உலகக் கோப்பை 2019: இலங்கை அணியை எளிதாக வென்ற தென் ஆப்ரிக்கா - வெற்றி பெற்றும் பலனில்லை

பட மூலாதாரம், LINDSEY PARNABY/AFP/Getty Images
ஐசிசி 2019 உலகக் கோப்பை போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்ரிக்க அணி இலங்கை அணியை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
செஸ்டர் லெ ஸ்ட்ரீட்டில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கியது போட்டி. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அனைத்து விதத்திலும் சிறப்பாக விளையாடிய தென் ஆப்ரிக்க அணி இலங்கை அணியை தோற்கடித்தது.
இதன்மூலம் இலங்கை அணியின் அரை இறுதி கனவை கடினமாக்கியுள்ளது தென் ஆப்ரிக்கா.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களை மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியின் பெரேரா மற்றும் அவிஷ்கா 30 ரன்களை எடுத்திருந்தனர் அதுவே அந்த அணியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும்.
அந்த அணியின் கேப்டன் திமுத் கருணரத்ன போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார் எனவே இலங்கை அணியின் தொடக்கம் மோசமாகவே இருந்தது. பத்து ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்து சரிவில் இருந்து மீள முயற்சித்தது.

பட மூலாதாரம், Stu Forster-IDI/IDI via Getty Images
இலங்கை அணியின் பேட்டிங்கின் போது மொத்தம் 184 பந்துகள் ரன்கள் ஏதும் எடுக்காமல் வீணடிக்கப்பட்டன. இந்த தொடரில் அதிகபட்சமாக இத்தனை பந்துகளில் ரன் எடுக்காமல் போனது இதுவே முதல் முறை. மேலும் தென் ஆப்ரிக்க அணி தங்களின் பந்து வீச்சில் தொடர்ந்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்து வந்தது.
நெருக்கடி தந்த தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்க அணியின் மோரிஸ் மற்றும் ப்ரிடோரியஸ் தலா மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 76 பந்துகள் மிதமிருந்த நிலையில், ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
அந்த அணியின் டு ப்ளசிஸ் அவுட் ஆகாமல் 96 ரன்களையும், ஹஷிம் ஆம்லா 80 ரன்களையும் எடுத்தனர்.
இந்த போட்டித் தொடரில் ஏழு ஆட்டங்களில் மொத்தமாக 123 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஆம்லா, மலிங்கா வீசிய தொடக்க ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார்; அதன்பின்னர் நிதானமாகவே விளையாடி ரன்களை சேர்த்தார்.
தற்போது இங்கிலாந்து அணியைக் காட்டிலும் இரண்டு புள்ளிகள் குறைவாக பெற்று இலங்கை அணி ஏழாம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி முதல் நான்கு இடங்களை பிடிக்க அடுத்து வரக்கூடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும். அதில், இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வி காணாத இந்திய அணியுடனும் மோதவுள்ளது இலங்கை அணி.

பட மூலாதாரம், AFP/Getty images
இங்கிலாந்து அணி தற்போது எட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால் இங்கிலாந்து முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பது பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளின் வெற்றி தோல்வியையும் சார்ந்துள்ளது. சனிக்கிழமையன்று பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுடன் விளையாடவுள்ளது.
தென் ஆப்ரிக்கா ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. இது இந்த உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் இரண்டாம் வெற்றியாகும்.
இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணியை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்ரிக்கா. நான்கு தொடர் தோல்விக்கு பிறகு பெற்ற அந்த வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கையை கொடுத்த போதிலும் அதனை தக்க வைத்துக் கொள்ள அந்த அணியால் முடியவில்லை.
புள்ளிகள் வரிசையில் தற்போது 12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 11 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
"நாங்கள் மிகவும் தாமதமாக விக்கெட்டுகளை எடுத்தோம். தென் ஆப்ரிக்கா சிறப்பாக பந்து வீசியது.அவர்கள் ஒரு நெருக்கடியை உருவாக்கிவிட்டார்கள். ஒவ்வொரு ரன்களாக எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் நாங்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்," என இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன தெரிவித்தார்.
"நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றி. இறுதியாக எங்களை நாங்கள் நிரூபித்துவிட்டோம்."
"எங்கள் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இது வெற்றியாகவே இருந்தாலும். அதில் பெரிதும் சந்தோஷமில்லை," என்று போட்டி முடிந்த பிறகு தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டு ப்ளசிஸ் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












