஏற்கனவே 500 மில்லியன் டாலர் வரை கொடுத்துள்ளார்கள். மேலும் உதவி புரிவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உதவி இலங்கைக்கு தற்போது அதிகமாக கிட்டுகின்றது என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

எப்போதும் சந்திக்காத ஒரு நெடிக்கடியை இலங்கை இப்போது சந்தித்திருக்கின்றது. இந்த ஒரு சூழ்நிலையில், உதவி செய்யக்கூடிய நாட்டின் மிக முக்கிய பதவியில் இருக்கக்கூடிய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். அவரை நீங்கள் சந்தித்தீர்கள். எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன?

இன்று விசேடமாக பிம்ஸ்டெக் மாநாட்டிற்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அவருடைய பயணம் தள்ளிப் போடப்பட்டு, இப்போது வெளியுறவு துறைத் அமைச்சர் இன்று இலங்கைக்கு பயணம் செய்து, பல்வேறு தரப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.

ஜனாதிபதி, நிதி அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். அதேபோன்று, தமிழ் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எங்களுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் தரப்புக்களை இப்போது சந்தித்து வருகின்றார்.

அந்த வகையில் எங்களோடு சந்தித்த சந்திப்பிலே விசேடமாக நாங்கள் இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சி அல்லது இன்றைய காலக் கட்டத்திலே இலங்கை படுகின்ற சிரமம் போன்றவற்றை நாங்கள் அவருக்கு எடுத்துரைத்தோம். பெட்ரோல், கேஸ், அதேபோன்று, மக்கள் நீண்ட வரிசைகளிலே நின்று மக்கள் பொருட்களை வாங்கக்கூடிய நிலைமை இருக்கின்றது.

அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்னை போன்றவற்றையும் நாங்கள் எடுத்து காட்டினோம். அதேவேளை, இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நிறைய பேர் அகதிகளாக போகின்ற ஒரூ சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.

அதாவது இலங்கையிலே கடினமான சூழ்நிலை அனுபவிக்க முடியாமல், மக்கள் இந்தியாவிற்கு போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே எதிர்காலத்தில் இந்தியாவிற்கு இதுவொரு பயங்கர இக்கட்டான நிலையை உருவாக்கும். எனவே கூடுமான வரைக்கும் இலங்கையினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றோம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், அவர்கள் வந்தால், இந்தியாவிற்கு அதுவொரு பாரமாக அமையும்.

அதேபோல இலங்கையினுடைய பொருளாதார வீழ்ச்சியினால், மக்களை பலிகேடாக்குவதோ? அல்லது அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதோ? அல்லது கடந்து வருகின்ற வேலைகளை செய்வதோ? ஒரு பாரிய பிரச்னையை சமூகத்தில் உருவாக்கும் என்பதை நாம் எடுத்து சொன்னோம். அவரும் எடுத்து காட்டினார். ஆகவே இதற்கு பிறகு இலங்கைக்கு நிறைய உதவிகளை செய்வதாக அவர் சொல்லியிருக்கின்றார்.

இந்த பொருளாதார நெருக்கடி தொடருமாக இருந்தால், இந்தியா எப்படியான உதவிகளை இலங்கைக்கு வழங்கும்?

பொருளாதார உதவியை ஒரு நாடு எந்த நாளும் செய்துக்கொண்டிருக்க முடியாது.

இலங்கை இன்று சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்கின்றது. சர்வதேச நாணய நிதியத்திலே அவர்கள் சொல்கின்ற சில கட்டுப்பாடுகளை இலங்கை அனுசரித்து, அதை முறையாக பேணி இந்த பொருளாதார சிக்கலிலே இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, எந்தநாளும் இன்னொருத்தர் கடன் கொடுப்பார், அதை வாங்கி நாங்கள் செலவளிக்க முடியும் என்ற கோட்பாட்டில் இருந்தால், ஒரு நாளும் இலங்கை முன்னேற முடியாது. ஆகவே இந்த சூழ்நிலையிலே நாங்கள் சொல்வது மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்பதுதான்.

13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதிகார பரவலாக்கலை இலங்கை ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். எங்களது மலையக மக்களுடைய பல்வேறு பிரச்னைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலே நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம்.

அதேநேரத்தில் மலையக மக்களை பொருத்தவரை எங்களுயை பிரச்னையை நாங்கள் சொல்லும் போது, ஒரு ஆவணமொன்றை தயாரித்து அவர்களுக்கு கொடுத்திருக்கின்றோம்.

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து அடுத்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 2023ம் ஆண்டு அந்த வருடத்தை நாங்கள் கொண்டாடுவதற்காக எத்தனித்திருக்கின்றோம். அதற்காக இந்திய அமைச்சர் ஒருவரையும் அனுப்பும் படி நாங்கள் அவரிடம் கேட்டிருக்கின்றோம். அனுப்புவதாக அவர்சொல்லி இருக்கின்றரர்.

அதேபோன்று, மலையகத்திலே கல்வி, சுகாதாரம், பின்னடைவை சந்தித்துள்ள கலாசாரம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு உதவிகளை செய்வதாகவும் அவர் சொல்லி இருக்கின்றார்.

ஆசிரியர் பரிமாற்றங்கள். கணித விஞ்ஞான பாடங்களுக்கு இலங்கையிலே ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக இருக்கின்றது இப்போது. அதனை ஈடு செய்வதற்கான பயிற்சிகளை கொடுப்பதற்கு அங்கிருந்து ஆசிரியர்களை இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறியுள்ளார்.

இந்த பொருளாதார நெருக்கடி, அதேபோன்று இதற்கு முன்னர் மலையக மக்கள் எதிர்நோக்கி சம்பள பிரச்னை, இன்றும் மக்கள் அடிமைகளை போன்று வாழக்கூடிய ஒரு சூழ்நிலை, இவ்வாறான அனைத்து பிரச்னைகளுக்குமான எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்?

நிச்சயமாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை முதலில் சீர் செய்ய வேண்டும். இலங்கையினுடைய பொருளாதாரத்தை சீர்ப்படுத்த வேண்டும். இன்று ரஷ்யா - யுக்ரேன் பிரச்னையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

ஆகவே உலகத்துடைய சமகால அரசியல் சூழ்நிலை மாற வேண்டும். இலங்கையினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது இலங்கையிலே ஒரு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டும்.

அல்லது இந்த அரசாங்கம் தொடர்ந்தும் செய்யுமானால், இதற்கு அனுபவசாலிகளுடைய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று அனுபவசாலிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்வதில்லை.

ஆகவே இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் அரசாங்கம் மீண்டும் மீண்டும் குழிக்குள் விழாமல் இதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: