விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் தலைவர் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் படையினர் மேற்கொண்டுவரும் தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களின் படங்கள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டு கோப்பாய் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர்களின் விடுதி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் போது பல்கலைக்கழக கலைப்பீடத்திற்குள் நடத்தப்பட்ட தேடுதலின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பலரின் புகைப்படங்கள், பதாகைககள் மீட்கப்பட்டன.
குறித்த பதாகைகள் மற்றும் புகைப்படங்கள் கலைப்பீடத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் தொகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளன.
இதனால் இது தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் விசாரணைக்காக கோப்பாய் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைகக்ப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அப்போதிலிருந்தே நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, தேடுதல் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












