You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சஹ்ரான் ஹாஷிமின் முகாமிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
இலங்கையில் ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு மூளையாகச் செயற்பட்டதோடு, சங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் என, இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் காத்தான்குடி - ஒல்லிக்குளம் முகாமிலிருந்து வெடிபொருட்கள் உட்பட ஆயுதங்களை, நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
சஹ்ரானின் நெருங்கிய நண்பர் முகம்மத் மில்ஹான் என்பவரிடமிருந்து குற்றப் புலனாய்வு பிரிவினர் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியதோடு, அதற்கான பயிற்சிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த 30 வயதுடைய மில்ஹான், செளதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அங்கு கைது செய்யப்பட்டு கடந்த 14ஆம் தேதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை, சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மேலும் 4 பேர், மில்ஹானுடன் செளதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, மில்ஹான் உள்ளிட்ட ஐந்து பேரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, மேற்படி வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை மில்ஹான் வழங்கியுள்ளார்.
இதற்கிணங்க கொழும்பிலிருந்து மில்ஹானை அழைத்துக் கொண்டு காத்தான்குடி - ஒல்லிக்குளம் பகுதியிலுள்ள சஹ்ரானின் முகாமுக்கு வந்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி பொருட்களை மீட்டுள்ளனர்.
குழாய்களுக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மேற்படி பொருட்கள் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தகவலை காத்தான்குடி போலீஸார் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினர்.
இதன்போது ஜெலக்நைட் குச்சிகள், வயர்கள், திரவ நிலையிலுள்ள ஜெலக்நைட், துப்பாக்கி ரவைகள், டெட்டனேட்டர்கள் மற்றும் வாள்கள் ஆகியவை பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டன.
காத்தான்குடி - ஒல்லிக்குளம் பகுதியிலுள்ள இந்த முகாம், கடந்த மே மாதம் பாதுபாப்புத் தரப்பினரால் முற்றுகை இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாசீன் பாவா அப்துல் ரஊப் என்பவருக்குச் சொந்தமான காணியில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த இடத்திலிருந்தே தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான பயிற்சிகள் பெறப்பட்டிருக்கக் கூடும் என்று, அப்போது போலீஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இந்த முகாமில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருந்த தகவலை வழங்கிய மில்ஹான் என்பவர்தான், வவுணதீவில் போலீஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியென போலீஸார் தெரிவித்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்