இலங்கை குண்டுவெடிப்பு: வாள், கத்திகளை ஒப்படைக்க பொதுமக்களுக்கு உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் பொதுமக்கள் சட்டவிரோதமாக தாங்கள் வைத்துள்ள வாள்கள், கத்திகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை போலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு போலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக வைத்துள்ள கூரிய ஆயுங்களை இன்றைய தினத்திற்குள் ஒப்படைக்குமாறு போலிஸ் ஊடகப் பேச்சாளர் போலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏதேனும் கூரிய ஆயுதங்கள் தொடர்பில் சட்ட விளக்கத்தை அளிக்க முடியுமாயின், அவ்வாறான ஆயுதங்கள் ஒப்படைக்க தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து போலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்திரளான வாள்கள், கத்திகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இதேவேளை, இராணுவ சீருடையை ஒத்ததான சீருடைகள் காணப்படுமாயின், அவற்றையும் இன்றைய தினத்திற்குள் போலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு உளவியல் பயிற்சி
பயங்கரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் உளநலம் குறித்து ஆராய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவிக்கின்றது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, பெற்றோர், உறவினர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களை இழந்து, உள அளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குண்டுத் தாக்குதலில் பெருமளவான சிறார்கள் உயிரிழந்திருந்ததுடன், பெருமளவான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சிறார்களை அடையாளம் கண்டு, அவர்களை மனோநிலையை மாற்றுவதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் தேதி வரை மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளைய தினம் முழுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ள பின்னணியில், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை, பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாடசாலைகளில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமைகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாடசாலை மற்றும் பாடசாலையை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றமை குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












