இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: புதிய கட்சிகளின் ஆதிக்கமும், ரணில் விக்ரமசிங்கவின் தோல்வியும்

பட மூலாதாரம், AFP
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் புதிய கட்சிகள் இரண்டு அதிகாரத்தை கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியனவே இந்த முறை பெரும்பாலான ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிளவுப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டது.
அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிளவுப்பட்டு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றுகொண்டுள்ளது.
இலங்கையின் மிக பழைமையான கட்சிகளாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
அதேபோன்று, பழைமையான கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பின் மூலம் ஒரு ஆசனம் கூட கிடைக்காத நிலையில், தேசிய பட்டியலின் ஊடாக மாத்திரம் ஒரு ஆசனம் கிடைக்க பெற்றுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

இந்த நிலையில், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சியை மாறி மாறி அமைத்த பிரதான இரண்டு கட்சிகளும் பாரிய பின்னடைவை இந்த முறை தேர்தலில் முதன் முறையாக சந்தித்துள்ளன.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியே பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய சவால்களை சந்தித்து வந்திருந்தது.
குறிப்பாக இலங்கையின் தற்போது அரசியலமைப்பு கூட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்வாறு இலங்கையின் மிகவும் பழைமையான கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சி யாரும் எதிர்பாராத விதமாக பாரிய தோல்வியை இந்த முறை தேர்தலில் சந்தித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தோல்வி
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கிய பாத்திரமாகவும், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாரும் எதிர்பாராத அளவு தோல்வியை இந்த முறை சந்தித்துள்ளார்.
தனது நாடாளுமன்ற வாழ்க்கையில் முதன் முறையாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ரணில் விக்ரமசிங்க தேர்தலின் ஊடாக இந்த முறை இழந்துள்ளார்.
பியகம தொகுதியிலிருந்து 1977ஆம் ஆண்டு முதன் முறையாக ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் தனது அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் கண்ட ரணில் விக்ரமசிங்க 1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.
ரணில் விக்ரமசிங்க மூன்று தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்திருந்தார்.
இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அதுமட்டுமின்றி, இலங்கை அரசியல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றவர் என்ற சாதனையையும் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தியிருந்தார்.
1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ஒரு தடவை கூட தோல்வியை சந்திக்காத ரணில் விக்ரமசிங்க, 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பாரிய தோல்வியை சந்தித்துள்ளார்.
இலங்கையில் யாருமே எதிர்பாராத விதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றை தவிர்த்த புதிய இரண்டு கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் பெரும்பான்மையுடன் பிரவேசித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளாக இந்த முறையே செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












