இலங்கை: சைகை மொழிக்கு தொடர்பாடல் மொழி அங்கீகாரம்

இலங்கையில் சைகை மொழிக்கும் தொடர்பாடல் மொழி அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா இது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அங்கவீனம் தொடர்பான தேசிய கொள்கையின் கீழ், சைகை மொழி விசேட தேவையுடைய நபர்களின் தொடர்பாடல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சைகை மொழிக்கு தொடர்பாடல் மொழி அங்கீகாரம் வழங்கும் வகையில் சட்ட வரைவு தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா பிரேரணையை முன் வைத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் செவிப்புலனற்று இருப்பதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சின் தகவல்களின் மூலம் தெரியவருகின்றது.

சைகை மொழிக்கு தொடர்பாடல் மொழி அங்கீகாரம் கிடைப்பது அவர்களின் தொடர்பாடலுக்கு மட்டுமல்ல கல்வி மற்றும் அரச துறைகளில் தொழில் வாய்ப்புகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :