You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்
ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
'ஷா தின்' எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்துத் தாக்கினர்.
ஷா தின்னில் காவல் துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
நடைபாதைகளில் செங்கற்களை பெயர்த்து எடுத்து காவல் துறை மீது வீசிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியது.
போராட்டத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான ஹாங்காங் விமான நிலையத்தை சென்றடைவதைத் தடுக்கும் வகையில், ஷா தின்னில் இருந்து விமான நிலையம் செல்லும் 'எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில்' தடமும் மூடப்பட்டது.
போராட்டடத்தின் பின்னணி மற்றும் கோரிக்கைகள் என்ன?
குற்றப்பின்னணி உடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட வரைவை எதிர்த்து இந்தப் போராட்டம் தொடங்கியது. எனினும் இது ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பாதித்து, சீன தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்று போராட்டங்கள் வெடித்தது.
1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹாங்காங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், 'ஒரு நாடு இரு அமைப்பு முறை' எனும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
இந்தத் தன்னாட்சி உரிமை 2047இல் முடிவுக்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹாங்காங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக்கூடாது என்றும் அந்த நகர மக்கள் விரும்புகின்றனர்.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு நாடு கடத்தினால், அது ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைகளை பாதிக்கும் என்றும் சீனாவின் தலையீட்டை அதிகரிக்கச் செய்யும் என்றும் அந்த மசோதா ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது விமர்சனங்கள் எழுந்தன.
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களை சட்ட ரீதியாக அச்சுறுத்தவும் அந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் போராடினர்.
பெரிய அளவில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து இந்தச் சட்ட மசோதாவை இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்த ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம், அதை அறிமுகம் செய்ததற்கு மன்னிப்பும் கோரினார்
போராட்டங்கள் தொடர்ந்ததால் அந்தச் சட்ட வரைவை விலகிக்கொள்வதாக கேரி லாம் அறிவித்த பின்னரும் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்கள் தொடர்கின்றன. கேரி லாம் சீன அரசுக்கு ஆதரவான நிலை உடையவராக பார்க்கப்படுகிறார்.
போராட்டக்காரர்கள் காவல் துறையால் தாக்கப்பட்டது குறித்த தன்னிச்சையான விசாரணை மற்றும் போராட்டங்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் ஊடுருவி போராடியவர்களைத் தாக்கியதற்கு எதிரான நடவடிக்கை ஆகியன இப்போது போராட்டங்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்