You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் ?
சீனாவை தவிர அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் நாடாக தற்போது தென் கொரியா விளங்குகிறது. ஒரே வாரத்தில் தென் கொரியாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் விரைவாக பரவிய இந்த வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தென் கொரியா தயார் நிலையில் இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, தென் கொரியாவில் மட்டும் இவ்வளவு விரைவாக கொரோனா வைரஸ் பரவியதன் காரணம் என்ன என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.
கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு தென்கொரியாவின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இடையேதான் அதிகம் பரவியுள்ளது. எதையும் வெளிப்படுத்தாமல் பிரச்சனைகளை தங்கள் சமூகத்திற்குள்ளேயே ரகசியமாக காக்கும் தன்மை கொண்ட பிரிவினராக இவர்கள் கருதப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பாதிப்பு இருப்பது வெளியில் தெரிய நாள் ஆனது என சிலர் விமர்சிக்கின்றனர்.
வைரஸ் பாதிப்பு விரைவாக பரவ என்ன காரணம் ?
கிறிஸ்துவ மதத்தினருக்கு சொந்தமான ஷிஞ்சியோன்ஜி தேவாலயத்தில் தான் முதல் முதலில் வைரஸ் பாதிப்பு பரவ துவங்கியது என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த கிறிஸ்துவ குழுவில் உள்ள 61 வயதான மூத்த உறுப்பினர் ஒருவருக்கு முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என தென் கொரியாவின் சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே இந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து, விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த குறிப்பிட்ட தேவாலயம் நடத்திய பல பிரார்த்தனை கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.
எனவே அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் உள்ளவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்திருக்கக்கூடும். மேலும் பரவ வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இந்த வைரஸ் மக்களின் சமூகப் பழக்கவழக்கங்கள் மற்றும் தொடர்புகளை பாதிக்கிறது என்று தொற்று நோய் நிபுணர் மருத்துவர் லியோங் ஹோ நாம் பிபிசியிடம் தெரிவித்தார்.
தேவாலயத்தில் பிரார்த்தனைகளின்போது அழும்போதும், பாடும்போதும் உமிழ்நீர் வெளியாக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இந்த வைரஸ் தொற்று பரவுகிறது என்றும் மருத்துவர் லியோங் ஹோ நாம் கூறுகிறார்.
எனவே தென் கொரியாவில் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிராத்தனை கூட்டங்கள் மற்றும் சேவைகளை தற்போது நிறுத்தியுள்ளனர்.
ஏன் முன்பே வைரஸ் பாதிப்பை கண்டறியவில்லை ?
கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பாதிப்பு சீனாவை தாக்கியவுடன், எழுந்த முக்கிய கேள்விகளில் ஒன்று இந்த வைரஸை எவ்வளவு ஆரம்பத்தில் கண்டறிய முடியும் என்பது தான்.
எந்தவொரு அறிகுறிகளையும் காண்பிப்பதற்கு முன்பே இந்த தொற்றுநோய் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படலாம் என்று சீன சுகாதார அதிகாரிகள் நீண்டகாலமாக எச்சரிக்கின்றனர். ஆனால் இதை உலக சுகாதார அமைப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அதிக எண்ணிக்கையில் வைரஸ் பரவுவதற்கு முன்பே, இந்த வைரஸ் பாதிப்பு குறித்து தென் கொரியா எச்சரிக்கையாகவே இருந்தது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருந்தும், அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாததால் கொரோனா வைரஸ் கடுமையாக பரவியதா? என்று உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் டேல் பிஷரிடம் பிபிசி கேள்வி எழுப்பியது.
இது குறித்து மருத்துவர் டேல் கூறுகையில் ''கொரோனா வைரஸ் முதற்கட்டத்திலேயே மிகவும் விரைவாக பரவியது, ஆனால் சார்ஸ் பாதிப்பு கண்டறிந்த பிறகு தான் பரவியது. ஆனால் எந்த அறிகுறியும் இன்றி இருமல் இன்றி இந்த வைரஸ் மிக விரைவாக பரவக்கூடும'' என்கிறார்.
ஷிஞ்சியோன்ஜி தேவாலயம்
1980ல் நிறுவப்பட்ட இந்த ஷிஞ்சியோன்ஜி தேவாலய குழுவில் 2.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பிரார்த்தனையின்போது உறுப்பினர்கள் அனைவரும் அருகே அருகே மண்டியிட்டு அமரும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். பிராத்தனைக்கு பிறகும் அனைவரும் ஒன்று கூடுகின்றனர்.
மேலும் இந்த மதக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அதை வெளிப்படுத்தாமல் ரகசிய அடையாளமாக வைத்துக்கொள்வார்கள் என்று தென் கொரிய பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர் கூறுகிறார்.
பிரார்த்தனைகள் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த நிலையிலும், சிலர் தேவாலயத்திற்கு செல்வதாகவும், விதியை மீறி தேவாலயம் செல்பவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த குறிப்பிட்ட கிறிஸ்துவ மதத்தினரின் மீது பொது மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.
பிற செய்திகள்:
- டெல்லி வன்முறை: 13 பேர் பலி, போராட்டக்காரர்கள் அகற்றம், பள்ளிகளுக்கு விடுமுறை
- டெல்லி வன்முறை: போர்க் களமான தலைநகரம் - என்ன நடக்கிறது? - களத்தில் இருந்து BBC
- டெல்லியில் டிரம்ப்: "பிரதமர் மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர்"
- டெல்லி கலவரம்: இறந்த போலீஸ்காரர் ரத்தன்லால் குடும்பம் வைக்கும் கோரிக்கை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: