You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிம் ஜோங் உன்: எங்கு சென்றாலும் தொடர்வண்டியில் செல்லும் அதிபர் மற்றும் பிற செய்திகள்
எங்கு சென்றாலும் தொடர்வண்டியில் செல்லும் அதிபர்?
இதோ புறப்பட்டுவிட்டார் வட கொரியா தலைவர் கிம் ஜோன் உன். அமெரிக்க வட கொரியா இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை வியட்நாமில் நடக்க இருக்கிறது. இதற்காக வடகொரியாவிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்றார் கிம். சீன உள்ளூர் நேரப்படி சீன எல்லையான டாண்டோங்கிற்கு சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வந்தார். பேச்சுவார்த்தைகளை கடந்து நல்லெண்ண பயணமாகவும் கிம் வியட்நாம் செல்வதாக வட கொரியா அரசு ஊடகம் தெரிவிக்கிறது. இந்த பயணத்தில் கிம்முடன் அவர் சகோதரி இருக்கிறார் என நம்பப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் கூடுமான அளவு தொடர்வண்டியிலேயே பயணிக்கிறார். தென் கொரியா, சீனா செல்லும் போதும் தொடர் வண்டியிலேயே சென்றார். ரயில் மூலமாக சீனா வழியாக வியட்நாம் செல்ல இரண்டரை நாட்கள் ஆகும் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
வெனிசுவேலா நெருக்கடி: எல்லையில் கலவரம், அணி மாறும் காவல் படையினர்
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலாவுக்குள் உதவிப்பொருட்களை கொண்டு வரும் நோக்கில், வெனிசுவேலா - கொலம்பியா எல்லையில் இருந்த ராணுவ வீரர்கள் சிலர் காவல் சோதனைச் சாவடிகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என கொலம்பியாவின் குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.
கொலம்பியாவுக்கு வேலை தேடிச் செல்ல முயன்ற வெனிசுவேலா மக்கள் சிலரை எல்லையைக் கடக்க விடாமல் தடுக்க, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை எல்லையில் இருந்த காவல் படையினர் வீசிய சம்பவமும் இன்னொரு இடத்தில் நடந்துள்ளது.
மனிதாபிமான உதவிகளைச் சுமந்து வரும் சரக்கு வாகனங்களை வெனிசுவேலாவுக்குள் நுழைய அதிபர் நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசு தொடர்ந்து மறுத்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இலங்கை அரசியல்வாதிகளின் போதைப்பொருள் பயன்பாடு - அமைச்சரிடம் விசாரணை
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கொக்கேன் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவினால், ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.
குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க கூட்டம் போட்டு விவாதிக்கும் தம்பதிகள்
"குழந்தைகளை பெற்றெடுக்காதீர்கள்," என்ற செய்தியை பரப்புவதே வாழ்க்கையின் லட்சியமாக சிலர் கொண்டுள்ளனர். காரணம்? குழந்தைகளை உலகத்திற்கு கொண்டுவருவதற்கு முன் யாரும் அவர்களிடம் அனுமதி கேட்பது கிடையாது.
"குழந்தைகளை பெற்றெடுக்காதீர்கள்" இயக்கத்தினர் பெங்களூவில் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து இந்த இயக்கத்தை அரசு சாரா நிறுவனமாக மாற்றுவதை பற்றி ஆலோசித்தனர். சுமார் 30 நபர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தாலும் இருத்தலியல் பற்றிய கேள்விகள் பல எழுப்பப்பட்டது.
"இது ஒரு தார்மீக இயக்கம். எனது நண்பர்கள் பலருக்கும் குழந்தை பெற சிறிதும் ஈடுபாடு கிடையாது. குழந்தை பெற்றெடுப்பதும் பெற்றெடுக்காமல் இருப்பதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்ற கருத்தை பரப்ப இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளோம்," என்கிறார் மும்பையை சேர்ந்த 27 வயதான ரஃபேல் சாமுவேல். தனது பெற்றோர்கள் மீது வழக்கு தொடுப்பதாக அறிவித்ததன் மூலமாக சமூக ஊடகங்களில் பிரபலமானவர் ரஃபேல் சாமுவேல்.
அஸ்ஸாமில் விஷச் சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 99 பேர் பலி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 99 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 200க்கும் மேலானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களில் பெண்களும் அடக்கம்.
பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் விஷச் சாராயம் அருந்திய சுமார் 100 பேர் உயிரிழந்த இரு வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விரிவாக படிக்க:அஸ்ஸாமில் விஷச் சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 99 பேர் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்