You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வந்த பிரிட்டனின் இரண்டாவது ரக்பி வீரரும் மரணம்
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த பிரிட்டனைச் சேர்ந்த மற்றுமொரு ரக்பீ வீரரும் உயிரிழந்ததாக இலங்கை பொலிசார் உறுதிப்படுத்தினர்.
நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட கடந்த வியாழக்கிழமை (மே 10) 'Clems Pirates Rugby' அணியினர் இலங்கை வந்தனர். இந்த அணியின் இரண்டு வீரர்கள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 25 வயதான தாமஸ் ஹாவர்ட் (Thomas Howard) கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.. அத்துடன், 26 வயதான தாமஸ் பெட்டி (Thomas Baty) அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
தாமஸ் ஹவார்ட்டின் மரணம் காயத்தினாலோ, நோயினாலோ ஏற்படவில்லை என மரண விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த மரணம் குறித்து ஆராய்ந்த கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி எம்.என். ராகுல் ஹக், மேலதிக விசாரணைக்காக வீரரின் உடல் பாகங்களை இரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பிவைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாமஸ் பெட்டி இன்று (மே, 15) பிற்பகல் உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை கொழும்பு 'CR & FC' அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கலந்துகொண்ட பிரித்தானிய ரக்பி அணியின் வீரர்கள் சிலர், கொழும்பிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்குச் சென்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து இலங்கை ரக்பி சங்கத்தின் பணிப்பாளர் ரோஹான் குணசேகரவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, கொழும்பு 'CR & FC' அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்டுக்கூறும் வகையில் எவ்வித சம்பவங்களும் நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இந்த இரண்டு ரக்பி வீரர்களின் மரணம் குறித்து கொழும்பு கோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னதாக, திங்கள்கிழமையன்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட வீரர்களின் குடும்பத்தாருடன் பேசி வருவதாகவும், இலங்கை சுகாதார சேவைப் பிரிவினருடனும் இதுகுறித்த தகவல்களைப் பரிமாறி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியினர், நட்பு ரீதியான ரக்பி போட்டிகள் இரண்டில் விளையாட, கடந்த மே மாதம் 9ஆம் தேதி இலங்கைக்கு வந்தனர். 11ஆம் தேதி கொழும்பு 'CR & FC' அணியுடன் முதல் போட்டியில் விளையாடியனர். இரண்டாவது போட்டி மே 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடற்படை அணியுடன் வெலிசர என்ற மைதானத்தில் நடைபெறவிருந்தது.
பிற செய்திகள்:
- LIVE: கர்நாடகத் தேர்தல்- பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறுமா?
- காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம்
- ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிக்க பிராந்தியமாக இருப்பது ஏன்?
- மின் கட்டண ரசீது ரூ 8.64 லட்சம்: அதிர்ச்சியில் காய்கறி வியாபாரி தற்கொலை
- சர்வதேச கால்பந்து போட்டி: மாஸ்கோ சென்ற தமிழக தெருவோர குழந்தைகள்
- மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதவி பறிப்பு: காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்