You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் மதரஸாக்களை மூட நடவடிக்கையா? என்ன சொல்கிறது அரசு?
இலங்கையில் உள்ள அனைத்து மதரஸா பாடசாலைகள் மூடப்படும் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசிய நிலையில், தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் அமைச்சர் சரத் வீரசேகர.
"5 வயது முதல் 16 வயது வரையான அனைத்து சிறார்களும், இன, மத வேறுபாடின்றி, கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும். இந்த சிறார்கள், நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேசிய கல்வி கொள்கைக்கு அமைய, தமது கல்வி நடவடிக்கைககளை தொடர வேண்டும். அதன்படி, தேசிய கல்வி கொள்கைக்கு அமைய முன்னெடுக்கப்படும் மதரஸா பாடசாலைகளை தடை செய்யப் போவதில்லை," என அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.
எனினும், தேசிய கல்வி கொள்கைக்கு முரணாக, மதம் மற்றும் மொழிகளை மாத்திரம் கற்பிக்கும் மதரஸா பாடசாலைகளையே தடை செய்ய போவதாக தான் கூறியதாக சரத் வீரசேகர தெரிவித்தார். முஸ்லிம் சமூகம் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களிடமிருந்து தமக்கு அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இதேவேளை, அறநெறி பாடசாலைகளை போன்றே, மதரஸா பாடசாலைகள் இயங்குகின்றன எனவும், அதனால் அவற்றை தடை செய்ய முடியாது என எஸ்.எம்.மரிக்கார் சபையில் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து மௌலவிகளை நாட்டிற்கு அழைத்து வந்து, கற்கும் செயற்பாட்டை மாத்திரம் தடை செய்யுமாறும் எஸ்.எம்.மரிக்கார், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த மதரஸா பாடசாலைகள், கல்வி அமைச்சின் அனுமதியின் கீழ் இயங்குகின்றன என அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, அமைச்சர் சரத் வீரசகர, "மதரஸா பாடசாலைகள் மற்றும் அறநெறி கல்வி நடவடிக்கைகளை ஒப்பிட்டு பேச வேண்டாம்," என கூறினார்.16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கல்வியை வழங்கும் மதரஸா பாடசாலைகள் தேவையான அளவுக்கு நாட்டில் உள்ளன. அவ்வாறான பாடசாலைகளை தாம் தடை செய்யப் போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
கல்விக்கொள்கைக்கு முரண்
இலங்கையின் கல்வி கொள்கைக்கு அது முரணானது என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இதேவேளை, முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் தான் கையெழுத்திட்டு, அதனை அமைச்சரவை நிகழ்ச்சி நிரலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக சரத் வீரசேகர கூறினார்.
பிற செய்திகள்:
- சிமெண்ட் ஆலைகளால் சீரழிந்த தமிழக கிராமங்கள்: வரமே சாபமாகிய அரியலூர் அவலம்
- 'ஒரு குடும்பத்துக்கு ரூ. 1 கோடி கடன்': இந்து மக்கள் கட்சியின் தோ்தல் அறிக்கை
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
- கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: