You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காட்டுப் பன்றிக்கு வைத்த வலையில் சிக்கி பலியான கருஞ்சிறுத்தை
இலங்கையின் மிகவும் அரிய வகை விலங்காக பாதுகாக்கப்பட்டு வந்த கருஞ்சிறுத்தையொன்று இறந்துள்ளது.
இதுகுறித்த தகவலை வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார பிபிசி தமிழிடம் உறுதி செய்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் - நல்லத்தண்ணி பகுதியில் கம்பி வலையொன்றிற்குள் சிக்குண்டிருந்த கருஞ்சிறுத்தையை கடந்த 26ம் தேதி வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டிருந்தனர்.
இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை அன்றைய தினமே உடவலவை பகுதியிலுள்ள மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காட்டுப் பன்றிகளிடமிருந்து மரக்கறி வகைகளை பாதுகாக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இந்தக் கருஞ்சிறுத்தை சிக்கியுள்ளது.
கம்பிகளுக்குள் சிக்குண்டிருந்த இந்த கருஞ்சிறுத்தைக்கு மயக்க ஊசி ஏற்றி, மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே மீட்டிருந்தனர்.
7 வயது மதிக்கத்தக்கதான இந்தக் கருஞ்சிறுத்தை, 6 அடி நீளமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தையின் உடலில் பல்வேறு வெட்டுக் காயங்கள் இருந்ததை காண முடிகின்றது.
கம்பி வலையில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் கருஞ்சிறுத்தைக்கு இந்தக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தைக்கு விலங்குகள் மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கிய போதிலும், அதனைப் பாதுகாக்க முடியாது போயுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
கருஞ்சிறுத்தையின் உடல், கண்டி - பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்து, அறிக்கை கிடைத்த பின்னரே கருஞ்சிறுத்தை இறந்தமைக்கான உரிய காரணத்தை கூற முடியும் என வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார குறிப்பிட்டார்.
இலங்கையில் கருஞ்சிறுத்தை வாழ்வது எவ்வாறு உறுதியானது?
இலங்கையில் கருஞ்சிறுத்தை இனமானது மிகவும் அரிய வகையிலேயே காணப்படுகிறது.
மத்திய மலைநாட்டு பகுதியில் சிவனொலிபாத மலையை அண்மித்த வனப் பகுதியில் இந்த கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் அண்மையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காணொளியொன்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த சி.சி.டி.வி. காணொளியின் ஊடாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 கருஞ்சிறுத்தைகள் நடமாடுவது உறுதிப்படுத்தப்பட்டதாக வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார கூறினார்.
பெரும்பாலும் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கருஞ்சிறுத்தையொன்றே இறந்திருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இவ்வாறான கருஞ்சிறுத்தைகள் வாழ்ந்து வருவது அண்மை காலத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் ஊடாக மேலும் ஒரு சில இடங்களில் இந்த கருஞ்சிறுத்தைகள் வாழ்ந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார குறிப்பிடுகின்றார்.
எனினும், ஏனைய பகுதிகளில் வாழும் கருஞ்சிறுத்தைகளும், சிவனொலிபாத மலையை அண்மித்த பகுதியில் வாழும் கருஞ்சிறுத்தைகளும் ஒரே வகையானவையா என்பதற்கு இதுவரை உறுதியாக சாட்சியங்கள் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
கருஞ்சிறுத்தைகள் இலங்கையில் வாழ்ந்து வருவதற்கு தம்மிடம் உறுதியான நேரடி சாட்சியங்கள் கிடையாது என கூறிய அவர், கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்பட சாட்சியங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் கூறினார்.
அதனால் சில பகுதிகளில் வாழ்கின்ற கருஞ்சிறுத்தைகள் தொடர்பில் இதுவரை சரியான தரவுகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கருஞ்சிறுத்தைகளை தற்போது பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், மலையகத்திலுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள், மிருகங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் தன்னார்வ புத்திஜீவகள் உள்ளடங்களான பலர் கருஞ்சிறுத்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியில் இறந்த கருஞ்சிறுத்தை தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு, இனிவரும் கருஞ்சிறுத்தைகள் பாதிக்கப்படாத வகையிலான திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: