You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை குண்டுவெடிப்பு: "அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்" - சியோன் தேவாலய பாதிரியார்
இலங்கையில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று.
அங்கு அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் ஸ்டான்ஸி.
அந்த தாக்குதலில் அவர், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஸ்டான்லியின் உறவினர்களின் 10 மற்றும் 13 வயது குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.
சீயோன் தேவாலய தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகியுள்ளனர் அதில் டஜன் கணக்கானோர் சிறுவர்கள்.
இலங்கை குண்டுவெடிப்பு - நேரில் கண்டவர் சொல்வதென்ன?
சீயோன் தேவாலயத்துக்குப் பொறுப்பான அருட்தந்தை வெளிநாடு சென்றிருப்பதால், அங்குள்ள பாஸ்டர் தேவாலயத்துக்குப் பொறுப்பாக இருக்கின்றார். இந்த நிலையில், சம்பவ நேரத்தில் பாஸ்டரும் வெளியே சென்றிருந்தமையினால், பாதிரியார் ஸ்டான்லியே குண்டு வெடித்தபோது தேவாலயத்துக்குப் பொறுப்பாக இருந்துள்ளார்.
"சீயோன் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் நபர், எமக்கு புதியவராக இருந்தார். எனவே, அவரிடம் பேசினேன். அவர் தன்னை ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த உமர் என்று அறிமுகம் செய்து கொண்டார்", என்று சம்பவம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் ஸ்டான்லி.
மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் ஓட்டமாவடி பிரதேசம் அமைந்துள்ளது.
முஸ்லிம் பெயரையுடைய அந்த நபர், கிறித்துவ தேவாலயத்துக்கு வந்தமை குறித்து நீங்கள் ஏதும் கேட்டீர்களா என ஸ்டான்லியிடம் கேட்டபோது, "நாங்கள் அவ்வாறு கேட்பதில்லை. எங்கள் தேவாலயத்துக்கு சகல மதத்தவர்களும் வருவார்கள். முஸ்லிம்களும் வருவார்கள் என்பதால் அது குறித்து அவரிடம் நான் கேட்கவில்லை" என்கிறார் ஸ்டான்லி.
மேலும், அந்த சந்தேக நபரை ஸ்டான்லி தேவாலயம் உள்ளே அழைத்துள்ளார். ஆனால், அவரோ தனக்கு அடிக்கடி தொலைப்பேசி அழைப்புகள் வரும், எனவே வெளியே செல்ல நேரிடும் என்று ஸ்டான்லியிடம் தெரிவித்துள்ளார்.
"நான் பேசிய நபர் தோள் பை ஒன்றை மாட்டியிருந்தார். அவர்தான் குண்டை வெடிக்கச் செய்ததாக சிறுவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், அவர்தான் அதை செய்தாரா என்பது எனக்கு தெரியவில்லை" என்கிறார் ஸ்டான்லி.
"ஞாயிறு வகுப்பை முடித்துக் கொண்டு தேவாலயத்துக்கு உள்ளே வந்து கொண்டிருந்த சிறுவர்களும், சில பெண்களும் தேவாலயத்தின் வெளியே இருந்த சமயத்தில் குண்டு வெடித்ததுவிட்டது." என்கிறார் ஸ்டான்லி
"சுற்றி நிறைய வாகனங்கள் இருந்தன. அனைத்தும் தீப்பிடித்துவிட்டன. யாரையும் காப்பாற்ற முடியவில்லை குழந்தைகளை முடிந்தவரை தூக்கி காப்பாற்றினோம்." என்று சொல்லும் போதே உடைந்து அழுகிறார் ஸ்டான்லி
"யார் யார் உயிர் பிழைத்தார்கள் என்றுகூட எனக்கு தெரியவில்லை அங்கும் இங்கும் ஓடி கடைசியில் என்னுடைய மனைவியையும் மகனையும் இந்த மருத்துவமனையில் சந்தித்தேன். இதில் நிறைய அப்பாவி மக்கள் இறந்துவிட்டனர்." என்கிறார் ஸ்டான்லி
இலங்கை குண்டுவெடிப்பு - 5 முக்கிய தகவல்கள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்