இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது

இலங்கை

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

இலங்கை நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்வுகள் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார தலைமையில் கூடியது.

சபை ஆரம்பிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேச ஆரம்பித்தார். ''கடந்த 14, 15, 16-ம் தேதிகளில் சபையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாணைகள் வேண்டும்'' எனக் கூறி அமர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த தினேஸ் குணவர்தன, நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆளும் கட்சி தரப்பில் இருக்க வேண்டும் எனக் கூறினார்.

இதனை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. மங்கள சமரவீர, அரசாங்கம் இல்லையெனில், எவ்வாறு பெரும்பான்மை உறுப்பினர்களை வழங்க முடியும் என எதிர்கேள்வியெழுப்பினார்.

உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய காலமே பேசுவதற்கு வழங்கப்பட்ட நிலையில், அடுத்த வாய்ப்பு ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டது.

'நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், தெரிவுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களை வழங்க முடியாது'' என்று கூறினார்.

இலங்கை

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA

இதன்பின்னர், பேசத்தொடங்கிய பிரதி சபாநாயகர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட தெரிவுக்குழு குறித்து உரிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 23ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது.'' என்று அறிவித்து சபை அமர்வுகளை முடித்துக் கொண்டார்.

மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தீர்மானிப்பதற்காக தெரிவுக்குழுவை அமைப்பது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கிறது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட வேண்டும் என ஆளும் கட்சி கோருகிறது.

ஆளும் கட்சி கோரும் சட்ட திட்டங்கள் என்ன என்பது குறித்து, நீண்டகாலமாக நாடாளுமன்ற செய்தி சேகரிப்பில் அனுபவம் வாய்ந்த மூத்த செய்தியாளர் ஒருவருடன் பேசினோம்.

Presentational grey line
Presentational grey line

''பொதுவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதுகுறித்து கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும். 5 வேலை நாட்களின் பின்னர் திகதியொன்று நிர்ணயிக்கப்பட்டு, விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன்பின்னர் பெயர் குறிப்பிட்டு வாக்களிக்க வேண்டும்''. இந்த நடைமுறையையே ஆளும் கட்சியினர் கோருகின்றனர் என்று நாடாளுமன்றச் செய்தியாளர் கூறினார்.

ஏன் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ளவில்லை?

'சபாநாயகருக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையே கருத்தொற்றுமை இல்லை. சபாநாயகர் பக்கசார்பாக செயற்படுவதாக மகிந்த அணியினர் கூறுகின்றனர். சபாநாயகர் தலைமையில் கடந்த மூன்று அமர்வுகள் கூடியபோது ஆளும் தரப்பினர் குழப்பத்த ஏற்படுத்தினர். இன்றும் சபாநாயகர் சபைக்குள் வந்தால், ஆளும் தரப்பினர் குழப்பம் ஏற்படுத்தக் கூடும் என்பதால் சபாநாயகர் அமர்வுகளை தவிர்த்திருக்கிறார். சபையின் அமைதியைக் கடைப்பிடிப்பதற்கான அணுகுமுறையாகவே சபாநாயகர் சபை அமர்வுகளில் பங்கேற்கவில்லை என கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். அதனால் இன்று பிரதி சபாநாயகர் தலைமையில் சபை கூடியது என்று விவரித்தார்.

இலங்கை

சபைக்கு வெளியே இன்றும் பெருமளவிலான போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். குழப்ப நிலை ஏற்பட்டால், பொலீசார் அழைக்கப்படுவதற்காகவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

நாளை இலங்கையில் விடுமுறை தினம் என்பதால் நாளை மறுதினம் கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடி தெரிவுக்குழு அமைப்பது குறித்து ஆராயவுள்ளதாக கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற சபை அமர்வுகளை அமைதியாகவும், கௌரவமாகவும் முன்னெடுப்பது என இணக்கம் காணப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண்பது குறத்து எவ்வித தீர்மானங்களும் நேற்றைய கூட்டத்தில் எட்டப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :