பத்திரிக்கைகளின் நிராகரிப்புக் கடிதம் பெறுவதில் சாதனை படைத்தவர்!

பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் சத்யநாராயணா ஐயர். ஆனால், அவர் தன் பெயரை 'ரெக்ரெட் ஐயர்' என்று மாற்றிக்கொண்டார்.

பெங்களூரூவில் வாழும் ரெகிரெட் ஐயரை சந்தித்தார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

எழுத்தாளர், பதிப்பாளர், புகைப்படக் கலைஞர், ஊடகவியலாளர், கார்டூனிஸ்ட் என்று இவர் தம்மை வெவ்வேறு அடைமொழிகளில் அழைத்துக் கொள்கிறார்.

எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் மிக இளம்வயதிலேயே அவருக்கு தோன்றியது. 1970களில் கல்லூரியில் படித்துவந்த போது, பல இளைஞர்களுக்கு தோன்றும் கேள்வியான, `நான் யார்?` என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார் சத்யநாராயணா.

அது கல்லூரி இதழில் வெளியானது. அதுவே, தாம் ஊடகவியலாளராக மாறமுடியும் என்று அவர் நம்புவதற்குக் காரணமானது.

"பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு கடிதங்கள் எழுதத்துவங்கினேன். அதில் பல கடிதங்கள் பிரசுரமாகின."

அதில் உத்வேகம் கொண்ட அவர், கன்னட மொழியில் மிகவும் பிரபலமான மாலை பத்திரிக்கையான ஜனவானி என்ற பத்திரிக்கைக்கு பிஜப்பூர் நகரின் வரலாறு குறித்து ஒரு கட்டுரை எழுதி அனுப்பினார்.

சில நாட்களுக்கு பிறகு, `வருந்துகிறோம் கடிதம்` அவருக்கு வந்து சேர்ந்தது. அந்தக் கடிதத்தின் தொடக்கத்தில், பத்திரிக்கைக்கு கட்டுரை அனுப்ப விரும்பியமைக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் அதை வெளியிட முடியாமைக்கு வருத்தமும் தெரிவித்திருந்தார்.

"நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். ஆனால் மனதளவில் சோர்வடையவில்லை" என்று என்னிடம் அவர் கூறினார்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு, யாரும் கோராமலேயே கட்டுரைகள், கடிதங்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், கவிதைகளைக்கூட அவர் ஆங்கிலம் மற்றும் கன்னட நாளிதழ்களுக்கு அனுப்பி வைத்தார்.

அவர், பல கோவில்கள், சுற்றுலத்தளங்கள் மற்றும் பல்வேறு செய்திகள் குறித்து எழுதினார்.

அவரின் கடிதங்கள், பொதுமக்களின் குறைகள், மோசமான பேருந்து சேவைகள், குப்பைகள் குவிந்துகிடப்பது குறித்து இருந்தன.

"ஒரு பத்திரிக்கை ஆசிரியருக்கு ஏற்படக்கூடிய மோசமான கனவுகளின் உருவம் அவர்" என்கிறார் அவரின் செய்தியை பார்த்து வந்த மூத்த செய்தியாளர்.

அவரின் சில செய்திகள் வெளியிடப்பட்டாலும், பல செய்திகள் நிராகரிக்கப்பட்டன. சில ஆண்டுகளிலேயே 375 "வருந்துகிறோம் கடிதங்கள்" அவருக்கு வந்து சேர்ந்தன.

அவற்றில், இந்திய ஊடகங்கள் மட்டுமில்லாமல், சில சர்வதேச ஊடகங்களும் இருந்தன.

"வருந்துகிறோம் கடிதங்கள் என்னை சூழ்ந்தன. எதனால் என் கட்டுரைகள் வெளியாகவில்லை என்று எனக்கு புரியவே இல்லை. எந்த விஷயத்தை நான் இழக்கிறேன்? என்று யோசிக்கத் தொடங்கினேன். ஆனால், எந்த ஒரு புகைப்படக்காரருக்கோ, எழுத்தாளருக்கோ, அவர்களின் வேலையில் என்ன தவறு உள்ளது என்று விளக்க எந்த ஆசிரியரும் முயலவில்லை."

அவரின் `மோசமான` எழுத்துநடையே காரணம் என்கிறார் மூத்த ஊடகவியலாளரான நாகேஷ் ஹேக்டே. சத்யநாராயணா என்ற பெயரை மாற்றி, அவருக்கு ரெகிரெட் ஐயர் என்று பெயர் வைத்தவர் இவர்தான்.

"அவர் செய்திகளை திறமையாக தேடி கண்டறிவார். அதற்கான திறமைகள் அவரிடம் நிறைய உள்ளது. ஆனால், அந்த செய்தியை தொகுத்து எழுதும் திறமை அவரிடம் இல்லை." என்று ஹேக்டே என்னிடம் அண்மையில் தெரிவித்தார்.

பிரஜவானி என்ற செய்தித்தாளில், ஹேக்டே, அவரின் மிகப்பிரபலமான கட்டுரைகளை வாரம்தோறும் எழுதிவந்தார். அவர் ரெகிரெட் ஐயரிடமிருந்து வரும் கட்டுரைகளை தொடர்ந்து நிராகரிக்க வேண்டிய நிலை இருந்தது.

"சில நாட்களுக்கு இவரின் தொல்லையிலிருந்து தப்பிக்க, நான் அவரின் ஏதேனும் ஒரு படைப்பை வெளியிட்டுவிடுவேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

பிறகு, 1980ஆம் ஆண்டு ஒருநாள், ரெகிரெட் ஐயர் பிரஜவானி பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்றார். சமீபத்திலும் அவரின் கட்டுரை நிராகரிக்கப்பட்டது என்றும், தொடர்ந்து அவர் சேர்த்துவரும் `வருந்துகிறோம் கடிதங்கள்` குறித்து விளக்கினார்.

"அவர் கூறியதற்கு ஆதாரம் கேட்டேன். அடுத்தநாள், நூற்றுக்கணக்கான `வருந்துகிறோம் கடிதங்களுடன்` வந்துசேர்ந்தார் ரெகிரெட் ஐயர்."

தன்னுடைய அடுத்த கட்டுரையில், `ரெகிரெட் ஐயர்` குறித்து எழுதினார் ஹேக்டே.

"மற்றவர்களாக இருந்தால், இதை வெட்கப்படும் விஷயமாக பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் அந்த கடிதங்களை பெருமையாக காண்பித்தார்."

எப்போதும் நேர்மறையாக யோசிக்கும் இவர், தனக்கு எதிராக உள்ள விஷயங்களை சாதமாக மாற்றுவது எப்படி என தெரிந்துவைத்துள்ளார்.

"பத்திரிக்கை ஆசிரியர்கள், தனக்கு பல்வேறு புனைப்பெயர்கள் யோசித்து, கடைசியாக இந்த பெயரை தேர்வு செய்தனர்" என்கிறார் ஐயர். அப்போதுதான், 'வாளைவிட, பேனா முனைக்கு கூர்மை அதிகம்' என்று எனக்கு புரிந்தது என்று கூறுகிறார்.

பிறகு, அரசிதழில், தனது பெயரை முறைப்படி `ரெகிரெட் ஐயர்` என்று இவர் மாற்றிக்கொண்டார்.

"என் பெயரை பாஸ்போர்ட் மற்றும் வங்கிக்கணக்கிலும் மாற்றியுள்ளேன். என் திருமண அழைப்பிதழிலும் புதிய பெயரையே பயன்படுத்தினேன்."

"முதலில் மக்கள் என்னைப்பார்த்து சிரித்தனர். நான் ஒரு முட்டாள் என்று கூறினார்கள். என்னை இழிவுபடுத்தினார்கள். ஆனால், என்னுடைய தந்தை எனக்கு உத்வேகம் அளித்தார். என் முழு குடும்பமும் எனக்கு ஆதரவாக நின்றபோது, இந்த பூமியில் நடமாடும் மிகவும் அதிட்ஷ்டசாலி மனிதனாக என்னை உணர்ந்தேன்."

அவரின் இளமைக்காலங்களில் பெரும்பாலும், தந்தையின் பணத்திலேயே வாழ்ந்துள்ளார் ஐயர்.

"வாழ்வதற்கான செலவு குறைவே. நாங்கள் என் பெற்றோருடன் வாழ்ந்தோம், அவர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். என் பிள்ளைகளை பள்ளியிலும், கல்லூரியிலும் அவர்களே சேர்த்தார்கள்." என்றார்.

அவரின் கடிதங்களும், புகைப்படங்களும் பத்திரிக்கைகளில் வரத்தொடங்கியதும், அவரின் வாழ்க்கை மாற ஆரம்பித்தது.

சரியாக பணியாற்ற வேண்டிய வழியை அவர் கண்டறிந்ததும், அவரின் கட்டுரைகளை கர்நாடகத்திலுள்ள பல ஆங்கிலம் மற்றும் கன்னட பத்திரிக்கைகள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கின.

"நான் ஒன்-மேன் ஆர்மி போல. கேமரா, பெனா, ஸ்கூட்டர் மற்றும் தலைக்கவசத்துடன் இருப்பேன். சட்டைகளில், ரெகிரெட் ஐயர் என்ற பொறிக்கப்பட்ட ஆடைகளையும் அணிந்திருப்பேன்."

சில காலங்களுக்குப் பிறகு, அவரின் மனைவியும் பிள்ளைகளும், `ரெகிரெட்` என்ற வார்த்தையை அவர்களின் பெயர்களிலும் சேர்த்துக்கொண்டனர்.

இவரை, கர்நாடகத்தின் `முதல் குடிமக்கள் பத்திரிக்கையாளர்` என்று கூறலாம், ஏன் இந்தியாவிலேயே முதல் மனிதர் என்று கூட குறிப்பிடலாம் என்கிறார் ஹேக்டே.

"எங்களுக்கு அவர் ஒரு பெரிய பிரச்சனை. ஆனால், வாசகர்களுக்கு அவர் மிகவும் உயர்ந்த ஒருவர். பத்திரிக்கைகளில், மக்கள் இத்தகைய சின்னஞ்சிறு விஷயங்களையே அதிகம் கவனிப்பார்கள். இவரின் புகைப்படங்களும், கட்டுரைகளும் இத்தகையவையாகவே இருந்ததால், அவர் மிகவும் வேகமாகவே பிரபலமாகிவிட்டார்."

"அவரின் மிகப்பெரிய பலமே, தொடர்ந்து வலியுறுத்தும் திறன்தான்" என்கிறார் ஹேக்டே.

"மற்ற செய்தியாளர்கள், சம்மந்தப்பட்ட செய்தியை சேகரித்துவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால் இவர் தாமதிப்பார். தன்னுடைய செய்தியை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். குப்பைத்தொட்டிகள் அருகில் மறைந்து உட்கார்ந்திருந்துகூட சிலநேரங்களில் பல துணுக்கு தகவல்களை எடுத்துள்ளார். அவர் பிரபலமான பிறகு, அதிகாரிகள் அவரைக் கண்டு அஞ்ச ஆரம்பித்தனர்."

"அவர் எல்லா இடங்களுக்கும் கேமராவுடனேயே சென்றார். பொய்யான பிச்சைக்காரர்கள், மரம் விழுந்துகிடப்பது, காவல்துறையின் அராஜகங்கள், குழாய்நீர் வழிதல், குப்பைகள் சாலைகளில் சிதறிக் கிடப்பது என பல்வேறு புகைப்படங்களை எடுத்தார்."

இவ்வளவு நிராகரிப்புகள் வந்தபோதும், அவர் மனம்தளராமல் இருந்தார்.

"சர்வதேச அளவில், 'வருந்துகிறோம் கடிதங்களை' சேகரிப்போருக்கான ஒரு அமைப்பை உருவாக்க நான் முயன்றேன். ஆனால் ஒருவர்கூட என்னோடு இணையவில்லை. யாருக்குமே தான் ஒரு தோல்வியடைந்தவர் என்று கூறிக்கொள்வதில் விருப்பமில்லை பாருங்கள்."

ரெகிரெட் ஐயர் என்று பெயரை மாற்றிக்கொண்டதற்கு என்றாவது வருத்தப்பட்டுள்ளீர்களா என்று கேட்டேன்.

உடனேயே அவரிடமிருந்து, "இல்லை" என்று பதில் வந்தது. அதிக வருந்துகிறோம் கடிதங்களை சேகரித்தவன் என்று வரலாற்றில் நான் அறியப்படுவேன் என்று தெரிவித்தார்.

"ஒருநாள் வருந்துகிறோம் கடிதங்களே இல்லாத நிலைவரும். இந்த டிஜிட்டல் உலகத்தில், வருந்துகிறோம் கடிதம் என்றால் என்னவென்று மக்கள் கேட்பார்கள். உலகிலுள்ள அனைத்து கணினியும் ஒருநாள் செயலிழந்து நிற்கும். அப்போதும் என் அலமாரியிலுள்ள `வருந்துகிறோம் கடிதங்கள்` அப்படியே நிலைத்திருக்கும்." என்று கூறுகிறார் ரெகிரெட் ஐயர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :