You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல நகரங்களை கலக்கிய ''வித்தியாசமான'' திருடர்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
வாசுதேவ் நானய்யாதங்கியிருந்த மலிவு விலை தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் அவரை ஒரு கௌரவமான வாடிக்கையாளராகக் கருதினர்....தங்கியிருந்த அறையில் இருந்த டி.வி. பெட்டியை அவர் திருடிக்கொண்டு போய்விட்டதை கண்டுபிடிக்கும்வரை.
இப்படி, அவர் திருடிய தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ அல்லது சிலவோ அல்ல. ஒரு குறிப்பிட்ட 18 நாளில் கோயில் நகரங்களான திருப்பதி, புட்டபர்த்தி மற்றும் ஷிமோகா மற்றும் பத்ராவதி ஆகியவற்றில் 21 தொலைக்காட்சிப் பெட்டிகளை திருடினார்.
34 வயதான இந்த நபர் கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், பெங்களூரு காவல்துறையால் மீட்கப்பட்ட 21 தொலைக்காட்சிப் பெட்டிகளை பார்த்து அசந்தவர்களுக்கு இன்னும் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில், இவரிடமிருந்து 50 தொலைக்காட்சிப் பெட்டிகளை மீட்டுள்ளது தமிழ்நாடு காவல்துறை. ஜூன், ஜூலை மாதங்களில், ஆந்திரபிரதேச காவல்துறை 70 தொலைக்காட்சிப் பெட்டிகளை நானய்யாவிடமிருந்து மீட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இவர் திரும்ப வருவார் என்ற எண்ணத்தில் ஷிமோகாவிலுள்ள விடுதியொன்று அவர் தங்கியிருந்த அறையை கூட திறக்கவில்லை. ஏனெனில் அந்த அறைக்கான வாடகையை அவர் முன்கூட்டியே செலுத்திவிட்டிருந்தார்," என்று வடக்கு பெங்களூரு போலீஸ் துணை கமிஷனரான சேத்தன் சிங் ரத்தோர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நானய்யா, எப்போது வேண்டுமானாலும் விடுதிக்குள் மிகப்பெரிய பையை எடுத்துக் கொண்டு செல்வார். "அவர் ஒருவேளை சிறிய பையுடன் அறைக்கு வந்துவிட்டால் அங்குள்ள தொலைக்காட்சிப் பெட்டியின் அளவை மதிப்பீடு செய்து, புதிய பையொன்றை எடுத்து செல்வார். அவர் விடுதியின் உள்ளேயும், வெளியிலும் சம்பந்தமற்ற காரணங்களுக்காக கடந்து செல்வார். ஆனால், விடுதியின் முகப்பில் உள்ளவர்களுக்கு அவர் எப்போது தொலைக்காட்சி பெட்டியுடன் வெளியேறினார் என்றும் அவர் திரும்ப வரவே மாட்டார் என்றும் தெரியாது'' என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தான் திருப்பதி கோவிலில் பிரார்த்தனை செய்ததாகவும், அருகிலுள்ள ஒரு விடுதியில் ஒரு அறையை பதிவு செய்ததாகவும் நானய்யா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் தனது பையில் எல்சிடி தொலைக்காட்சியைப் பெட்டியை எடுத்துக்கொண்டு அன்றிரவே அந்த விடுதியை விட்டு சென்றுவிட்டார். இம்மாத தொடக்கத்தில் புட்டபர்த்தியில் மீண்டும ஒரு சுற்று இதுபோல தொலைக்காட்சிப் பெட்டிகளை திருட சென்றார்.
இவர் பொதுவாக தான் திருடும் தொலைக்காட்சிப் பெட்டிகளை பழைய தொலைக்காட்சி பெட்டிகளை வாங்குபவர்களிடம் விற்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் அதுபோன்ற கடையின் உரிமையாளர் ஒருவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து தமிழக காவல்துறையினர் பெங்களூரு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், நானய்யா அடுத்த முறை தனது கடத்தல் பொருட்களை கடையொன்றில் விற்க சென்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
பெங்களூரு காவல்துறையினர் அவரை நீண்ட காலம் சிறையில் வைக்கவேண்டும் என்பதற்காக 21 வழக்குகளை நானய்யா மீது பதிவு செய்துள்ளனர்.
சுமார் பத்தாண்டுகளாக தாம் டி.வி. பெட்டி திருட்டில் ஈடுபட்டிருப்பதாக நானய்யா போலீசிடம் தெரிவித்தார். இந்த பத்தாண்டுகளில் அவர் எவ்வளவு டி.வி. பெட்டிகளைத் திருடியிருப்பார் என்று போலீஸ் கணக்கிடவில்லை.
"சமீபத்திய காலங்களில், பல தங்கும் விடுதிகள் தங்களின் திருடுபோன தொலைக்காட்சிப் பெட்டிகள் பற்றி காவல்துறையிடம் புகாரளிக்கவில்லை. ஏனெனில், அவற்றில் பெரும்பான்மையானவை பழையதாகவோ அல்லது விற்க சிரமமானதாகவும் இருந்ததே காரணம்" என்று ரத்தோர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்