You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு புதிய கொரோனா திரிபு பாதிப்பா?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பிரிட்டனில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபு, இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து இலங்கை வந்த நபர், புதிய வைரஸ் திரிபுவின் பாதிப்புக்கு ஆனானதாக இலங்கை சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் பிபிசி தமிழிடம் புதன்கிழமை இரவு தெரிவித்தார்.
அந்த வைரஸ் "B117" என்ற வகையை சேர்ந்தது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாருக்கு பாதிப்பு?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த 3ம் தேதி நாட்டிற்கு வருகை தந்தது.
இவ்வாறு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அன்றைய தினமே, கோவிட் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கு கடந்த 4ம் தேதி கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, மொயின் அலி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பின்னணியிலேயே, இங்கிலாந்தில் பரவி வரும் கோவிட் வைரஸ் பிரிவுடன் ஒத்ததான, வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (ஜனவரி 13) ஊடகங்களிடம் தெரிவித்தது.
இந்த நிலையில், வைரஸ் தொற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர் ஒருவருக்கே ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் மொயின் அலிக்கே இந்த புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்திடம் வினவியது.
எச்சரிக்கும் சுகாதாரத்துறை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ள போதிலும், அந்த வீரர் யார் என்பது தொடர்பிலான தகவல் தனக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 14ஆம் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து வைரஸ் அச்சுறுத்தல் இலங்கையிலும் உள்ளது.
இங்கிலாந்தில் பரவ ஆரம்பித்திருக்கும் புதிய வீரியம் கொண்ட வைரஸ் தாக்கத்தின் அபாயம் இலங்கைக்கும் தற்போது ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோர் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த வைரஸ், மிகவும் வேகமாக பரவக்கூடியது என சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறே, இந்த தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என அவர் அச்சம் வெளியிடுகின்றார்.
இந்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவ ஆரம்பிக்கும் பட்சத்தில், இலங்கை சுகாதார பிரிவினால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும், அதனை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
புதிய வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வீரியம் கொண்ட கோவிட் வைரஸ் தாக்கத்திற்குள்ளான நபர், முதலிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளமையினால், குறித்த வைரஸ் சமூகத்திற்குள் பரவுவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கோவிட் தாக்கம்
இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (13) 50,000 தை கடந்தது.
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,229 ஆகும்.
இலங்கையில் கோவிட் தொற்றினால் இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளனர்.
6,715 பேர் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 43,267 பேர் குணமடைந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- "கடும் நடவடிக்கை பாயும்" - யூட்யூப் சர்ச்சை விஷமிகளை எச்சரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனர்
- பாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி?
- மாஸ்டர் - சினிமா விமர்சனம்
- கொரோனா தடுப்பூசி: இந்திய தயாரிப்பாளர்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?
- கோட்சே பெயரில் நூலகம் அமைத்த இந்து மகாசபா தலைவர்: எழும் கடும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: