You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மஹிந்த சமரசிங்க: புலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதால், அதனை மீற முடியாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இறுதி கட்டப்போர் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையை பிரதிநிதித்துப்படுத்தி ஜெனீவா மனித உரிமை பேரவையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பல தடவைகள் பங்குபெற்றார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரம், 1987ஆம் ஆண்டு முதல் காணப்பட்ட ஒன்று என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அதன்பின்னர் யுத்தம் நிறைவடைந்த நிலையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் பல பிரேரணைகள் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன்படி, 2012, 2013மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பல பிரேரணைகள் இலங்கை தொடர்பில் மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டிருந்த போதிலும், 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையே மிகவும் பாரதூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
2015ஆம் ஆண்டு பிரேரணை அடிப்படையாகக் கொண்டு, இலங்கைக்கு பொருளாதார தடையை விதிக்க பல நாடுகள் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அதனை பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் முறியடித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, பல நாடுகளின் பிரஜாவுரிமை கொண்ட புலம்பெயர் தமிழர்களினாலேயே, பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை மனித உரிமை பேரவையில் கொண்டு வருவதாகவும் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
ஜெர்மனி, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற அந்த நாட்டு பிரஜாவுரிமையை கொண்ட புலம்பெயர் தமிழர்கள், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்களின் ஊடாக இவ்வாறான விடயங்களை செய்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 21ஆம் தேதி இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, அதில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று மற்றும் முப்பத்து நான்கின் கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பிரேரணையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள முப்பதின் கீழ் ஒன்று மற்றும் முப்பத்து நான்கின் கீழ் ஒன்று ஆகியன பாரிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையிலுள்ள முக்கிய தரப்பினர்; ஒன்றிணைந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதியுடன் வெளிவிவகார அமைச்சர் திலக்க மாரபன்னவினால் ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ள மஹிந்த சமரசிங்க. இலங்கையினால் எவ்வாறான விடயங்களை முன்னெடுக்க முடியும் என்ற கருத்துக்களை தாம் குறித்த அறிக்கையில்; உள்ளடக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு இலங்கை மீண்டும் இணை அனுசரணையை வழங்க எதிர்பார்த்துள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டினார்.
ஜெனீவாவிற்கு செல்லும் குழு நியமனம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்வதற்கான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன்னவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்படி, ஐந்து பேரை கொண்ட குழுவொன்று இந்த முறை மனித உரிமை பேரவையின் அமர்வுகளுக்காக ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன்ன தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிஷ்டர் ஜெனரல் நாயகம் நெரின்பிள்ளை ஆகியோரும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்குக் கொள்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் ஜனாதிபதியினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இந்த குழுவில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, இந்த குழுவிலிருந்து விலகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே, ஐவர் அடங்கிய குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்