You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு : நாடுகடந்த தமிழீழ அரசு
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'தமிழீழம் தேவை'
இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம அமைச்சரான விசுவநாதன் ருத்ரகுமாரன் வலியுறுத்தியுள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோளை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் முன் வைக்கிறோம். இலங்கை அரசின் திட்டமிட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். வடக்கு பிராந்தியத்தில் வீட்டுக்குவீடு ராணுவம் நிற்கிறது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே இலங்கை தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதற்கான தீர்வாக அமையும். இலங்கையில் இருஅரசுகள் என்ற தீர்வுக்கு இந்தியா ஆதரவளித்தால் உலக நாடுகளின் ஆதரவும் கிடைக்கும். ஈழத்தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக அரசியல் கட்சிகளும் இந்த கோரிக் கைக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக தமிழீழத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும்.
இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டம் ஓரிரு நாட்களில் கூடவிருக்கும்வேளையில் அதில் அங்கம் வகிக்கும் இந்தியா, ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண் டும். இந்தியாவில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு பிறப்புரிமை அடிப் படையில் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசியல் கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும்." என்று அமெரிக்காவில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக சென்னையில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
தினத்தந்தி: 'தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மைதான்'
தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மை தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"ஒவ்வொரு கட்சிகளுக்கும் என தனிக்கொள்கை இருக்கிறது. தேர்தல் கூட்டணிக்காகத்தான் சில கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்பது வழக்கம். அண்ணா ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தார் என்பது நாம் அறிந்ததே. நாங்கள் இந்த கூட்டணி அமைப்பதற்கான காரணம் தி.மு.க., காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகத்தான். குடும்ப அரசியல் கட்சி நடத்துபவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதற்காகத்தான் அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணி உருவாக்கப்பட்டது.
தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்தது உண்மை தான். இவ்வளவு காலம் எதிர்க்கட்சியாக இருந்ததால் தான் தமிழகத்திற்கான திட்டங்களை பெற முடியாமல் இருந்ததாக தலைமை கருதுகிறது. மீண்டும் மோடி ஆட்சி தான் வர இருக்கிறது." என்று திருச்சி மாவட்டம் கன்னிவடுகபட்டியில் நிருபர்களிடம் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
தினமணி: 'விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு'
இந்திய விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படவிருப்பதாக சனிக்கிழமை விடுக்கப்பட்ட தொலைபேசி மிரட்டலையடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"ஏர் இந்தியாவின் மும்பை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், இந்திய விமானம் பாகிஸ்தானுக்கு சனிக்கிழமை கடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதனைக் கருத்தில் கொண்டு, விமானப் பாதுகாப்புப் படைகளும், விமான சேவை நிறுவனங்களும் 8 பாதுகாப்பு அம்சங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
அதன்படி, விமான நிலையம், விமானங்கள் நிற்கவைக்கப்பட்டிருக்கும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெளியாட்கள் வருவது கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
மேலும், வாகனங்கள் மூலம் குண்டுவெடிப்பு நடத்தப்படுவதைத் தடுப்பதற்காக வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பயணிகளின் உடமைகள், சரக்குப் பொருள்கள், உணவுப் பொருள்கள், கடிதங்கள் ஆகிய அனைத்தும் தீவிர சோதனைக்குள்படுத்தப்பட்ட பிறகே விமானங்களில் ஏற்றப்பட வேண்டும்.
சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும், நேரடியாகவும் விமான நிலையத்தைச் சுற்றிலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஆபத்து நேரத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, விமான நிலையங்களுக்கு மிக அருகே சிறப்புப் படையினர் நிறுத்தப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."
- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'காஷ்மீருக்காக சண்டை, காஷ்மீரிகளுக்கு எதிராக அல்ல'
"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாம் நடத்தி வரும் போர், பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல' என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
"நமது போர் பயங்கரவாதத்துக்கு எதிரானதே தவிர, காஷ்மீருக்கோ, அந்த மாநில மக்களுக்கோ எதிரானது அல்ல. உண்மையில் அந்தப் போர் காஷ்மீர் மக்களை பாதுகாப்பதற்கானதாகும். ஏனெனில், காஷ்மீர் இளைஞர்களும் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நம்மோடு இணைய அவர்களும் தயாராக இருக்கின்றனர். 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வரும் அவர்கள், அமைதியை விரும்புகின்றனர். அவர்களை நம்மோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் மக்கள்தான் அமர்நாத் யாத்ரீகர்களை பாதுகாக்கின்றனர். ஓராண்டுக்கு முன்பு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, காயமடைந்தவர்களுக்காக ரத்த தானம் செய்து அவர்களது உயிரைக் காத்தது காஷ்மீர் முஸ்லிம் மக்கள் தான்.
தவறு செய்யக் கூடாது: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றிபெற வேண்டும் என்றால், நாம் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது. காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுபவர்களாகத் தான் நாம் பார்க்க வேண்டும்.
எனது காஷ்மீரைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்." என்று ராஜஸ்தான் மாநிலம், டோங்க் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் பிரதமர் நரேந்திர மோதி தொண்டர்களிடையே பேசியதாக கூறுகிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்