கிரீன்லாந்து பனிவிரிப்பின் கீழ் பதுங்கியுள்ள ஏரிகள் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக நான்கு ஏரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

அண்டார்டிகாவில் உள்ள பனி விரிப்பின் கீழ் சுமார் 470 ஏரிகள் இருக்கின்றன. ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நடத்திய இந்த ஆய்வில் வட துருவப்பகுதியிலும் இவ்வாறான ஏரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

நிலப்பரப்பிற்கு மேலிருந்து வரும் அழுத்தமும், அடியில் இருந்து வரும் ஜியோதெர்மல் வெப்பமும் அந்த ஏரிகளை திரவ நிலையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அபார வெற்றி

மான்செஸ்டரில் நடந்த இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2019 உலகக்கோப்பை போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இதுவரை நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத அணி என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலால் லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.

ஏஐ 191 விமானம் மும்பையிலிருந்து அமெரிக்காவில் உள்ள நெவார்க்கிற்கு சென்று கொண்டிருந்தது.

விமானம் தரையிறங்கிய சமயத்தில் பிரிட்டனின் ராயல் ஏர் போர்ஸ் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியது.

வெடிகுண்டு மிரட்டலால் விமானம் தரையிறக்கப்பட்டது என முதலில் ட்வீட் செய்த ஏர் இந்தியா பின்னர் அந்த ட்வீட்டை நீக்கியது. பிறகு இந்த சம்பவத்தை பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியது.

அதிர்ச்சியில் ஆழ்த்திய உயிரிழந்த தந்தை - மகளின் புகைப்படம்

அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை - மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது.

தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில் மூழ்கியவாறு வெளியான புகைப்படம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"இதனை நான் வெறுக்கிறேன்" என்று இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை தடுக்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடுமையான கொள்கைகளை அமல்படுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில் பின்தங்குகிறதா?

மத்திய அரசின் நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழகம் பொதுச் சுகாதாரத் துறையில் பல படிகள் கீழிறங்கியிருக்கிறது. ஆனால், புள்ளிவிவரங்கள் தவறானவை என்கிறது தமிழ்நாடு அரசு.

பொதுச் சுகாதாரத் துறையில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பது தொடர்பான புள்ளிவிவரங்களை National Institution for Transforming India (நிடி ஆயோக்) அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பொதுச் சுகாதாரத் துறையில் 3வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

பொதுச் சுகாதாரத் துறையில் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் 74.01 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும் 28.61 புள்ளிகளுடன் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :