You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்" - கோட்டாபய ராஜபக்ஷ
வட மாகாண தமிழ் மக்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.
தனக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை, எல்லைக்குள் இருந்து நிறைவேற்றாது, எல்லைக்கு அப்பாற் சென்று நிறைவேற்றுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதற்கமைவாகவே எல்லைக்கு அப்பாற் சென்று தனது பொறுப்பை நிறைவேற்ற முயற்சித்தமையினாலேயே, இலங்கையில் நிலைக்கொண்டிருந்த 30 வருட கால யுத்தத்தை, மூன்றரை வருட காலத்தில் முடிவுக்கு கொண்டு வர முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
''என்னிடம் ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் சரிவர நிறைவேற்றிய நான், மக்களின் தேவைகளையும் அதேபோன்று நிறைவேற்றுவேன். 20 வருட ராணுவ வாழ்க்கையும், 10 வருட அரச வாழ்க்கையிலும் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நான் நிறைவேற்றினேன். எல்லைக்குள் இருந்து அந்த பொறுப்புகளை நிறைவேற்றாது, எல்லையை மீறியாவது அந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்.
எல்லையை மீறி செயற்படுகின்றமையினாலேயே 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தை மூன்றரை வருடங்களில் நிறைவேற்ற மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்க என்னால் முடிந்தது. தாய் நாட்டிற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு சக்திகளுக்கு தலையிட இடமளிக்க முடியாது. எமது நாட்டில் பல்வேறு இனத்தவர்கள், மதத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும். இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் அச்சமின்றி, சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன். இனவாத தீவிரவாதமொன்றை மீண்டும் உருவாக்க இடமளிக்கமாட்டேன். பாதுகாப்பான நாடொன்றை மீண்டும் கட்டியெழுப்புவேன். வடக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
அரச ஊழியர்கள் சுதந்திரமாக கடமையாற்றிக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன். பெண்கள் அச்சமின்றி எந்தவொரு நேரத்திலும் செல்லக்கூடிய நாடொன்றை உருவாக்க வேண்டும். அதனை நாம் செய்வோம். பாதிக்கப்பட்டுள்ள ராணுவத்தினர், விசேட தேவையுடையவர்களுக்கு சிறந்ததொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன். அனைத்து உலக நாடுகளுடனும் நான் நல்ல தொடர்பை பேணுவேன்.
எனினும், நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். உலக நாடுகளிடம் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்காத வகையில் செயற்படுவேன். எமது தவறுகளை சரி செய்து, நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எம்முடன் கைக்கோர்க்குமாறு அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். பிளாஸ்டிக் இல்லாத ஒரு தேர்தல் பிரசாரத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம். இதனூடாக தேர்தல் கலாசாரத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம்" என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்