'மாவீரர் தினம்' - ஊடகவியலாளரை தாக்கியதாக 3 இலங்கை ராணுவத்தினர் கைது

முல்லைத்தீவு பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (28) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு போலீஸார் தெரிவித்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவீரர் தினம் நேற்றைய தினம் (27) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார்.
அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஈழப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகள் அனைவரையும், நவம்பர் மாதம் 27ம் தேதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இலங்கை தமிழர்கள் நினைவுகூர்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில்
இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து பகுதிகளிலும் ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தன .
இவ்வாறான பின்னணியில், இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியிலும் நேற்றைய தினம் ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செய்தி சேகரிப்பிற்காக சென்ற வேளையில், தன் மீது ராணுவ சிப்பாய்கள் தாக்குதல் நடத்தியதாக சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் குற்றஞ்சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், காயமடைந்திருந்த ஊடகவியலாளர், போலீஸ் அதிகாரிகளின் தலையீட்டுக்கு மத்தியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Kogulan
இவ்வாறான பின்னணியில், ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டித்து, முல்லைத்தீவில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே, மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் ராணுவம் மீது சுமத்திய குற்றச்சாட்டு குறித்து, பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவியது.
ராணுவ வீதி தடையை காணொளி பதிவு செய்துக்கொண்டிருந்த நபரை விசாரணை செய்ய முயற்சித்த வேளையில், குறித்த நபர், அங்கிருந்த தப்பிச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் தடுமாறி வீழ்ந்ததாக அவர் கூறியிருந்தார்.
ஊடகவியலாளர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட ராணுவ சிப்பாய்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு போலீஸார் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












