You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை கடலினை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும் வான் பரப்பை விற்பதாகவும் கொந்தளிப்பு
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியா உதவிகளை வழங்கி, இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள இரண்டு உடன்படிக்கைகளே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளன.
இந்தியாவுடன் முக்கிய இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அமைச்சரவை மார்ச் 21ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அடுத்த வாரமே இந்தியாவுடன் முக்கிய இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியது.
என்னென்ன உடன்படிக்கைகள்?
இலங்கையில் கடல் மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நிதியுதவிகளை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவித் தொகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளார்.
டிஜிட்டல் தனித்துவ சட்டகம் - இந்தியா இணக்கம்
இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியா உதவித் திட்டங்களை வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி, இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் இந்திய ரூபாய் இதற்காக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையெழுத்திடவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு, இலங்கை சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதன்படி, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட தொழில்நுட்ப அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும், அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மீன்பிடி துறைமுகங்களை அமைக்க இந்தியா உதவி
பரஸ்பர உடன்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பருத்தித்துறை, பேசாலை, குருநகர், பலம்பிட்டிய உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு உடன்படிக்கை தொடர்பில் சர்ச்சை
இலங்கையில் இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவுடன் 3 உடன்படிக்கைகளில் கையெழுத்திட இணக்கம் எட்டப்பட்ட நிலையில், அதில் இரண்டு உடன்படிக்கைகள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக கடல் மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை ஸ்தாபித்தல் மற்றும் இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா வழங்கும் உதவித்திட்டம் ஆகிய இரண்டு உடன்படிக்கைகள் குறித்து தற்போது இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது.
நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் இந்த ஆட்சியாளர்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
''இலங்கையின் பாதுகாப்பு எனக்கூறிக் கொண்டு, அந்த போர்வையில் இந்தியாவிற்கு இலங்கையின் வான்பரப்பை விற்பனை செய்துள்ளதாக கூற வேண்டும். இலங்கையின் கடலை சீனாவிற்கு வழங்கினார்கள். நிலத்தை சீனாவிற்கு வழங்கினார்கள். துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்கினார்கள். மின்சார திட்டங்களை அமெரிக்காவிற்கு வழங்கினார்கள். தற்போது வான் பரப்பையும் விற்பனை செய்துள்ளார்கள்" என ஹரின் பெர்ணான்டோ கூறுகின்றார்.
இந்தியாவுடன் மூன்று உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளனர். இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்களை முழுமையாக இந்தியாவிற்கு பெற்றுக்கொள்வதற்காக உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்துடன் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். கடல் மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்திற்காக மிதக்கும் படகொன்று இவர்களுக்கு கிடைக்கின்றது. ட்ரோன் விமானங்கள் மூன்று கிடைக்கின்றன. இலங்கையின் பாதுகாப்பை முழுமையாக இந்தியாவிற்கு விற்பனை செய்து விட்டார்கள். இது மிகவும் அச்சம் சூழ்ந்த நிலைமையாக காணப்படுகின்றது. கடல் மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தின் தலைமையகம் கடற்படை வசமே காணப்படுகின்றது. பாதுகாப்பை வழங்க வருகை தந்த ராணுவ வீரர், கடற்படையையும், முழுமையான பாதுகாப்பையும் இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளார்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடல் மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை நிலையமொன்றை ஹம்பாந்தோட்டையில் அமைப்பதற்கு இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
''இதில் இணை நிலையமொன்றை ஹம்பாந்தோட்டையில் அமைக்கவுள்ளனர். புதுமையான விடயம் இது. சமுத்திர பாதுகாப்பை இந்தியாவிற்கு வழங்குகின்றார்கள். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்குகின்றார்கள். நிச்சயமாக பாரிய யுத்தமொன்றை உருவாக்குவதற்கான முட்டாள் தனமான திட்டம் என்பதை கூறிக்கொள்ள வேண்டும்" என்கின்றார் ஹரின் பெர்ணான்டோ.
அரசாங்கத்தின் பதில்
இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதானது, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் பாதிப்பு கிடையாது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.
இலங்கையர்களின் தகவல்களை இந்திய அரசாங்கம் பெற்றுக்கொள்ளாது என அவர் கூறுகின்றார்.
''நிதியுதவியை வழங்குவதற்காகவே இந்தியா, இலங்கையுடன் கையெழுத்திடுகின்றது. தரவுகள் தொடர்பில் பிரச்சினை கிடையாது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்பிலுள்ள அனைத்து நிறுவனங்களும் இதனுடன் தொடர்புப்படும். இதனால் தரவுகள் தொடர்பில் பிரச்சினை வராது" என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவுடனான உடன்படிக்கைகள் மக்கள் மத்திக்கு கொண்டு வர வேண்டும்.
இந்தியப் பெருங்கடலின் கடல் பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ள மூன்று உடன்படிக்கைகள் தொடர்பிலான தகவல்களை உடனடியாக மக்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் முன்வைக்க வேண்டும் என எல்லே குணவங்க தேரர், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் தொடர்பிலான உடன்படிக்கையும் இதுவரை நாட்டிற்கு வெளிப்படுத்தவில்லை என அவர் கூறுகின்றார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு இந்த உடன்படிக்கைகள் பிரச்சினை கிடையாது என அரசாங்கம் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்