You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சஹ்ரான் குழுவினருக்கு வாடகை வீடு எடுத்து கொடுத்தவர் வீட்டில் சோதனை
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகச் செயற்பட்டு வந்த சியாம் என்பவர், கல்முனையில் தங்கியிருந்த வீடொன்றில், நேற்று வியாழக்கிழமை இரவு பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சி.டி.கள் சிலவற்றினையும் கைப்பற்றியதாக, பாதுகாப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரச புலனாய்வுப் பிரிவின் அம்பாறை மாவட்ட அதிகாரிகள் மற்றும் தடயவியல் போலீஸார் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சியாம் கல்முனையைச் சேர்ந்தவர். இவருக்கு கல்முனையில் சொந்த வீடு உள்ளது. இந்த நிலையில் ஒரு வீட்டை வாடகை எடுத்துகொண்டு அங்கு, சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த வீட்டிலேயே நேற்றிரவு பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் நடத்தியதோடு, அங்கிருந்த கிணறு ஒன்றிலிருந்து சந்தேகத்துக்கிடமான பொருட்களையும் கைப்பற்றியதாகத் தெரியவருகிறது.
இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இந்த கிணற்றிலிருந்த நீரை இறைத்த பின்னர், அந்த கிணற்றினுள் தேடுதல் நடத்தப்பட்டது.
ஆனால், அங்கு செய்தி சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கல்முனையில் வைத்து கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட சியாம் எனும் இந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அன்றைய தினம் மேலும் சிலரை, பாதுகாப்புத் தரப்பினர் கைது செய்திருந்தனர்.
சஹ்ரான் குழுத் தற்கொலைதாரிகள் நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் தங்கியிருந்த வீடுகளை, வாடகைக்கு பெற்றுக் கொடுத்தவர் சியாம் என்றும், தற்கொலைதாரிகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் வழிகாட்டியாக இவர் செயற்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்தமருதில் தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்த நேரத்தில், சியாம் எனும் இந்த நபர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்துள்ளதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவு அலுவலர் ஒருவர் பிபிசிக்கு கூறினார்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் ஓரிடம்கூட வெல்லாத பாஜக: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா?
- பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் தெரீசா மே
- 181 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி பதவியை இழந்த வேட்பாளர்
- ஐந்தே தொகுதிகள்- இடதுசாரிகளின் பெரு வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
- பாஜக-வுக்கு மீண்டும் பெரும் வெற்றி: எப்படி சாத்தியமானது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்