You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நவம்பர் 7ஆம் தேதியாவது கூடுமா இலங்கை பாராளுமன்றம்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இலங்கை பாராளுமன்றம் எப்போது கூட்டப்படும் என்பது குறித்த இழுபறி தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், நவம்பர் ஏழாம் தேதியன்று நாடாளுமன்றம் கூட்டப்படலாம் என சபாநாயகர் கரு ஜெயசூர்ய தெரிவித்திருக்கிறார். ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக பாராளுமன்றம் நவம்பர் 5ஆம் தேதி கூட்டப்படுமென கூறப்பட்டது. ஜனாதிபதி சிறிசேனவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அப்படியே தெரிவித்தார். ஆனால், அந்தத் தகவல் பிறகு மறுக்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதிக்கு முன்பாக பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கான வாய்ப்பில்லையென்றே சிறிசேன தரப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கு ஒன்றில் சபாநாயகர் கரு ஜெயசூர்யவைச் சந்தித்து உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டும்படி வலியுறுத்தினர்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான சுமந்திரன், "உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது குறித்து எதையும் பேசவில்லை." என்று தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது தங்களுக்குடைய ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை என்கிறார்கள்.
"அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் முடிவெடுப்போம். எப்போது முடிவெடுப்போம் என்பதையும் இப்போது சொல்ல முடியாது" என்கிறார் சுமந்திரன்.
புதிய பிரதமரை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன நியமிப்பதற்கு முன்பாக, பாராளுமன்றத்தில் ரணில் தரப்புக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவும் மஹிந்த - சிறிசேன தரப்புக்கு 95 இடங்களும் இருந்தன. தற்போது மஹிந்த - சிறிசேன தரப்பு ரணில் தரப்பிலிருந்து 5 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 இடங்கள் தேவைப்படும்.
இந்த நிலையில் ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பது முக்கியக் கேள்வியாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் கூட்டம் முடிந்த பிறகு பிபிசியிடம் பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூஃப் ஹக்கீம், "ஜனாதிபதி தரப்பு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து ஆட்களைத் திரட்டி தலைநகரில் தன் பலத்தைக் காண்பிக்க முயல்கிறது. ஆனால், பாராளுமன்றத்தைக் கூட்டி அதேபோல பலத்தைக் காண்பிக்கத் தயங்குகிறது. இது கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.
பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி ஒப்புக்கொண்டுவிட்டதாக ஜெயசூர்ய சொல்கிறார். ஆனால், இதுவரை அது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த இழுபறியின் மூலம், பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைகளுக்கு விலைபேசும் நிலை உருவாகியிருக்கிறது என்கிறார் ரவூஃப்.
அவர்களால் தேவையான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதனால்தான் பாராளுமன்றத்தைக் கூட்டுவதைத் தள்ளிப்போடுகிறார்கள் என்கிறார் ரவூஃப் ஹக்கீம்.
ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரசைப் பொறுத்தவரை தங்கள் நிலையில் மாற்றமில்லை என்றும் தொடர்ந்து ரணிலை ஆதரிப்பதாகவும் கூறும் ரவூஃப், தங்கள் உறுப்பினர்கள் யாரும் விலை போக மாட்டார்கள் என்கிறார்.
ரணிலை ஆதரிப்பது என்ற தங்கள் முடிவில் இதுவரை மாற்றமில்லையென்றே ஆல் சிலோன் மக்கள் காங்கிரசும் தெரிவித்துவருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்