You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியில் ராணுவம் - செயற்பாட்டாளர்கள் கவலை
கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் ராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக ராணுவ போலீசார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ராணுவ போலீசா கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தற்போது காண முடிகின்றது.
வாரத்தில் 7 நாட்களும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் ராணுவ போலீசார் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி, போலீசாரின் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த நடவடிக்கையானது, கொழும்பு நகரில் பரீட்சார்த்தமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் ராணுவம் தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் தொடர்பில் போக்குவரத்து பிரிவின் முன்னாள் பிரதி போலீஸ் மாஅதிபர் கே.அரசரத்னத்தை பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.
வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை தான் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும், போக்குவரத்து தொடர்பில் போதிய பயிற்சிகள் இன்றி நேரடியாக ராணுவ போலீசார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து திட்டம் என்பது பாரியதொரு நடைமுறை என கூறிய அவர், அது குறித்து போதிய தெளிவு ராணுவத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
போலீசாருக்கு மேலதிக ராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை எந்தவிதத்தில் பிரச்சனையாக அமையாது என முன்னாள் பிரதி போலீஸ் மாஅதிபர் கே.அரசரத்னம் கூறினார்.
அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது, ராணுவத்தை சிவில் கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டானது, நாடு யுத்த சூழ்நிலையில் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது என்பதை பிரதிபலிப்பதாகவே அமையும் என மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடு அமைதியான சூழ்நிலையில் இருக்கின்ற தருணத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ராணுவ போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையானது பாரிய பிரச்சனையான செயற்பாடு என அவர் குறிப்பிடுகின்றார்.
பொதுமக்களுடன் நெருங்கி செயற்படும் போது போலீசாருக்கு உரிய சட்டவிதிமுறைகள் காணப்படுகின்ற போதிலும், ராணுவத்திற்கு அவ்வாறான சட்டங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.
ராணுவம் உள்ளிட்ட முப்படையினர் வீதிகளில் நடமாடும் போது, பொதுமக்கள் அச்சநிலையை எதிர்நோக்கியவாறே இருப்பார்கள் எனவும் அவர் கூறுகின்றார்.
ராணுவத்தை அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளமையானது, நாட்டில் இயல்வு வாழ்க்கை இல்லை என்பதையே எடுத்து காட்டுவதாக அமையும் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு அக்கிரமிப்புக்களும் கிடையாத பின்னணியிலும், பனாமா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளை போன்று பதாளா உலக கோஷ்டிகளும் கிடையாத நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினையாக அமைகின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான சூழ்நிலை காணப்படாத பின்னணியில், ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமையானது, மக்களை அச்சத்திற்குள் வைத்திருப்பதாக நடவடிக்கையாகவே கருத முடிகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
வீதி போக்குவரத்து சட்டமொன்று நாட்டில் காணப்படுகின்ற தருணத்தில், அந்த சட்டம் தொடர்பில் பொலிஸார் போதிய தெளிவை பெற்றுள்ளதாக கூறும் இளையதம்பி தம்பையா, அந்த சட்ட விதிகள் ராணுவத்திற்கு போதியளவு தெரியாது எனவும் கூறுகின்றார்.
அந்த சட்டவிதிமுறைகளை அறியாத ஒருவர் எவ்வாறு அந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.
நாட்டில் இயங்கும் சிவில் அமைப்புக்கள் கூட தற்போது இந்த விடயங்கள் தொடர்பில் குரல் எழுப்ப தயங்கி வருவதாகவும் சட்டத்தரணி கவலை வெளியிடுகின்றார்.
ராணுவத்தை காணும் போது, ராணுவம் தங்களை தாக்கும் ஒரு படையினர் என்ற கோணத்திலேயே மக்கள் பார்ப்பதாகவும், அது அச்சசூழ்நிலையை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தாங்கள் ராணுவ ஆட்சிக்குள்ளேயே வாழ்ந்து வருவதாக மக்கள் மனங்களில் எண்ணங்கள் தோற்றம் பெறும் என அவர் கூறுகின்றார்.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் அணிந்த சிவில் ஆடையில் ராணுவ அடையாள சின்னங்களை அணிந்திருந்ததையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டில் ராணுவ ஆட்சியை அமுல்படுத்தாத நிலையிலேயே, இராணுவ ஆட்சியை கொண்டு செல்லும் நடவடிக்கையாகவே தான் இதனை கருதுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்