You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் நிலைக்கொண்ட தாழ்வுநிலை காரணமாக நேற்று மாலை முதல் கடும் காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால், இலங்கையின் தென் பகுதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
மரங்கள், மின்கம்பங்கள், பாரிய பதாகைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தென் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற நால்வரின் சடலங்கள் இன்றுகாலை தென் கடற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் கரையொதுங்கியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த சீரற்ற வானிலை காரணமாக மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் சுட்டிக்காட்டினர்.
தென்மேற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட தாழ்வுநிலை தற்போது வலுவடைந்து கொழும்பிலிருந்து அரபு கடலை நோக்கி 350 கி.மீ தொலைவில் தற்போது காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றைய தினமும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என ஆய்வு மையத்தின் தலைவர் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.
களமிறங்கிய முப்படை வீரர்கள்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க முப்படையினரை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்தப்படியே உரிய தரப்பினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.
வானிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு 10,000 ரூபாய் ஆரம்ப உதவியாக வழங்கவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்