You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் பிரிட்டன் ரக்பி வீரர்கள் மரணம்: நடந்தது என்ன? - விவரிக்கும் சாட்சியம்
''அன்று நள்ளிரவு ஒரு மணி இருக்கும். இரண்டு வெள்ளைக்காரர்கள் எனது ஆட்டோவில் வந்து ஏறினார்கள். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறினார்கள். 300 ரூபாய் கேட்டேன். சரியெனக் கூறி ஏறிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் ஹெராயின் கிடைக்குமா என கேட்டார். நான் முடியும் எனக் கூறினேன். அவர்களை பம்பலப்பிட்டிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு முக்கால் மணி நேரம் வரை ஹெராயின் வாங்குவதற்காக காத்திருந்தோம்.'' என்று தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார் ஆட்டோ சாரதி நியாஸ்.
நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த மே 10 அன்று பிரிட்டனைச் சேர்ந்த 'Clems Pirates Rugby' அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் தாமஸ் ஹாவர்ட் (25 வயது) மே 13 ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
இதன்பின்னர் தாமஸ் பெட்டி ( 26 வயது) அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மே 15ஆம் தேதியன்று உயிரிழந்தார். இவர்களின் மரணங்களில் மர்மம் நீடிக்கும் நிலையில் காவல் துறையினர் புலன்விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.
இந்த மரணங்களின் சாட்சியம் இன்று (ஜூன் 01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பதியப்பட்டது. மர்மமாக உயிரிழந்த ரக்பி வீரர்களை இறுதியாக ஏற்றிவந்த ஆட்டோ சாரதி இன்று தனது சாட்சியத்தைப் பதிவுசெய்தார்.
இதன்போது போலீசாரின் குற்றத் தகவல் புத்தகத்தில் ஒட்டப்பட்டிருந்த உயிரிழந்த ஒரு ரக்பி வீரரின் கடவுச்சீட்டு பிரதியை பார்த்து அடையாளம் காட்டினார். சம்பவ தினம் இரவு தனது ஆட்டோவில் வந்த ஒருவரே அது என ஆட்டோ சாரதி குறிப்பிட்டார்.
என்ன நடந்தது?
அப்போது அன்றைய தினம் இரவு (மே 12) நடந்த சம்பவத்தை விரிவாக விபரித்தார் சாரதி.
"கடந்த 15 வருடங்களாக நான் ஆட்டோ ஓட்டுகிறேன். இரவு நேரங்களிலேயே கூடுதலாக ஆட்டோ ஓடுகிறேன். அன்று பின்னிரவு 1 மணியளவில் இருவர் வந்தனர். அவர்கள் வெளிநாட்டவர்கள். கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் எனக் கூறினர். 300ரூபாய் கேட்டேன். சரி என்றார்கள். ஏறியவுடன் ஹெராயின் கிடைக்குமா எனக் கேட்டனர். நாங்கள் பம்பலப்பிட்டிய பிரதேசத்திற்கு சென்றோம்.”
"பம்பலப்பிட்டி கடற்கரை ஓரத்தில் ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தேடி சென்றோம். அப்போது அங்கிருந்த மற்றுமொரு ஆட்டோ சாரதியை சந்தித்தேன். அவரை எனக்குத் தெரியும். அவரது பெயர் சனா. 'மச்சான் இவர்கள் ஹெராயின் கேட்கிறார்கள்' என்றேன். அவர் எடுக்க முடியும் எனக் கூறினார்."
"சனாவை வெள்ளைக்காரருக்கு அறிமுகம் செய்தேன். வெள்ளைக்காரர் ஹெராயின் எடுக்க முடியுமா எனக் கேட்டனர். சனா முடியும் என்றார். காத்திருக்க முடியுமா எனக் கேட்க வெள்ளைக்காரர்கள் முடியும் எனக் கூறினார்கள். அவர்கள் குடிபோதையில் இருந்தார்கள்."
10 நிமிடத்தின் பின்னர் தன்னைப் பின்தொடருமாறு கூற, நாமும் சனாவின் ஆட்டோவை பின்தொடர்ந்தோம் என்றும், பின்னர் என்ன நடந்தது என்றும் ஆட்டோ சாரதி தொடர்ந்து விபரித்தார்.
"சனாவின் ஆட்டோ பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டது. ஒரு 30 மீ்ட்டர் தள்ளி நாம் காத்திருந்தோம். அப்போது சனா வெள்ளைக்காரரிடம் காசு கேட்டார். முடியாது எனக் கூறினர். பொருளை (போதைப் பொருளை) சோதனை செய்த பின்னரே பணம் தருவதாகக் கூறினார்கள். அப்படியென்றால் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என சனா கூறினார். அவர்களும் சம்மதித்தனர். 35 - 40 நிமிடங்களில் சனா திரும்பி வந்தார். 7 பக்கற் போதைப்பொருளை வெள்ளைக்காரர்களின் கையில் கொடுத்தார். அவர்கள் டார்ச் அடித்து பரிசோதித்தனர். ஒருவர் அதனை உறுதிப்படுத்தினார். ரூ.17,000 பணம் கொடுத்தனர். போதைப் பொருள் பக்கற்றுகளை வெள்ளைக்காரர் ஒருவர் (படத்தில் உறுதிப்படுத்தியவர்) தனது உள்ளாடைக்குள் மறைத்துக்கொண்டார். வேகமாக செல்வோம் எனக் கூறினார். அங்கிருந்து நாம் கிளம்பிவிட்டோம்”
இதன்பின்னர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்திற்கு வந்தபோது வெள்ளைக்காரர்கள் தனக்கு ஒரு சிக்கரெட் தந்ததாகவும் சிகரட்டைப் புகைத்துக்கொண்டே, அவர்கள் சொன்ன ஹோட்டலில் அவர்கள் இருவரையும் பின்னிரவு 2 மணியளவில் இறக்கிவிட்டதாகவும் ஆட்டோ சாரதி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
சவாரிக்கு ரூ.300 பேசப்பட்டாலும் அவர்கள் தனக்கு 2000 ரூபா கொடுத்ததாகவும் நீதிமன்றில் ஆட்டோ சாரதி தெரிவித்தார். எதற்காக அதிகமாக பணம் கொடுத்தனர் என நீதிபதி இதன்போது கேட்டார். அதற்குப் பதிலளித்த ஆட்டோ சாரதி, போதைப் பொருள் எடுக்க உதவியதற்காகவே இதனைக் கொடுத்ததாகக் குறிப்பிட்டார்.
சாட்சியத்தை முழுமையாக கேட்டுக் கொண்டிருந்த நீதிபதி லங்கா ஜயரத்ன, போதைப் பொருள் விற்பதும், போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள உதவுவதும் இலங்கைச் சட்டத்தின்படி குற்றம் என அறிவித்தார்.
எனவே, வெள்ளைக்காரருக்கு யார் போதைப் பொருளைப் பெற்றுக்கொடுத்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிடுவதாக அறிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீசாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, குறித்த பிரிட்டன் ரக்பி வீரர்கள் அதீத போதைப் பொருள் பாவனையினால் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவித்தனர்.
மர்மமாக உயிரிழந்த பிரிட்டன் ரக்பி வீரர்களின் முழுமையான மரண விசாரணை அறிக்கை இன்னமும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
மரண விசாரணை அதிகாரி சமர்ப்பித்த முதல் அறிக்கையில், உடலில் ஏற்பட்ட காயங்களினாலோ இயற்கையாகவோ இந்த வீரர்கள் உயிரிழக்கவில்லை என தெரியவந்தது.
இதனால் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவினரின் அறிக்கையும் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த அறிக்கைகள் எப்போது சமர்ப்பிக்கப்படும் என்று நீதிபதி இன்று போலீசாரிடம் கேள்வியெழுப்பினார்.
தமக்கு உரிய திகதியொன்றை கூற முடியாது என போலீசார் தெரிவிக்க, இந்த மரண விசாரணையை எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், போதைப் பொருளை வெள்ளைக்காரர்களுக்கு விநியோகித்தது யார்? அதனை விற்பனை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் புலன்விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்