இலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளார்.

ஐவர் அடங்கிய இந்த ஆணைக்குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜகத் டி சில்வா இந்த ஆணைக்குழுவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, மேல் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் அமைச்சுக்களில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற செயலாளர் டபிள்யூ.எம்.எம்.அதிகாரி ஆகியோரே ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள், அமைப்புகள் ஆகியவற்றை அடையாளம் கண்டுக் கொள்ளுதல் இந்த ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாக அமைகின்றது.

அத்துடன், இந்த தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த தவறிய அதிகாரிகள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் ஆகியோரையும் இந்த ஆணைக்குழு அடையாளம் கண்டுக் கொள்ளவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் இடைகால அறிக்கை எதிர்வரும் மூன்று மாதங்களில் கையளிக்கப்படவுள்ளதுடன், 6 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டறியப்படும் விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்க முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளையும் ஆணைக்குழு முன் வைக்கவுள்ளது.

இந்த ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து விடயங்களையும் அனைத்து அரச அலுவலங்கள், முப்படையினர், கூட்டுதாபனங்கள், சபைகள் ஆகியவற்றின் அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடத்தியிருந்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தினால் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த குழு தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரகசிய சாட்சியமளித்திருந்ததுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க சாட்சி வழங்கியிருந்தார்.

அத்துடன், முப்படையினர், அரச அதிகாரிகள். சிவில் அமைப்புக்கள் என பலரும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :