You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி பெண்கள் கார் ஓட்டினால் இந்திய, இலங்கை பணியாளர்கள் பாதிப்படைவார்களா?
சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு மன்னர் சல்மானின் தீர்மானம் சர்வதேச ரீதியில் வரவேற்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் ஓட்டுனராக பணிபுரியும் தெற்காசிய நாட்டவர்களிடம் தங்கள் தொழில் ரீதியாக ஒருவித அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
உலகில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளிக்காத ஒரே நாடாக கருதப்படும் சௌதி அரேபியாவில், அடுத்த வருடம் ஜுன் மாதம் முதல் பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சௌதி அரேபியாவில் அநேக நிறுவனங்களிலும் வீடுகளிலும் தெற்காசிய நாட்டவர்கள் தான் ஓட்டுனர்களாக பணிபுரிகின்றனர். இப்படியான சூழலில், பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டு உள்ளதால் தங்களில் அநேகமானோர் வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக வீட்டு வாகன ஓட்டுனர்கள் அச்சப்படுகிறார்கள்.
சௌதி அரேபியாவில் தற்போது 8 லட்சம் வெளிநாட்டவர்கள் தொழில் புரிவதாக கூறப்படுகின்றது. இதில் பெரும்பாலானோர் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
"அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் படி 1,90,000 இலங்கையர்கள் செளதியில் பணியாற்றுகின்றார்கள். சுமார் 90,000 பேர் வீட்டு வேலைகளுடன் தொடர்புடையவர்கள். அவற்றில் அநேகமானோர் வீட்டுப் பணிப் பெண்கள் என அறியமுடிகின்றது" என்கிறார் செளதிக்கான இலங்கை தூதர் அஸ்மி தாசிம்.
"சௌதி அரேபியாவில் நிறுவனங்களிலும் வீடுகளிலும் வெளிநாட்டவர்கள் ஓட்டுனர்களாக தொழில் புரிகின்றனர். பெண்கள் வாகனம் ஓட்ட தொடங்கினால் நிறுவனங்களில் தொழில் புரியும் ஓட்டுனர்கள் பாதிப்படைய மாட்டார்கள். வீடுகளில் ஓட்டுனராக பணி புரிபவர்களுக்கே பாதிப்பாக அமையும்" என அஸ்மி தாசிம் சுட்டிக்காட்டுகின்றார்.
சௌதி அரேபிய பெண்கள் அநேகமானவர்களிடம் வாகனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் காணப்பட்டாலும், அது போன்று அநேகமான பெண்களிடம் மத ரீதியான மற்றும் பழமை வாதம் ஆகியவற்றின் அடிப்படையில் வாகனம் ஓட்டுவற்கு எதிரான கருத்துக்களும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
அது மட்டுமல்ல வாகனம் ஓட்ட தெரிந்திருந்தாலும் ஓட்டுனரை வேலைக்கு அமர்த்துவது தங்கள் அந்தஸ்த்தை காட்டுவதாக அவர்கள் உணரக்கூடியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள் வாகனம் செலுத்த அனுமதிக்கப்பட்டால் ஓட்டுனர் தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு அநேகமான வீட்டு உரிமையாளர்கள் வரக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றார் அந்நாட்டில் உள்ள வீட்டு கார் ஓட்டுனராக பணியாற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர்.
"நான் வேலை செய்யும் நபருக்கு இரு மனைவிகள் உண்டு. இளைய மகள் மருத்துவ கல்வி பயிலுகின்றார். 2வது மனைவி ஆடைத்தொழிற்சாலைகளின் உரிமையாளராவார். அவரும் முதல் மனைவியின் மகளும் வாகனம் செலுத்த தயாராகி வருகின்றனர். இதனால் முதல் மனைவிக்கு மட்டும்தான் ஓட்டுனர் சேவை தேவைப்படும் என கருதுகிறேன்.
சம்பளத்திற்கு வீட்டு ஓட்டுனர்களை அமர்த்துவதை விட தாங்களே வாகனம் செலுத்தலாம் என நினைப்பவர்களும் உள்ளனர். இவ்வாறான நிலையில் வீட்டு கார் ஓட்டுனர்கள் பலர் வேலை இழக்க நேரிடும் " என்றும் அவர் கூறுகின்றார்
அதேநேரம் மற்றொருவர், தன்னுடைய முதலாளி, அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட வீட்டில் எந்தவொரு பெண்ணையும் வாகனம் செலுத்த அனுமதிக்க மாட்டார் என நம்புகின்றார்
மூத்த மகளுக்கான கார் ஓட்டுனராக பாகிஸ்தான் நாட்டவர் பணியாற்றுகின்றார். "நான் அறிந்த வரை இப்பெண்களின் தந்தை, பெண்கள் வாகனம் செலுத்துவதை விரும்பவும் மாட்டார். அதற்கு அனுமதிக்கவும் மாட்டார். இந்நிலையில் பெண்களுக்கு வாகனம் செலுத்த அனுமதிப்பது எங்களுக்கு பெரும் பாதிப்பாக அமையாது என நம்புகின்றேன்" என்றார்.
சௌதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்களின் படி சுமார் 10 ,000 இலங்கையர்கள் வீட்டு கார் ஓட்டுனர்களாக பணியாற்றுவதாக அறியமுடிகின்றது.
இலங்கையில் ஓட்டுனர்களுக்கு தட்டுப்பாடு உள்ளதாக சுட்டிக் காட்டும் சௌதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதர் அஸ்மி தாசிம் "சௌதி அரேபியாவில் வீட்டு கார் ஓட்டுனர்களாக பணி புரிய வேண்டும் என்ற ஆர்வம் தற்போது இலங்கையர்களிடம் இல்லை" என்கின்றார்
"நிறுவனங்களில் பணி புரியும் ஓட்டுனர்களுக்கான உரிமைகள் , சலுகைகள் வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு கிடைப்பது இல்லை. அவர்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றது. இது போன்ற காரணங்களினால் இலங்கையர்கள் குறிப்பாக வீட்டு கார் ஓட்டுனர் வேலை வாய்ப்பு தொடர்பாக ஆர்வம் காட்டுவதில்லை " என்றும் அவர் கூறுகின்றார்.
தமது நாட்டுக்கான தூதரின் இந்த கருத்தை இங்கு பணியாற்றும் வீட்டு கார் ஓட்டுனர்களான இலங்கையர்கள் பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
"சௌதி அரேபியாவில் கணவன் இல்லாமல் மனைவி பொது இடங்களில் நடமாட முடியாது என்ற சட்டம் இருப்பதாகவும் பெண்களுக்கு வாகனம் செலுத்த அனுமதியளிக்கப்பட்டால் அந்த சட்டம் எந்தளவு தாக்கம் செலுத்தும் என்பதில் தெளிவு இல்லை" என மற்றொரு ஓட்டுனர் தெரிவிக்கின்றார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :