டி-20 கிரிக்கெட்டில் 278 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் அணி, டி-20 கிரிக்கெட் போட்டியில் 278 ரன்கள் எடுத்து, சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் டேராடூன் நகரில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடரில், அயர்லாந்து அணிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்த்து.

இதற்கு முன்பு, 2016-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி எடுத்த, 263 ரன்கள் (3 விக்கெட் இழப்புக்கு) என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் முறியடித்துள்ளது.

ஆஃப்கன் அணியின் ஹஸ்ரதுல்லா ஜஜாய், 167 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் ஃபின்ச் டி-20 சர்வதேச சாதனையைவிட, ஹஸ்ரதுல்லா ஐந்து ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்திருக்கிறார்.

மேலும் டி20 போட்டியில் ஒரு ஜோடி அதிகபட்சமாக (236 ரன்கள்) எடுத்த ரன்கள் என்ற சாதனை படைக்கவும் ஆஃப்கன் அணிக்கு அவர் உதவினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விராத் கோலி - ஏபி டி விலியர்ஸ் இணை எடுத்த 229 ரன்களைவிட ஏழு ரன்கள் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, சர்வதேச டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட ஒரு இணை அடித்த அதிகபட்ச ரன்கள் 223. கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச் ற்றும் ஆர்கி ஷார்ட் இணை இந்த ரன்களை எடுத்தது.

ஹஸ்ரதுல்லா ஜஜாய், 62 பந்துகளில் 167 ரன்களை விளாசியுள்ளார். அதில், 16 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும்.

அவருடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை அயர்லாந்து அணியால் எட்ட முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: