You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யாழ் நல்லூர் துப்பாக்கிச்சூடு: தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் போலிஸாரிடம் சரண்
நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று காலை யாழ் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான பின்வீதி வழியாக பயணம் செய்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது.
அந்த நாற்சந்தியில் நிலவிய வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தி நீதிபதியின் கார் தடங்கலின்றி செல்வதற்குரிய கடமையில் ஈடுபட்டிருந்த அவருடைய மெய் பாதுகாவலராகிய சார்ஜன்ட் சரத் பிரேமச்சந்திரவின் உடைமையில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் நீதிபதியின் காரை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதில் பிரேமச்சந்திர வயிற்றில் படுகாயடைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்:
இந்த சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்காக காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையிலேயே அந்நபர் யாழ் காவல்துரையினரிடம் சரணடைந்துள்ளார்.
இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட சார்ஜன்ட் பிரேமச்சந்திர, சப் இன்ஸ்பெக்டராக அரசாங்கத்தினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிலாபத்தில் அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக அவருடைய சடலம் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் நாளை புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், நீதிபதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனக்கோரி வடக்கிலும் கிழக்கிலும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பல இடங்களில் ஆர்பாட்டப் பேரணி நடத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்