You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கைக்கு நரேந்திர மோதி அடுத்த மாதம் பயணம் - தாயக நெருக்கடி தீர உதவுமா?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சம் தெரிவிக்கின்றது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்வாக் என்றும் அவரது வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, ஏற்கெனவே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த இரு தலைவர்களின் சந்திப்பு சமீபத்தில் டெல்லியில் நடந்த பிறகு பீரிஸ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலையும் சந்தித்துப் பேசினார். இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவும் பீரிஸை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவிற்கும்; இலங்கைக்கும் இடையிலான உறவு, பரிவர்த்தனை உறவில் இருந்து கேந்திர கூட்டாளி உறவாக பரிணமித்துள்ளமையை சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இலங்கை எப்பொழுதும் நம்பியிருக்கக்கூடிய உண்மையான நண்பன் இந்தியாவாகும் என்பதை இலங்கை மக்கள் அதிகளவில் அங்கீகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான தருணத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை அமைச்சர் பீரிஸ் வரவேற்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு எப்போதும் இலங்கைக்கு ஆதரவானதாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
பொருளாதார ஒத்துழைப்பு, வலு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு, இணைப்பு, மக்களுக்கு இடையிலான தொடர்பு போன்றவை உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கி பண்ணை ஒப்பந்தம் குறித்தும் விசேட கவனம் செலுத்திய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பை எடுத்துக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான சூழ்நிலையில் கணிசமான நன்மைகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்திய இக்கலந்துரையாடலில், மருந்துகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தி அமைச்சர் பீரிஸ் இந்திய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்காக அபிவிருத்தியடைந்து வரும் இந்திய வெளிப்புற சுற்றுலாவை பயன்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்திய - இலங்கை உறவின் வேகத்தைத் தக்க வைக்கும் நோக்கில், பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்கூட்டியே இறுதி செய்வதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கடற்றொழில் சார்ந்த பிரச்னை குறித்தும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடினார்.
இதனை ஒரு முக்கியப் புள்ளியாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டு மீண்டும் மீண்டும் எழும் பிரச்னையாக இது மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து இருதரப்புப் பொறிமுறைகளையும் ஒன்றுகூட்ட வேண்டிய அவசரத் தேவை குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதி வருகையின் முக்கியத்துவம்
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விஜயம் அமையும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.
''பெரும்பாலும் வடக்கில அதானிட திட்டத்தை அமல்படுத்துவது, இன்னும் கூடுதலாக இந்திய முதலீடுகள இங்க செய்றதுக்குரிய ஒப்பந்தங்கள் செய்றதுக்கு வாய்ப்பிருக்கு. அரசியல், தமிழர் பிரச்னை பற்றி சும்மா வெளிப்படையாக கதைப்பாங்க. ஆனால் உள்ள பொருளாதார ரீதியான ஒப்பந்தங்கள், முதலீடுகள், இலங்கையை சீனாவுடன் கூடுதலாக நகர்த்தாமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைள் நிறைய இருக்கும்." என அவர் கூறுகின்றார்.
சீனாவை விட்டு இலங்கை பிரிந்து விட்டதா?
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவை, இலங்கை சமப்படுத்திக் கொண்டே, முன்னோக்கி நகரும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.
''இந்தியாவையும் சீனாவையும் தனக்கு சாதகமாக இலங்கை அழகாக கையாளும். அது கையாண்டு கொண்டு இருக்கிறது. தனக்கு எப்போது சீனா வேண்டுமோ, அப்போது சீனாவை நோக்கி இலங்கை போகும். எப்போது தனக்கு இந்தியா வேண்டுமோ அப்போது இந்தியாவை நோக்கி போகும். வர்த்தகம் என பார்த்தால், முன்னர் இந்தியா இருந்த போதிலும், இப்போது சீனா முதல் இடத்தில் உள்ளது.
இலங்கையிலுள்ள முழு பொருட்களும் சீன பொருட்கள் தான் உள்ளன. இலங்கையில் சீன பொருட்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவை தள்ளி வைக்க முடியாது என்ற நிலையில் தான், திருகோணமலை எண்ணெய் குதங்கள், யாழ்ப்பாணம் தீவுகள், கொழும்பு முனையம், ஆகியவற்றை கொடுத்து சமப்படுத்திக் கொண்டு செல்வதாகவே நான் பார்க்கின்றேன்" என அவர் குறிப்பிட்டார்.
சீனாவிற்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியோ அல்லது இந்தியாவிற்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியோ இலங்கை ஒருபோதும் செயற்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இரண்டு நாடுகளையும் தங்களுக்கு ஏற்ற வகையில் சமப்படுத்திக் கொண்டு, இலங்கை முன்னோக்கி நகரும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கூறுகின்றார்.
பிற செய்திகள்:
- 'அல்லா ஹு அக்பர்' முழக்கத்தை ஏன் எழுப்பினேன்? கர்நாடக மாணவி முஸ்கான் பேட்டி
- 'அல்லா ஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது?
- பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப்
- ஆபாச இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் - சட்டம் இயற்றிய இங்கிலாந்து
- நீட் விலக்கு மசோதா: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்