You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை? பக்ரித் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுமா? - களத்தில் இருந்து பிபிசி
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்து ஒரு வாரம் முடிவடைய உள்ளது. ஆறாவது நாளான இன்று ஸ்ரீநகரில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஸாடா.
அவர் இன்று மாலை 4 மணியளவில் பிபிசி செய்தி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, அங்கு நிலவும் சூழ்நிலையை பதிவு செய்தார்.
"இன்று காலை முதல் ஸ்ரீநகரில் நிலைமை இயல்பாகவே இருந்தது. வீதிகளில் வாகனங்கள் செல்வதை பார்க்க முடிந்தது. போக்குவரத்து நெருக்கடி கூட ஏற்பட்டது. எல்லாம் இயல்பாகவே காட்சியளித்தது.
ஆனால், கடைகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. குறைந்தளவு பாதுகாப்புப் படையினர் மட்டுமே வீதிகளில் இருந்தார்கள். சாலை தடுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தன. எல்லாம் சாதாரணமாக இருந்தது.
ஆனால், நண்பகல் 12 மணிக்கு பின்னர் நிலைமை இங்கு தலைகீழாகிவிட்டது. திடீரென வீதிகள் வெறிச்சோடின. பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். சாலை தடுப்புகள் மீண்டும் போடப்பட்டன.
தற்போது நான்கு மணிக்கு, நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, இங்கு ஸ்ரீநகர் தெருக்களில் பாதுகாப்புப் படையினர் மட்டுமே இருக்கிறார்கள். இந்த திடீர் மாற்றம் ஏன் என்று தெரியவில்லை.
ஏனெனில், இங்கு இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று மாலை ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதாக அறிவிக்கப்பட்ட பின்பு சூழ்நிலை சாதாரணமாகதான் தோன்றியது. சாலைகளில் மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது. வாகனங்கள் சென்றன. இன்று காலையும் அதேபோலதான் இருந்தது.
ஆனால் மதியம் 12 மணிக்கு அனைத்தும் மாறிவிட்டது. என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சித்தோம். ஆனால், அலைபேசி, தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பக்ரித் கொண்டாட்டம் - அரசு என்ன செய்ய போகிறது?
நாளை பக்ரித் பண்டிகை. ஸ்ரீநகரில் ஆண்டுதோறும் மக்கள் இப்பண்டிகையை ஒரு பெரிய மைதானத்திலோ அல்லது ஒரு பெரிய மசூதியிலோ ஒன்றாகக்கூடி தொழுகை செய்வது வழக்கம். ஒவ்வொரு தொழுகை கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பார்கள்.
நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அது ஒரு பகுதியில் நடந்த சம்பவம் மட்டுமே.
தற்போது நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இந்திய அரசு இந்த பக்ரித் தொழுகைகள் நடப்பதை எப்படி பார்க்கும், நிலையை எப்படி சமாளிக்கும் என்பதை பார்க்க வேண்டும்.
அனைவரும் பக்ரித் பண்டிகை கொண்டாட எங்களால் முடிந்தவற்றை செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
பக்ரித் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக, தொழுகைகள் செய்வதற்காக, இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை நாளை தளர்த்தும் பட்சத்தில், இங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம். ஏனெனில் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.
கடந்த ஐந்து நாட்களாக நான் இங்கு பலரிடம் பேசி வருகிறேன். அனைவரும் கோபத்துடன் இருக்கிறார்கள். அப்படியிருக்க அரசு இதனை எவ்வாறு சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை.
கூடுதல் ஆணையர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பக்ரித் பண்டிகை அன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்றும் மக்கள் வெளியே வந்து பொருட்களை வாங்கலாம், கொண்டாடலாம் என்றும் அதற்கு தங்களால் முடிந்தவற்றை இந்த நிர்வாகம் செய்யும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் இன்று மதியம் நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, நாளை அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டிருந்தன."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்