இலங்கை ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தருணத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு

Gotabhaya

பட மூலாதாரம், Getty Images

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்களான கலாநிதி சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடிமகனாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என தீர்ப்பளிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சவாலை எதிர்கொள்வதற்கான கால எல்லை நிறைவு பெறுவதற்கு முன்னரே தாம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்களே காணப்படுகின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ்வின் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க குடியுரிமை

ஸ்ரீகோட்டாபய ராஜபக்ஷ் அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன.

எனினும், தான் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.

அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ததாக கூறப்படும் ஆவணங்கள் பலவற்றையும் அவர் தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரை இலங்கை குடியுரிமகனாக ஏற்றுக் கொள்ள முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நிறைவடைந்திருந்தன.

இதன்படி, மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கொதாகொட தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்திருந்தது.

மீண்டும் சர்ச்சை

அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தோர் பட்டியலை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது.

இவ்வாறு வெளியிடப்பட்ட அறிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை.

இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் ஊடாக தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, சில விநாடிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதற்கு பதில் ட்விட்டர் தகவலொன்றை வெளியிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை நாமல் ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமையை உறுதிப்படுத்துவதாக கூறும் ஆவணமொன்றும், அமெரிக்க கடவுச்சீட்டில் கென்சல் (ரத்து) என சீல் பொறிக்கப்பட்டுள்ள வகையிலான ஆவணமொன்றும் வெளியிடப்பட்டது.

தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம்

தேரரின் உணவு தவிர்ப்பு போராட்டம்

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் சரியான விடயங்களை தெளிவூட்டுமாறு வலியுறுத்தி இங்குருவத்தே சுமங்கல தேரர் ஆரம்பித்த போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், வெளிநாட்டு குடியுரிமை கொண்டிருந்தாலோ அல்லது இரட்டை குடியுரிமை கொண்டிருந்தாலோ தேர்தலொன்றில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :