You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணாநிதியின் மறைவிற்கு இலங்கைத் தலைவர்கள் இரங்கல்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், அவரது ஆதரவாளர் அனைவருக்கும் ஜனாதிபதி சிரிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மறைவினால் தாம் மிகுந்த துயர் அடைவதாக, மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இலக்கியம், சினிமா, அரசியல் ஆகிய துறைகளுக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில், கருணாநிதியின் இழப்பினால் வாடும் மில்லியன் கணக்கான மக்களுடன் தாமும் துயரைப் பகிந்து கொள்வதாக தனது ட்விட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிந்த ராஜபக்ச தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 94வது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார். எனினும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும், தமிழக அரசியலிலும், தமிழ்க் கலை இலக்கியத்திலும் ஆற்றிய மகத்தான பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்க முடியாத மன நிலைக்கு எம்மை ஆழ்த்தியுள்ளன'' என கூறியுள்ளார்.
மேலும் அவர், ''கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் சமூக ரீதியின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்கிக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்குக் குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அரசுப் பணிகளில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்று நம்புகின்றேன். இந்தியாவில் முதன் முறையாகப் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர் அவர்கள். தன்னால் இயன்ற அளவு மத்தியின் ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலைகொள்ள விடாது தடுப்பதற்காக அவர் உழைத்தார். தொழில் துறையில் மத்திய ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய - மாநில - தனியார் கூட்டு முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்று மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதை முன்கூடியே கணித்து இந்திய நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார்.'' என தெரிவித்துள்ளார்.
''இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். எனினும், முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்து அழிவைத் தடுத்திருக்க முடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு. தன் வாழ்வைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாகப் பதிவு செய்து விட்டு மறைந்துள்ள கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.'' எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :