'சஹ்ரான் ஹாஷிமை நான் நேரில் கண்டதே கிடையாது' - ரிஷாத் பதியூதீன்

ரிசாட் பதியூதீன்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமை தான் வாழ்நாளில் சந்தித்ததே கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

நிஷ்கார் என்ற நபருடன் தான் இருக்கும் புகைப்படமொன்றை காண்பித்து தான் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதாக போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் நிஷ்கார் போலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, தான் மொஹமட் சஹ்ரான் தொடர்பில் அறிந்துக் கொண்டதாக கூறிய அவர், சஹ்ரானை தான் புகைப்படத்தில் மாத்திரமே கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக கூறப்படும் சம்பவத்தையும் ரிஷாத் பதியூதீன் நிராகரித்தார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மாத்திரமே தமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி காத்தான்குடி பகுதியில் போட்டியிட்டதாக அவர் கூறினார்.

எனினும், அந்த சந்தர்ப்பத்தில் கூட சஹ்ரானுடன் எந்தவித உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவில்லை என ரிஷாத் பதியூதீன் குறிப்பிட்டார்.

sahran hasim
படக்குறிப்பு, சஹ்ரான்

8,000 ஏக்கர் காணி தனக்கு இருப்பதாக கூறப்படும் சம்பவம் முழுமையாக உண்மைக்கு புறம்பானது என கூறிய அவர், தனக்கு 55 ஏக்கர் காணி மாத்திரமே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு 55 ஏக்கர் காணியைவிட மேலதிகமாக உள்ள அனைத்து ஏக்கர்களையும் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரிஷாத் பதியூதீன் தெரிவுக்குழு முன்னிலையில் கூறியிருந்தார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ரிஷாத்திற்கும் தொடர்பு கிடையாது - தெரிவுக்குழு

ரிஷாத் பதியூதீனுக்கும், பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றமை குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத் தெரிவுக்குழு தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவிக்கின்றார்.

பதில் போலீஸ் மா அதிபரினால், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தை, தெரிவுக்குழு விசாரணைகளின்போது ஊடகங்களுக்கு வாசித்து காட்டியதன் ஊடாக இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சரான ரிஷாத் பதியூதீன், முன்னாள் ஆளுநர்களாக அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தொடர்பில் போலீஸ் தலைமையகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணை தொடர்பில் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: