இலங்கை: அரசு தேர்வு எழுதும்போது முகத்திரைக்கு தடை ஏன்?

இலங்கையில் அரசாங்க பரீட்சையொன்றின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறும் மாணவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதி கிடைத்தாலும் பெறுபேறுகளை இடைநிறுத்தம் செய்யும் அதிகாரம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு இருப்பதாக பரீட்சைகள் ஆணையர் டப்ளியு. ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழக உயர்கல்வியை தீர்மானிக்கும் உயர்தர பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாச்சார ரீதியான உடைகளுடன் பரீட்சை எழுத அனுமதியளிப்பது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்தினால் சில அறிவுறுத்தல்களும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர் ஒருவர் நுழையும் முன்பு தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்" என்றார்.

"முகத்தை மூடி வரும் பரீட்சார்த்திகளின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலே சகல பரீட்சை மண்டபங்களிலும் பெண் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகத்திரையை நீக்கி அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்" என்று பரீட்சைகள் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு பரீட்சார்த்தி ஒன்றுக்கு மேற்பட்ட வினா தாள்களுக்கு விடை எழுத வேண்டிய சந்தர்ப்பத்தில் சகல சந்தர்ப்பங்களிலும் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஆள் மாறாட்டத்தை தடுக்க முடியும். ஏனைய பரீட்சார்த்திகளுக்கும் நியாயத்தை வழங்க முடியும் " என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஏற்கனவே பரீட்சைகளின்போது, சில மாணவர்கள் முகத்திரைக்குள் சிறியரக மைக்ரோ போன்கள், நவீனரக இலத்திரனியல் உபகரணங்களை மறைத்து வைத்து பரீட்சை மோசடியில் ஈடுபட்டிருந்ததது தொடர்பாக கிடைத்த தகவல்களை கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

புளூடூத் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டது கடந்த காலங்களில் இடம் பெற்றுள்ளதை ஒப்புக் கொண்டுள்ள பரீட்சைகள் ஆணையர் டப்ளியு.ஜே புஸ்பகுமார, இதுபோன்ற செயல்பாடுகளை தடுப்பதற்கு நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது அந்நடவடிக்கை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

இந்நடவடிக்கைக்கு கலாச்சார ரீதியான காரணங்களை முன்வைத்து ஒரு பிரிவினரிடமிருந்து எதிர்ப்புகள் எழவில்லையா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "அந்த பிரிவினர் இந்த காரணங்களை விளங்கிக் கொண்டுள்ளனர் " என குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :