மனித உரிமைகள் விஷயத்தில் ஐ.நாவின் பொறுமையை சோதிக்கும் இலங்கை

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி ந்யூஸ்

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு குற்றச்சாட்டின் பேரில் ஆறு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த முருகையா கோமகனை, இருண்ட அறையின் நினைவுகளும், தனது உயிரைப் பற்றிய நிலையான பயமும் இன்னும் ஆட்டிப்படைக்கிறது.

சமீபத்திய தசாப்தங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் மற்றும் மற்றவர்களில், 40 வயதான கோமகனும் ஒருவர்.

2009 இல் தமிழ்போராளிகள் தோல்வியடையும் வரை, சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்திய அரசுகள், பிரிவினைவாத தமிழ்ப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்ய, PTA வை முதன்மையாகப் பயன்படுத்தினர்.

ஆனால் உள்நாட்டுப் போர் முடிந்து ஒரு தசாப்தத்திற்கு மேலாகியும், இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. அதை சீர்திருத்த வேண்டிய நெருக்குதலின் கீழ் இலங்கை உள்ளது.

ஐரோப்பாவில் லாபகரமான ஏற்றுமதி சந்தைகளுக்கான வாய்ப்புகள், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தை சார்ந்து உள்ளது. வட யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த கோமகன், கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2010 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.

"போலீசார் என்னை வாக்குமூலத்தில் கையுழுத்திட வற்புறுத்த முயன்றனர். நான் மறுத்ததால், கடுமையாக தாக்கப்பட்டேன். ஒரு அதிகாரி என்னை சுடப்போவதாகவும் மிரட்டினார். நான் சித்திரவதை செய்யப்பட்டதாக நீதிபதியிடம் புகார் செய்தபோது, ​​மேலும் அதிகமாக அடித்து நொறுக்கப்பட்டேன்," என்று கோமகன் பிபிசியிடம் கூறினார்.

இறுதியாக, தனக்குப் புரியாத சிங்கள மொழி வாக்குமூலத்தில் கையொப்பமிட்டதாக அவர் கூறினார். மறுத்தால், தான் தனிமைச் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று அவர் பயந்தார். ஆதாரம் இல்லாததால், 2016 இல் ஒரு நீதிமன்றம் அவரை விடுவித்தது . ஆனால் தான் இன்னமும் உளவுத்துறை நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவதாக கோமகன் கூறுகிறார். "இத்தகைய தொடர் கண்காணிப்பு நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை கடினமாக்குகிறது," என்று அவர் தெரிவித்தார்.

தன்னிச்சையாக கைதுகளை செய்வதற்கும், சரியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பல ஆண்டுகள் மக்களை தடுப்புக்காவலில் வைப்பதற்கும், சித்திரவதை செய்து தவறான வாக்குமூலங்களைப் பெறுவதற்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.இந்தக் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

40 வருடங்களுக்கு முன்னர், தமிழ் தாயகத்திற்கான கிளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, ​​இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பிற சிறுபான்மை குழுக்கள், அரசு விமர்சகர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை குறிவைக்கவும் இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

2019 ல் இஸ்லாமிய போராளிகளால் நடத்தப்பட்ட ஈஸ்டர் சண்டே வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களை குறிவைக்க PTA பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இவர்களில் பிரபல முஸ்லிம் வழக்கறிஞரும், அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷாவை பகிரங்கமாக எதிர்ப்பவருமான ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவும் அடங்குவார். ஏறக்குறைய இரண்டு வருடங்களை தடுப்புக்காவலில் கழித்த பின்னர் வளர்ந்து வரும் சர்வதேச விமர்சனங்களுக்கு மத்தியில் அவர் ஜனவரி மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இன்னும் 300 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காவலில் வைக்கப்படடுள்ளனர் என்றும் இலங்கை சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக செய்யப்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து, "சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைக்கு ஏற்ப அதைக் கொண்டுவரும் நோக்கத்துடன்" அரசு,இப்போது சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

"ஒரு வருடத்திற்கும் மேலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், காவலில் உள்ளவர் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது திருத்தங்களில் உள்ள முக்கிய விதிகளில் ஒன்றாகும்."என்று நீதித்துறை அமைச்சர் மொஹமத் அலி சப்ரி, பிபிசியிடம் கூறினார்

நிலுவையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும், 86 பேர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

உதாரணமாக, " காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலம் இப்போதும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படலாம்" என்று அம்பிகா சத்குணநாதன் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC), ஜெனீவாவில் தனது வசந்தகால கூட்டத்தொடரை நடத்துகிறது. அதை அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் சபையின் மற்றுமொரு கண்டன மதிப்பீடு வெளிவருமேயானால் அது இலங்கைக்கு நல்லதாக அமையாது.

" பல வருடங்கள் சிறையில் இருந்தபின் விடுவிக்கப்படவர்களின் பல வழக்குகள் எங்களிடம் உள்ளன. அதாவது எந்த ஆதாரமும் இல்லை மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை," என்று பிரபல மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சத்குணநாதன் கூறினார்.

மனித உரிமைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கை நிறுவனங்களுக்கான கட்டணமில்லா அணுகலை இடைநிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் 2020 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சர்வதேச செலாவணி நிதியத்தின் உதவி கிடைக்கும் நிலையும் காணப்படுகிறது.

மனித உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிஷெல் பாச்லெட் ஒப்புக்கொண்டார். ஆனால் "இலங்கையில் அனைத்து தரப்பினரும் செய்த சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்கு தொடுக்குமாறு," உறுப்பு நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

26 ஆண்டுகால மோதலில் இரு தரப்பினரும் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்க கடந்த ஆண்டு உறுப்பு நாடுகள் அவருக்கு அதிகாரம் அளித்தன. 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என ஐ.நா.மதிப்பிட்டுள்ளது.

"பல ஆண்டுகளாக ஐநாவால் சேகரிக்கப்பட்டவை உட்பட, கிடைக்கக்கூடிய பரந்த அளவிலான தகவல்களுக்கான ஒரு மையப்படுத்தப்பட்ட களஞ்சியத்தை உருவாக்குவது முதல் படியாகும்," என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகத்தின் ஆசிய-பசிஃபிக் தலைவர் ரோரி முங்கோவன், பிபிசியிடம் கூறினார்.

"நாங்கள் எல்லா விஷயங்களையும் பகுப்பாய்வு செய்கிறோம் மற்றும் மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடிய குறிப்பிட்ட வழக்குகளையும், குறிப்பிட்ட குற்றவாளிகளையும் சுட்டிக்காட்டுகிறோம்."

அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் நடவடிக்கை எடுக்கத்தவறியதை தொடர்ந்து, "சர்வதேச அதிகார வரம்பு" என்ற கோட்பாட்டின் கீழ், போர்க் குற்றச் சந்தேக நபர்களை தீவுக்கு வெளியே விசாரணை செய்ய, சேகரிக்கப்பட்ட விவரங்களை பயன்படுத்தலாம் என்பதே இதன் நோக்கம்.

போர் முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய அதிபர் ராஜபக்ஷ, ராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நிராகரித்து வருகிறார். ஐ நா வின் நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறும் தெரியவில்லை. சிங்கள பெரும்பான்மையில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பலர், தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை ஹீரோக்களாக பார்க்கிறார்கள்.

இலங்கை வெளியுறவு அமைச்சர், இந்த மாத தொடக்கத்தில் ஐ.நா.வின் முடிவை கண்டனம் செய்தார்.

"இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்குகிறது, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன் மூலம் வெறுப்பை வளர்க்கிறது, மேலும் சமூகத்தை ஒருமுனைப்படுத்துகிறது," என்று ஜி.எல்.பெரிஸ் ஜெனீவாவில் நடந்த அமர்வில் கூறினார்.

முன்னாள் கிளர்ச்சியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், போரில் காணாமல் போனவர்களின் நிலையைத் தீர்மானிக்க அலுவலகம் அமைத்தல் போன்ற ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கொழும்பில் உள்ள அமைச்சர்கள், சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்தகைய முயற்சிகள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முருகையா கோமகன் போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்கிறார்கள். தங்கள் வாழ்க்கை பாழாகிவிட்டது என்றும் தாங்கள் இழந்த ஆண்டுகள் தங்களுக்கு ஒருபோதும் திரும்பக்கிடைக்காது என்றும் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட அவரும் மற்றவர்களும் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: