நீர் மேலாண்மை: ‘கேப்சூல்’ தண்ணீர் கொடுக்க நேரிடும், ஆப்பிரிக்கா நிலைதான் தமிழகத்திற்கு ஏற்படும் - எச்சரித்த நீதிபதிகள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும்'
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களில் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும் என தமிழக அரசை எச்சரித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலவசங்களைத் தவிர்த்து அணைகள் கட்ட வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது வெள்ளநீர் வீணாகக் கடலில் கலந்தது. இதையடுத்து சென்னையில் நவீன நீர் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்தக் கோரி வழக்கறிஞர் விபிஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ''வருவாய் ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என உள்ள நீர்பிடிப்புப் பகுதியை அதிகரிப்பதன் மூலம் வெள்ளநீர் வீணாகக் கடலுக்கு செல்வதைத் தடுக்க முடியும். ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் வெள்ள சேதமும் கட்டுப்படுத்தப்படும்'' என வாதிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பொதுப்பணித்துறை சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, சென்னையில் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்த 10 ஆயிரத்து 347 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 4 ஆயிரத்து 161 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அடையாறு ரூ.6.18 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், அடையாறு ஆற்றின் ஓரங்கள் ரூ.50 லட்சம் செலவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல கூவம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகவும், மேலும் 56 பணிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க ரூ.100 கோடி செலவில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், கழிவுநீர் கால் வாய்களை 6 மாதத்துக்குள் சரியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்பணிகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்து, கடமை தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீரை கிடைக்கும் போது வீணாக்கிவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்துக்கும் ஏற்படும். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால் ஆறு, ஏரி, குளங்களி்ல் பார்த்த தண்ணீரை 'கேப்சூல்' வடிவில்தான் பார்க்க நேரிடும். மக்களின் வரிப்பணத்தை இலவசங்களுக்குப் பயன்படுத்துவதை தவிர்த்து, கூடுதலாக அணைகள் கட்டுவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி: 'மோதி, அமித் ஷா மீது புகார்: உச்சநீதிமன்றம் கெடு'

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதி, அமித் ஷா மீதான புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் மே 6-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
2019 மக்களவைத் தேர்தல் தேதிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் 10-ம் தேதி அறிவித்தார். அன்றைய தினத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த தேர்தல் நடத்தை விதிகள் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த நிலையில், பிரதமர் மோதி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும், அதுதொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மோதி மற்றும் அமித் ஷா தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி 11 புகார்களை அளித்துள்ளது. அதில் ஏற்கெனவே 2 புகார்கள் மீது முடிவு எடுக்கப்பட்டுவிட்டது" என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த சுஷ்மிதா தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம். சிங்க்வி, "காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் மோதி, அமித் ஷாவுக்கு எதிராக 11 புகார்களை அளித்துள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை 2 புகார்கள் குறித்து மட்டுமே முடிவெடுத்துள்ளது" என்றார்.
இதையடுத்து, "இந்த வழக்கு குறித்து அடுத்தகட்டமாக மே 6-ஆம் தேதி விசாரிக்கப்படும். அதற்குள் மீதமுள்ள புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவேண்டும்" என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது'

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
பின் வருமாறு அந்த செய்தி விவரிக்கிறது,
தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழக கடற்கரை பகுதிகளில் ஃபானி என்ற புயல் கரையை கடக்கக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்தபோது, ஓரளவு மழை வரும், அதனால் வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் புயல் திசைமாறி தற்போது ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் கரையை கடக்கிறது. இந்த நிலையில் மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழகத்துக்கு தற்போது வெயிலின் தாக்கம் தான் அதிகமாக கிடைத்து இருக்கிறது. கடந்த 2 தினங்களாக வெயில் பதிவு வழக்கத்தை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து இருக்கிறது.
அதிலும் நேற்று தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. இதில் வேலூர், திருத்தணியில் 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. திருச்சி, சென்னை, மதுரையில் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி உள்பட முக்கிய நகரங்களில் நேற்று பிற்பகலுக்கு மேல் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
'மேகக்கூட்டங்கள் அதிகமாக இருப்பதால் நிலக்காற்று மேல்நோக்கி செல்ல முடியாமல் மீண்டும் தரைப்பகுதியை அடைகிறது. இதன் காரணமாக தான் அனல் காற்று வீசுகிறது' என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
ஃபானி புயல் வடக்கு, வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா மாநிலம் பூரி அருகே கோபால்பூர்-சாண்ட்பாலி இடையே 3-ந் தேதி (இன்று) பிற்பகலில் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 170 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் வெப்பசலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: சேலத்தில் மோதல் சாவு
பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த கதிர்வேல் என்பவரை சேலத்தில் போலீஸார் என்கவுண்டர் செய்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
என்கவுண்டர் சம்வத்தின்போது காயமடைந்த ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீஸாரின் கூற்றுப்படி, கதிர்வேல் மற்றும் அவரது கும்பல் சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பட்டர்ஃப்ளை மேம்பாலத்தின் கீழ் பயணிக்கும் குடும்பங்களை இலக்காக வைத்து, அவர்களிடம் கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.
ஒருமுறை ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கதிர்வேல் மீது பல புகார்கள் வந்ததையடுத்து அவரை கைது செய்ய போலீஸார் சென்றனர்.
"கைது செய்ய போனபோது, கதிர்வேல் தப்பியோட முயற்சித்ததாகவும், அவரை பிடிக்க முயன்ற போலீஸாரை தாக்கியதாகவும், இதனால் காவல்துறை ஆய்வாளர் கதிர்வேலை பார்த்து இரண்டு முறை சுட்டதாகவும்" போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதில் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவரது கும்பலில் உள்ள மற்ற நபர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












