You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ராணுவ பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்: காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் எதிர்ப்பு
இலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு இலங்கையின் வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி ஜோகராசா பி.பி.சி தமிழுக்கு தெரிவிக்கையில்:-
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்க்ளுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம்.
தற்பொழுது இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட யுத்த குற்றசாட்டுகளுக்கு உள்ளான ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடையும் போது மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருக்கின்றோம். அவர்கள் ஊடாக கையளிக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.இது வேதனைக்குரிய விடயம்.
இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்ககூடிய பொறுப்புவாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார்.இந்நிலையில், அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழும்புகின்றது?
நாங்கள் இரண்டு வருடமாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தெருவில் இருந்து தொடர்சியாக போராடி வருகின்றோம்.நாங்கள் நாளாந்தம் வேதனை பட்டு செத்து மடிந்து கொண்டிருக்கின்றோம்.எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது? என்ற பதிலினை தரவேண்டிய பொறுப்பில் சவேந்திர சில்வா இருக்கின்றார்.
இந்நிலையில், அவரை மேலும் பாதுகாக்கும் முகமாக ஜானதிபதியினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிப்பதோடு மிகவும் கவலை அடைகிறோம். எங்களுக்கான நீதியினை இந்த அரசாங்கம் பெற்று தரவேண்டும் என்றார் கனகரஞ்சினி ஜோகராசா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்