இலங்கை பொருளாதார நெருக்கடி: “வாழ்வதா, சாவதா என்றே தெரியவில்லை" – திண்டாடும் மலையகத் தொழிலாளர்கள்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் விலைவாசி உயர்வும் ஏற்கனவே பல பிரச்னைகளில் திண்டாடி வரும் மலையக மக்களை இன்னும் விளிம்புக்குத் தள்ளியிருக்கின்றன. இலங்கையின் மலையகப் பகுதியிலிருந்து பிபிசியின் நேரடி ரிப்போர்ட்.
இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஏற்கெனவே ஊதியக் குறைவு, பணிச் சுமை, சரியான குடியிருப்புகள் இல்லாதது எனப் பல்வேறு பிரச்னைகளில் திணறிவரும் நிலையில், மேலும் ஒரு பேரிடியாக வந்திருக்கிறது தற்போதைய பொருளாதார நெருக்கடி. இந்தத் தொழிலாளர்கள் மிகக் குறைவான கூலி, அதீதமான விலைவாசி என்ற இரு துருவங்களுக்கு இடையில் போராடி வருகிறார்கள்.
இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் கேகல்ல மாவட்டத்தில் அமைந்திருக்கும் யட்டியாந்தோட்டை பகுதி ரப்பர் மரத் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த பகுதி. பார்ப்பதற்கு மிக அழகாகக் காட்சியளிக்கும் இந்தப் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் நிலை அவ்வளவு ரசிக்கத்தக்கதாக இல்லை.
நிலச்சரிவு அபாயத்தால் ஏற்கெனவே வாழ்ந்து வந்த வீடுகளில் இருந்து வெளியேறி, தகர ஷெட்களில் வாழ்ந்து வருகிறார்கள் இந்தப் பகுதி மக்கள். இவர்களில் பலர் நிரந்தரத் தொழிலாளர்களாக இல்லாமல், தினக் கூலிகளாகப் பணியாற்றி வருவதால் குறைவான கூலியையே பெற்று வருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்த விலை உயர்வு மிகப் பெரிய நெருக்கடியாக உருவெடுத்திருக்கிறது.
அரிசி கிலோ 200 ரூபாய், பருப்பு கிலோ 400 ரூபாய்
"முதலில் 30 நாட்கள் வேலை கிடைத்து வந்தது. இப்போது வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனால், மாதம் 18 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அதை வைத்து குழந்தைகளுக்குத் தேவையான செலவைக்கூட செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். சமையலுக்குத் தேவையான பொருட்களிலேயே மிக மலிவான பொருள் உப்புதான். அதைக்கூட வாங்க முடியவில்லை" என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் கணபதிப் பிள்ளை.
இந்தப் பகுதியைச் சேர்ந்த தமயந்திக்கு ஐந்து குழந்தைகள். கணவர் வேறு ஊரில் வேலை செய்து வருகிறார். இவர் தேயிலை பறிக்கும் பகுதிகளில் ஏற்கனவே கூலி மிகக் குறைவு. இந்த நிலையில், விலைவாசி உயர்வும் சேர்ந்துகொள்ள என்ன செய்வதென்று தெரியவில்லை என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"மலைப்பகுதியில் தேயிலை பறிக்கும் வேலை இல்லை. அதனால் நான் நாட்டில் (சமதளப் பகுதிகளில்) விளையும் தேயிலை பறிக்கிறேன். இதற்கு கிலோவிற்கு 30 ரூபாய்தான் கிடைக்கும். வெயிலால் இலைகள் வாடியிருப்பதால் பெரிய அளவில் கொழுந்துகள் கிடைப்பதில்லை. அதிகபட்சம் 20 கிலோதான் பறிக்க முடியும். ஆகவே 600 ரூபாய்தான் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 200 ரூபாய்க்கும் ஒரு கிலோ பருப்பு 400 ரூபாய்க்கும் விற்கும் நிலையில், வெறும் 600 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? வாழ்வதா, சாவதா என்றே தெரியவில்லை" என்கிறார் தமயந்தி.
இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள், தலைநகர் கொழும்பு ஆகிய பிரதேசங்களைத் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்களும் ரப்பர் தோட்டங்களும் அமைந்திருக்கின்றன. இந்தத் தோட்டங்களில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள்தான். 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து தோட்டப் பணிக்காக இலங்கை சென்ற இந்த மக்களின் வாழ்க்கை கடுமையான ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் பெறும் விகிதம் என்பது மாறியிருக்கிறது. பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில் கிடைத்து வந்த நிலையான சம்பளம் என்பது மாறி தற்போது பறிக்கும் தேயிலையின் அளவுக்கே கூலி வழங்கப்பட்டு வருகிறது. போதிய உரமின்மை, பராமரிப்பின்மை ஆகியவற்றால் தேயிலைக் கொழுந்துகள் போதிய அளவில் இருப்பதில்லை என்பதால், இந்தத் தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை அளவும் கிடைக்கும் கூலியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் விலை உயர்வு அவர்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது.
நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை
"தேயிலைத் தோட்டத்தில் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பளம் என்கிறார்கள். ஆனால், அதற்கு 20 கிலோ தேயிலை பறிக்க வேண்டும். 20 கிலோவுக்குக் குறைவாகப் பறித்தால் ஒரு கிலோவுக்கு 45 ரூபாய்தான் கிடைக்கும். இதனால் பல சமயங்களில் வெறும் 500- 600 ரூபாய்தான் சம்பளமாகக் கிடைக்கும். இந்த சம்பளத்தையும் தற்போது வேகமாக உயர்ந்துவரும் விலைவாசியையும் வைத்துப் பார்த்தால், ஒரு வேளை உணவுக்குக்கூட இந்த சம்பளம் பத்தாது" என்கிறார் மத்திய மாகாணத்தில் மசக்கலியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் விக்னேஸ்வரி.
இந்த நெருக்கடிகளால் பல தொழிலாளர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து சந்தா வசூலித்து அளிப்பது நிறுத்தப்பட்டிருப்பதால் அவையும் பலவீனமடைந்திருக்கின்றன. தொழிலாளர்களின் நிலைமை ஒருபோதும் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்கிறார் இலங்கை தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் பிரதி தலைவரான செல்லையா சிவசுந்தரம்.
"இதற்கு முன்பாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், கம்பனிகளுக்கு இடையில் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும். இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில்தான் எத்தனை நாள் வேலை கொடுக்க வேண்டும், எப்படி சம்பளம் கொடுக்க வேண்டும், விடுமுறை நாள் சம்பளம் எப்படி, புதிதாக வேலைக்கு எப்படி ஆட்களை எடுப்பது போன்ற 21 அம்சங்கள் முடிவுசெய்யப்பட்டிருக்கும்.

இந்த முறை கூட்டு ஒப்பந்தம் நடக்கவில்லை. இதற்கு முன்பாக வந்த ஒவ்வொரு தேர்தலிலும் எல்லாக் கட்சிகளுமே தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக 1000 ரூபாய் பெற்றுத்தரப்படும் என்று வாக்குறுதி அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்த முறை கூட்டு ஒப்பந்தத்திற்கு தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் ஒத்துவராததால், தினக் கூலியை 1,000 ரூபாயாக உயர்த்தி அரசு, அரசாணையை வெளியிட்டது. ஆனால், நிறுவனங்கள் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தன. மேலும் கூட்டு ஒப்பந்தம் எதையும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்றும் சொல்லிவிட்டன. இது நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.
உரம் போடாததால் பல தோட்டங்களில் தேயிலை கொழுந்துகூட இல்லை
இதற்கு முன்பு 16 கிலோ தேயிலை பறித்தால் 765 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது 20 கிலோ பறித்தால்தான் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்குக் குறைவாக எடுத்தால் கிலோவுக்கு ஐம்பது ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு தொழிலாளி காலை எட்டு மணி முதல் வேலை செய்து, தேயிலை இல்லாததால் குறைவாகத்தான் பறிக்க முடிந்தால், மிகக் குறைவான தொகையே கிடைக்கும்." என்கிறார் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் செங்கொடி சங்கத்தின் உப தலைவரான செல்லைய்யா சிவசுந்தரம்.
மேலும் தேயிலைத் தோட்டங்களுக்கு உரமும் போடப்படவில்லை என்பதால் பல தோட்டங்களில் கொழுந்தே இல்லை என்றும் பரமரிப்பு இல்லை என்பதால் பல தேயிலைத் தோட்டங்கள் படிப்படியாக காடாகி வருவதாகவும் தொழிலாளற்கள் கூறுகின்றனர்.

"நிலைமை இப்படி இருக்கும்போது எப்படி ஒருவரால் 20 கிலோ கொழுந்தைப் பறிக்க முடியும். மேலும், இரண்டு மாதங்கள் வேலைக்கு வராதவர்களின் பெயர்களை நிரந்தரத் தொழிலாளர்களின் பட்டியலில் இருந்து நீக்கிவிடுகிறார்கள். பலரை தினக் கூலிக்கு முறைசார தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்துகிறார்கள். அப்படி முறைசாரா தொழிலாளர்களாக இருக்கும்போது ஏதாவது நடந்தால் பாதுகாப்பு இல்லை.
முன்பு 765 சம்பளமும் இத்தனை நாள் வேலை கொடுக்க வேண்டுமென்ற சட்டமும் இருந்தது. ஆகவே மாதத்திற்கு 20,000 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். அதைவிட கூடுதலாக கொழுந்து எடுத்தால் அதற்குத் தனியாக பணம் கிடைக்கும். அப்போது பொருட்களின் விலையும் குறைவாக இருந்தது. இப்போது சம்பளமும் குறைந்துவிட்டது, தேயிலைத் தோட்டங்களும் அழிந்து வருகின்றன. வேலை நாளும் குறைந்துவிட்டது.
இந்த நிலையில்தான் விலைவாசி மிக கடுமையாக உயர ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பலர் நகரங்களுக்கு வேலை தேடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பலரால், குழந்தைகளைக்கூட பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. இது எங்கே போய் முடியுமெனத் தெரியவில்லை" என்கிறார் சிவசுந்தரம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சிறிய நிவாரணமாக, கோதுமை மாவை மானிய விலையில் அளிப்பது போன்ற சில நடவடிக்கைகளை அரசும் தேயிலை நிறுவனங்களும் தற்போது மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், அது போதுமானதாக இல்லை என்கிறார்கள் தொழிலாளர்கள்.
அரசின் உடனடியான, விரிவான தலையீடு இல்லாமல் இந்த நெருக்கடியை தோட்டத் தொழிலாளர்கள் கடப்பது கடினமாகவே இருக்கும்.
மலையகத் தொழிலாளர்களின் நிலை குறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, ஜனாதிபதி செயலாளர் செந்தில் தொண்டைமான், "தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகத் தான் உள்ளது. அரசாங்கம் திடீரென இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்த வேண்டுமென்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், போதிய அளவில் இயற்கை உரங்கள் கிடைக்கவில்லை. இதனால், விளைச்சலும் பாதித்து, தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் இருந்து வரக்கூடிய ஒரு பில்லியன் டாலர் கடன் உதவியில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தையாவது மலையகத்திற்காகப் பயன்படுத்த முடியும்," எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













