உரிமை கோரப்படாத 1000 கொள்கலன்கள் - விசாரணைகளை ஆரம்பிக்க நீதிமன்றம் அனுமதி

இலங்கை துறைமுகங்களில் உரிமை கோரப்படாத நிலையில் சந்தேகத்திற்கு இடமாக சுமார் 1000 கொள்கலன்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஷாருக்க ஏக்கநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளுக்கே திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைகளின்போதே குறித்த கொள்கலன்களை திறக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம், இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கொள்கலன்களில் கழிவுப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராயுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றது.

பிரிட்டனில் இருந்து சிலோன் மெட்டல் ப்ராசஸிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தினால் 2017ஆம் ஆண்டு முதல் கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன.

பயன்படுத்தப்பட்ட மெத்தைகள், கால் துடைப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவிக்கின்றது.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட கொள்கலன்களில் 130 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் ஆராயப்பட்டு, கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள பல ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் கொள்கலன்களில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

எனவே, சுங்கப் பிரிவினர், குறித்த கொள்கலன்களை திறந்து பார்த்தபோது அதில் கழிவுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை இலங்கை சுங்கம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை ஆரம்பித்தது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி, அதனை மீள் ஏற்றுமதி செய்யும் வகையிலேயே இந்த கழிவுகள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து கழிவுகளும் சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பெருமளவில் தீங்கு விளைவிக்கும் வகையிலான கழிவுகள் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

கட்டுநாயக்க பகுதியிலுள்ள கிடங்கு ஒன்றில் 130 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 27,685 மெற்றிக் டன் எடையுடைய கழிவுகள், 50,000 அடி நீளத்திற்கு வைக்கப்படடுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன், இந்த கழிவுப் பொருட்களில் மனித உடற்பாகங்கள் காணப்படுகின்றன என பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை அடுத்து, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் ஆய்வுகளை நடத்த தீர்மானித்துள்ளதாக அதன் மேலதிக பகுப்பாய்வாளர் டி. எச். எல். டபிள்யூ. ஜயமான பி.பி.சி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆய்வுகளை நடத்துமாறு விசாரணைகளை நடத்து தரப்பினரினால் தமக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் டி.எச்.எல்.டபிள்யூ.ஜயமான சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்குள் வெளிநாட்டு குப்பைகளை கொண்டு வர முடியுமா?

1980-ம் ஆண்டு 47-ம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டப்படி ஏதேனும் பொருட்களை கொண்டு வர வேண்டும் என்றால், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடமிருந்து சுற்றுச்சூழல் தேசிய பாதுகாப்பு அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனினும், சுற்றுச்சூழல் அதிகார சபையிடமிருந்து குறித்த தனியார் நிறுவனங்கள் எந்வொரு அனுமதியையும் பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறி இந்த கழிவுகள் நாட்டிற்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இலங்கை நிதிச் சட்டத்தில் 2013-ம் ஆண்டு ஜுலை மாதம் 11-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பிரகாரமே இந்த கழிவுகள் நாட்டிற்குள்கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சராக இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி மீள் ஏற்றுமதி மத்திய நிலையம் என்ற போர்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், சரக்கு போக்குவரத்து சர்வதேச உடன்படிக்கையின்படி, ஓரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கழிவுகளை அனுப்புவது சட்டவிரோதமானது என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

இந்த உடன்படிக்கைகளில் இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஓரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கழிவுகளை அனுப்பி வைப்பதற்கு, அரசாங்கத்தின் உரிய அனுமதி அத்தியாவசியமாகும்.

மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையே இதற்கான அனுமதியை வழங்க வேண்டியது அத்தியாவசியமாகும். எனினும், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை என தெரிவிக்கின்றது.

நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

இலங்கைக்கு கழிவுகளை கொண்டு வந்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சூழலை பாதுகாக்கும் கேந்திர நிலையம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கழிவுகளில் மருத்துவ கழிவுகளும் காணப்படுவதாக இந்த தரப்பினர் இந்த மனுவின் ஊடாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவ கழிவுகள் காணப்படுவதால், அது சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாக சூழலை பாதுகாக்கும் கேந்திர நிலையம் குறிப்பிடுகின்றது.

இந்த கழிவுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த தரப்பினர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த மனுவின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

கழிவுப் பொருள் இறக்குமதியாளருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

இலங்கைக்குள் வெளிநாட்டு கழிவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது குறித்து குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சட்டத்தரணிகளிடம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கழிவுப் பொருட்களின் பெறுமதியை விடவும் மூன்று மடங்கு அதிக அபராதத்தை விதிக்க சட்டம் காணப்படுகின்ற போதிலும், இந்த குற்றத்திற்கு அந்த அபராதம் போதுமானதாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இறக்குமதியாளர்கள் வசம் தற்போது காணப்படுகின்ற கழிவுப் பொருட்களை அவர்களே வைத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரே வகையிலான கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அதனை மீள் ஏற்றுமதி செய்யும் வர்த்தக நடவடிக்கைகள் தற்போது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் காணப்படுவதாக சிலோன் மெட்டல் ப்ரோஷஸிங் கோப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் வெள்ளி மாலை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தமது நிலைப்பாட்டை தெரிவித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சசிகுமரன் முத்துராமர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை சிலோன் மெட்டல் ப்ரோஷஸிங் கோப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமே இறக்குமதி செய்திருந்தது.

அரசாங்கத்தின் உரிய விதிமுறைகள்படி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் உறுதியாக கூறினார்.

பொதுவாக குப்பைகள் என அழைப்பது தவறாக கருத்து என கூறிய அவர், ஒரே வகையிலான கழிவுப் பொருட்களையே இறக்குமதி செய்து தாம் மீள் ஏற்றுமதி செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

கழிவுப் பொருட்களை ஒவ்வொரு விதமாக வகைப்படுத்தி, அதிலிருந்த ஒரு வகையான பொருட்களையே தாம் இலங்கைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த கொள்கலன்கள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் தானும் அந்த இடத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுப் பொருட்கள் மீள்சூழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, இதுவரை 27 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகுமரன் முத்துராமர் கூறினார்.

இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்ற இவ்வாறான கழிவுப் பொருட்கள் மீள் சூழற்சிக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் எஞ்சியுள்ள கழிவுகளை கூட இலங்கையில் வைத்துக் கொள்ள முடியாத நடைமுறை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இவ்வாறான கொள்கலன்கள் கொண்டு வரப்படும் சந்தர்ப்பம் முதல் அவை மீள ஏற்றுமதி செய்யப்படும் சந்தர்ப்பம் வரையான அனைத்து விடயங்களும் ஜீ.பி.எஸ் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சசிகுமரன் முத்துராமர் கூறினார்.

தாம் இறக்குமதி செய்த கொள்கலன்களில் எந்த வகையான மனித உடற்பாகங்களும் கிடையாது என்பதனை சுங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியதாக தெரிவித்த சசிகுமரன் முத்துராமர், மருத்துவ கழிவுப் பொருட்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ கழிவுகளை உள்நாட்டில் கூட பெற்றுக்கொள்ள முடியாது என சிலோன் மெட்டல் ப்ரோஷஸிங் கோப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சசிகுமரன் முத்துராமர் குறிப்பிட்டார்.

மெத்தைகள், இரப்பர் கம்பளம் உள்ளிட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்களே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த திட்டத்தை இலங்கை பயன்படுத்தி சுமார் 30 வருடங்கள் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

உலகிலுள்ள ஏனைய நாடுகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பெரிய வருமானத்தை ஈட்டி வருவதாக கூறிய சிலோன் மெட்டல் ப்ரோஷஸிங் கோப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சசிகுமரன் முத்துராமர், நாடு முன்னேற்ற பாதைக்கு செல்ல இதுவொரு சிறந்த திட்டம் எனவும் சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த கழிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த கொள்கலன்களில் சில கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், 111 கொள்கலன்கள் பல வருடங்களாக கொழும்பு துறைமுகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுங்கத் திணைக்களம், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :